5039. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் (இவ்வுலகில்) அநீதி இழைப்பவனுக்கு (விட்டுக்கொடுத்து) அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால், அவனைத் தப்பவிடமாட்டான்" என்று கூறிவிட்டு, "அநீதி இழைத்த ஊர்(க்காரர்)களைப் பிடிக்கும்போது இவ்வாறே உம்முடைய இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி வதைக்கக்கூடியது; கடுமையானது" (11:102) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 16 அநீதியிழைத்த சகோதரனுக்கும் அநீதிக்குள்ளான சகோதரனுக்கும் உதவுதல்.
5040. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது "அந்த முஹாஜிர்" அல்லது "முஹாஜிர்கள்", "முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, "என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி செய்யட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5041. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("பனூ முஸ்தலிக்" எனும்) ஓர் அறப்போரில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரை (விளையாட்டாக)ப் புட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, "அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார். அந்த முஹாஜிர், "முஹாஜிர்களே! (உதவிக்கு வாருங்கள்)" என்று அழைத்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து), "இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (இனமாச்சரியங்களைத் தூண்டுகின்ற) இக்கூப்பாடுகள் நாற்றம் வீசக்கூடியவை" என்று கூறினார்கள்.
அப்போது (மதீனாவாசியான நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு "அப்படியா அவர்கள் (முஹாஜிர்கள்) செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச்சென்றால் (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை நிச்சயமாக அங்கிருந்து வெளியேற்றி விடுவர்" என்று (அன்சாரிகளுக்காகப்) பேசினார்.
(இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தோழர்களுக்கும் எட்டியபோது) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள். முஹம்மத் தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5042. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அந்த அன்சாரி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமெனக் கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இத்தகைய (இன மாச்சரியங்களைத் தூண்டும்) கூப்பாடுகளை விடுங்கள். இவை நாற்றம் வீசக்கூடியவை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 17 இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் பரிவு காட்டுவதும் தோள் கொடுத்து ஒத்துழைப்பதும்.
5043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுசேர்க்கிறது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களின் நிலையானது, ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால், அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5045. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனுக்குத் தலையில் சுகவீனமேற்பட்டால் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டுவிடுகிறது. அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்திருக்கின்றன.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனது கண்ணுக்கு நோய் ஏற்பட்டால், உடல் முழுவதும் நோய்வாய்ப்படுகிறது. அவனது தலைக்கு நோய் ஏற்பட்டால், உடல் முழுவதும் நோய் காண்கிறது.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5046. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளும் இருவரில் முதலில் ஏச ஆரம்பித்தவரையே குற்றம் சாரும்; அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாத வரை!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.
5047. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5048. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 21 அல்லாஹ் ஒருவரது குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், மறுமையிலும் அதை அவன் மறைப்பான் எனும் நற்செய்தி.
5049. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன் மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 22 அருவருப்பாகப் பேசும் ஒருவரிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காக அவரிடம் ஒருவர் கனிவாகப் பேசுவது.
5051. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை உள்ளே வரச்சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்" என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிட(மு)ம் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?" என்று கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில், மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் (வார்த்தைகளில் சிறிது வேறுபாட்டுடன்) வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 23 நளினத்தின் சிறப்பு.
5052. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மையை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5054. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5055. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5056. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5057. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச்சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) நளினத்தைக் கையாள்வாயாக" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 24 கால்நடைகள் முதலியவற்றைச் சபிப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5058. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்தபோது, அன்சாரிகளில் ஒரு பெண் ஒட்டகமொன்றின்மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தபோது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு, அதை விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபத்திற்குள்ளானதாகும்" என்று கூறினார்கள்.
அதையடுத்து அந்த ஒட்டகம் மக்களிடையே நடந்து செல்வதையும், அதை எவரும் சீண்டாமலிருந்ததையும் இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45