4780. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில் "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் யாரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர்.
மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் எங்கே?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலி ஏற்பட்டுள்ளது" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது, அவருடைய கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.
உடனே அவரது கண் அதற்குமுன் வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகி விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மைப் போன்று அவர்களது (ஒரே இறைவனை ஏற்றுப் பணிபவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடுவேன்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து, (அதை அவர்கள் ஏற்கும்பட்சத்தில்) அவர்கள்மீது விதியாகின்ற, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4781. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது.
அப்போது அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே!" என்று (வருத்தத்துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றிகொள்ளச்செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாளை "(முஸ்லிம்களின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன்"; அல்லது "ஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்". "அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்"; அல்லது "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்". அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்" என்று கூறினார்கள்.
நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் (வந்து) எங்களுடன் இருந்தார்கள். அப்போது மக்கள், "இதோ அலீ (வந்துவிட்டார்)" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியை அலீ (ரலி) அவர்களிடமே கொடுத்தார்கள். அவர்களுக்கே அல்லாஹ் வெற்றியளித்தான்.
அத்தியாயம் : 44
4782. யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது, அவர்களிடம், ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைத் அவர்களே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டுள்ளீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளீர்கள். அவர்களுடன் சேர்ந்து அறப்போர்களில் கலந்துகொண்டுள்ளீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள். ஸைதே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். ஸைதே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "என் சகோதரர் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு வயது அதிகமாகிவிட்டது; எனது காலம் கழிந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட சில ஹதீஸ்களை நான் மறந்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்கு அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அறிவிக்காதவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு என்னைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள "கும்மு" எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, "இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.
பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்" என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்" என்று கூறினார்கள்.
அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் "அவர்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும்,ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)" என்று பதிலளித்தார்கள்.
ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(அவற்றில் ஒன்று) அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. யார் அதைப் பெற்று அதனைக் கடைப்பிடிக்கிறாரோ அவர் நேர்வழியில் இருப்பார். யார் அதைத் தவறவிடுகிறாரோ அவர் வழிதவறிவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4783. மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று, "தாங்கள் பல நன்மைகளைக் கண்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள்"என்று கூறினோம்" என ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கிறது.
ஆயினும் அதில், "கவனியுங்கள். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதமாகும். அது அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில், "நபியவர்களின் குடும்பத்தார் யார்? அவர்களுடைய துணைவியரா?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு பெண் ஓர் ஆணுடன் குறிப்பிட்ட சில காலம் (மனைவியாக) இருப்பாள். பின்னர் அவளை அவன் மணவிலக்குச் செய்துவிட்டால், அவள் தன் தந்தையிடமோ அல்லது தன் குடும்பத்தாரிடமோ திரும்பிச் சென்றுவிடுவாள். நபியவர்களுடைய குடும்பத்தார் அவர்களுடைய மூல உறவினரும் அவர்களுக்குப்பின் தர்மம் பெறுவது தடை செய்யப்பட்ட அவர்களுடைய தந்தை வழி உறவினர்களுமே ஆவர் என்று பதிலளித்தார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4784. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம், "நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால், "அல்லாஹ் அபுத் துராபை சபிக்கட்டும்! என்று கூறுவீராக" என்று சொன்னார்.
அதற்கு நான், "(தம் பெயர்களில்) "அபுத் துராப்" (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அந்த ஆளுநர், "அந்தக் கதையை எமக்குச் சொல்வீராக. ஏன் அபுத்துராப் என (அலீ) பெயர் சூட்டப்பெற்றார்?" என்று என்னிடம் கேட்டார்.
நான் பின்வருமாறு பதிலளித்தேன்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்தார்கள். அப்போது (மருமகன்) அலீ அவர்கள் வீட்டில் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் "எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே,அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்" என்று பதிலளித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பார்" என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயிடம் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, "அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள்"என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 5 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்பு.
4785. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), "இரவில் என்னைக் காவல் காப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் வேண்டுமே?" என்று கூறினார்கள்.
அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். வந்தவர், "அல்லாஹ்வின் தூதரே! (நான்தான்) சஅத் பின் அபீவக் காஸ், தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்" என்று கூறினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அவர்களது குறட்டைச் சப்தத்தைக் கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்.
