5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு அவர் வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5120. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5121. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்,) என்னிடம், "நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்துதவுக!" என்று அறிவுறுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 43 ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முகமலர்ச்சி காட்டுவது விரும்பத்தக்கதாகும்.
5122. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 44 தடை செய்யப்படாத விஷயங்களில் பிறருக்காகப் பரிந்து பேசுவது விரும்பத் தக்கதாகும்.
5123. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
தேவையுடையவர் யாரேனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், தம்முடன் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி, "(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்;அல்லாஹ் தன் தூதருடைய நாவால் தான் விரும்பியதைத் தீர்ப்பளிக்கட்டும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 45 நல்லோருடன் நட்புகொள்வதும் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகியிருப்பதும் விரும்பத்தக்கவையாகும்.
5124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது, கஸ்தூரி வியாபாரியின் நிலையையும், (உலைக்களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரி வியாபாரி, ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ, ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்;அல்லது (அவனிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 46 பெண் குழந்தைகளுக்கு நன்மை செய்வதன் சிறப்பு.
5125. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் என்னிடம் (ஏதேனும் தரும்படி) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை.
பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் எழுந்து சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5126. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் ஏழைப்பெண் தன்னுடைய இரு பெண்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டுசென்றார்.
அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவருடைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்". அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 45
5127. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 47 தமது குழந்தை இறந்தும் நன்மையை எதிர்பார்(த்துப் பொறுமை கா)ப்பவரின் சிறப்பு.
5128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் நரகத்தில் நுழையமாட்டார்; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5129. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், "உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால்,அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?" என்று கேட்டார். "இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
5130. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவே,எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள்" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
(ஒரு நாள்), "உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் பிள்ளைகளில் மூன்று பேரை இழந்துவிடுகிறாரோ அவருக்கு அப்பிள்ளைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா?" என்று (மூன்றுமுறை திரும்பத்திரும்பக்) கேட்க, "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும் தான்" என்று (மும்முறை) நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 45
5131. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவ்வாறே, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "பருவ வயதை அடையா மூன்று பிள்ளைகளை" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5132. அபூஹஸ்ஸான் (முஸ்லிம் பின் அப்தில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், "என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்துவிட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் ஒன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டு, "குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். -(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுவைத் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம் என்றார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5133. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (உடல் நலமில்லாத) இந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார். "மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று சொன்னார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5134. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன்னுடைய ஆண் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவன் உடல் நலிவுற்றுள்ளான். இவனுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன். (இதற்கு முன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 48 அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும் போது, அவர்மீது தன் அடியார்களுக்கும் நேசத்தை ஏற்படுத்துகிறான்.
5135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதரை நேசிக்கிறேன். நீரும் நேசிப்பீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில், "அல்லாஹ் இன்ன மனிதரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
அவ்வாறே, அல்லாஹ் ஓர் அடியார்மீது கோபம் கொள்ளும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளேன். நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவர்மீது கோபம் கொள்கிறார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள்,விண்ணகத்தாரிடையே, "அல்லாஹ் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளான். ஆகவே, நீங்களும் அவர்மீது கோபம் கொள்ளுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவர்மீது கோபம் கொள்வார்கள். பிறகு பூமியில் அவர்மீது கோபம் ஏற்படுத்தப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் கோபத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. (நேசத்தைப் பற்றிய குறிப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது.)
அத்தியாயம் : 45
5136. சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு ஹஜ்ஜின்போது) அரஃபா பெருவெளியில் இருந்தோம். அப்போது (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களைக் கடந்துசென்றார்கள். அவர்கள் (அந்த ஆண்டின்) ஹாஜிகளுக்குத் தலைவராக இருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து அவரை உற்றுப் பார்த்தனர்.
நான் என் தந்தை (அபூஸாலிஹ்) அவர்களிடம், "தந்தையே! (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்களை இறைவன் நேசிப்பதாகவே நான் கருதுகிறேன்" என்று சொன்னேன். என் தந்தை "அது ஏன்?" என்று கேட்டார்கள். நான், "மக்கள் மனதில் அவருக்கிருக்கும் நேசத்தின் அடிப்படையிலேயே (நான் கூறுகிறேன்)" என்றேன்.
அப்போது என் தந்தை, "நீ சொன்னது சரி தான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 49 உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும்.
5137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5138. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனிதர்கள் வெள்ளி மூலகங்களையும் பொன் மூலகங்களையும் போன்றவர்கள். அறியாமைக்காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களே; மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை (உடலுக்குள் வந்த பின்பு) பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.
இந்த ஹதீஸை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45