பாடம் : 6 தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4793. தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இணைவைப்பாளர்களுடன்) போரிட்ட அந்த நாட்களில் ஒன்றில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி), சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4794. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின்போது ("இன்றைய இரவில் தனியாகச் சென்று எதிரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என உளவு பார்ப்பதற்கு முன்வருபவர் யார்?" என்று தம் தோழர்களுக்கு) அழைப்பு விடுத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்கு முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்த போது (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்தபோது அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4795. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்களுடன் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) "ஹஸ்ஸான்" கோட்டையில் இருந்தோம். அப்போது உமர் பின் அபீசலமா ஒருமுறை எனக்காகத் தலையைத் தாழ்த்துவார். நான் (எதிரிகளின் திசையில்) பார்ப்பேன். மறுமுறை நான் தலையைத் தாழ்த்திக்கொள்வேன். உமர் பின் அபீசலமா (எதிரிகளின் திசையில்) பார்ப்பார். என் தந்தை (ஸுபைர்) அவர்கள் குதிரை மீதமர்ந்து பனூ குறைழா (யூதர்களை) நோக்கி ஆயுதத்துடன் கடந்து சென்றபோது, அவர்களை நான் அறிந்துகொண்டேன்.
அப்துல்லாஹ் பின் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
பின்னர் (ஒரு முறை) அதைப் பற்றி நான் என் தந்தையிடம் பேசியபோது, "அன்பு மகனே! அப்போது என்னை நீ பார்த்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். கவனமாகக் கேள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து, "என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்" என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அகழ்ப்போர் தினத்தன்று நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்கள் - அதாவது நபி (ஸல்) அவர்களின் துணைவியர்- இருந்த கோட்டையில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில் அப்துல்லாஹ் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தெரிவித்த செய்தி இடம்பெறவில்லை. ஹிஷாம் பின் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே அந்தக் குறிப்பு இடையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 44
4796. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி),தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும் "ஹிரா" மலைமீது இருந்தார்கள். அப்போது அந்தப் பாறை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று கூறினார்கள். - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹிரா" மலைமீது இருந்தபோது மலை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிராவே! அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மலைமீது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி),ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4797. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உன் பெற்றோர் "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172)என்பதில் அடங்குவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூபக்ர் (ரலி) அவர்களையும் ஸுபைர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4798. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் உன் பெற்றோர், "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172) எனும் இறை வசனத்தில் அடங்குவர் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 7 அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4799. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்கள்தான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4800. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யமன் (ஏமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்கு நபிவழியையும் இஸ்லாத்தையும் கற்றுக்கொடுப்பதற்காக எங்களுடன் ஒரு மனிதரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களின் கையைப் பிடித்து, "(இதோ) இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். (இவரை அழைத்துச் செல்லுங்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4801. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்ரான் (யமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நம்பிக்கைக்குரிய மனிதர் ஒருவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்பகத் தன்மையில் மிகவும் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுடன் நான் உறுதியாக அனுப்புவேன்" என்று சொன்னார்கள். அப்போது மக்களில் பலர் (அந்த "அமீன்" எனும் பெயருடன் அழைப்பாளராய்ச் செல்லும் சிறப்பு தமக்குக் கிட்டாதா என) தலையை உயர்த்தி (பேரார்வம்) காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 8 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4802. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்கள் குறித்து, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பகல் வேளையில் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேசவில்லை. (மௌனமாக நடந்தோம்.) "பனூ கைனுகா" கடைவீதி வந்தது.
பிறகு அங்கிருந்து திரும்பி (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் குடிசைக்கு வந்து, "இங்கே அந்தப் பொடிப் பையன் (அதாவது ஹசன்) இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?" என்று கேட்டார்கள்.
ஹசனின் தாயார், அவரை நீராட்டி நறுமண மாலையை அணிவிப்பதற்காகவே தாமதப்படுத்துகிறார் என்றே நாங்கள் எண்ணினோம். நீண்ட நேரம் கடந்திருக்கவில்லை. அதற்குள் குழந்தை (ஹசன்) ஓடிவந்தார். உடனே நபியவர்களும் அவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4804. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோள்மீது ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 44
4805. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோள்மீது வைத்துக்கொண்டு, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4806. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களையும் (அவர்களுடைய பேரர்களான) ஹசன், ஹுசைன் (ரலி) ஆகியோரையும் அவர்களது கறுப்பு வெள்ளைக் கோவேறு கழுதையில் ஏற்றி அழைத்து வந்து, நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தேன். இதோ இவர் (நபிக்கு) முன்பக்கத்திலும் இதோ இவர் (நபிக்கு) பின்பக்கத்திலும் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 9 நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரின் சிறப்புகள்.
4807. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்புநிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள்;பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபி (ஸல்) அவர்களுடன் நுழைந்துகொண்டார்கள்; பிறகு (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள். பிறகு (மருமகனும் தமது வீட்டில் வளர்ந்தவருமான) அலீ (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்கள்.
பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (33:33) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 10 ஸைத் பின் ஹாரிஸா (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4808. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடம் நீதியானது" (33:5) எனும் இறைவசனம் அருளப்படும்வரை, நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை, ஸைத் பின் முஹம்மத் (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4809. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி (ஷாம் நாட்டுக்கு) ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் (இளம் வயதைக் காரணம் காட்டி) உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறை கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) நின்று, "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தை (ஸைத்-ரலி)யின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். அவருக்குப்பின் மக்களிலேயே இவர் (உசாமா) என் அன்புக்குரியவர் ஆவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4810. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபடி, "(இப்போது) இவரது தலைமையைக் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல!) இவருக்குமுன் இவருடைய தந்தை (ஸைத்) அவர்களின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அதற்குத் தகுதியானவராகவே இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவரும் அதற்குத் தகுதியானவரே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். இவர் தொடர்பாக உங்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், இவர் உங்களில் தகுதியானவர்களில் ஒருவராவார்" என்று உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைக் குறித்துக் கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 11 அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4811. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், "நானும் நீங்களும் இப்னு அப்பாஸும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்கள் ஒரு பயணத்தை முடித்துத் திரும்பியபோது) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "ஆம்" என்றார்கள். அப்போது (அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸையும்) வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீ முளைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4812. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு (ஊருக்குள்) வரும்போது, அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களால் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்கப் படுவார்கள். இவ்வாறு ஒருமுறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது நான் முந்திக்கொண்டு அவர்களிடம் சென்றேன். உடனே அவர்கள் என்னை (தமது வாகனத்தில்) முன்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர் அங்கு கொண்டுவரப்பட்டார். அவரைத் தமக்குப் பின்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தவாறு மதீனாவிற்குள் நுழைந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44