அத்தியாயம் : 44
4786. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), "இரவில் எனக்குக் காவல் இருப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் இருக்க வேண்டுமே!" என்று கூறினார்கள்.
இவ்வாறே நாங்கள் இருக்கும்போது ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். வந்தவர், "(நான் தான்) சஅத் பின் அபீவக்காஸ்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதற்காக வந்தீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் (ஆபத்து) நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். அவர்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்" என்று பதிலளித்தார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (நிம்மதியாக) உறங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யார் அது?" என்று நாங்கள் கேட்டோம் எனக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறங்காமல்) கண் விழித்திருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4787. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்காகவும் (அர்ப்பணிப்பதாகக்) கூறிய தில்லை. ஏனெனில், உஹுதுப் போர் நாளில் "சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று சஅத் (ரலி) அவர்களிடம் கூறலானார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4788. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ("என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று) கூறி (போர்புரிய உற்சாக மூட்டி)னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள். இணைவைப்பாளர்களில் ஒருவன் முஸ்லிம்களை (நெருப்பு போல) தாக்கிக் கொண்டிருந்தான். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!" என்று கூறி (உற்சாகமூட்டி)னார்கள்.
நான் முனை பொருத்தப்படாத அம்பொன்றை எடுத்து அவனது விலாப்புறத்தில் தாக்கினேன். அவன் கீழே விழுந்தான். அவனது (ஆடை விலகி) மறைவிடங்கள் வெளியே தெரிந்தன. (எதிரி வீழ்த்தப்பட்டதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள்,தம் கடை வாய்ப்பற்கள் தெரிய சிரித்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 44
4789. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:)
(என் தாயார்) உம்மு சஅத், நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்;உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் "உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)" என்று கூறினார்.
இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமுற்று விட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், "மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்" என்று தொடங்கி, "உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்துகொள்" (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.
அடுத்து (ஒரு போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் போர்ச் செல்வங்கள் கிடைத்தன. அவற்றில் வாள் ஒன்றும் இருந்தது. அதை நான் எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இந்த வாளை எனக்குப் போர்ச் செல்வத்தின் சிறப்புப் பரிசாகத் தாருங்கள். எனது நிலை குறித்துத் தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) "அதை எடுத்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று போர்ச்செல்வக் குவியலில் அதை வைக்க முற்பட்டபோது, என் மனம் என்னை இடித்துப் பேசியது. அதை (அங்கு வைக்காமல்) மறுபடியும் நானே எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான குரலில் என்னிடம், "எடுத்த இடத்திலேயே மறுபடியும் அதை வைத்து விடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (நபியே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்..." (8:1) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
அடுத்து ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினேன். அவர்கள் என்னிடம் வந்த போது நான், "என் செல்வங்கள் முழுவதையும் நான் நாடிய விதத்தில் (அறவழியில்) பங்கிட்டுவிட என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) மறுத்துவிட்டார்கள். "அவ்வாறாயின், (அதில்) பாதியையாவது (தர்மம் செய்கிறேன்)?" என்று நான் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். "அவ்வாறாயின், மூன்றில் ஒரு பகுதியை (தர்மம் செய்து விடுகிறேன்)?" என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்(து அரை மனதுடன் சம்மதித்)தார்கள். அதன் பின்னரே மூன்றில் ஒரு பகுதி(யை மரண சாசனம் செய்வது) அனுமதிக்கப்பட்டது.
அடுத்து (ஒரு முறை) நான் அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், "வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்" என்று கூறினர். -இது மது தடை செய்யப்படுவதற்குமுன் நடைபெற்ற நிகழ்வாகும்.- அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன்.
அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.
அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் "அன்சாரிகளைவிட முஹாஜிர்களே சிறந்தவர்கள்" என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்பத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக "இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டுவைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும்" (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4790. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "என் தொடர்பாக நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் என் தாயாருக்கு உணவளிக்க விரும்பினால், ஒரு குச்சியை அவரது வாய்க்குள் நுழைத்து (அவரை வாய் மூடாமல் தடுத்து) அதில் உணவைப் போடுவார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், அவரது அறிவிப்பில், "(விருந்தின் போது கோபமுற்ற அந்த மனிதர்) தாடையெலும்பை எடுத்து எனது மூக்கில் அடித்து மூக்கைக் கிழித்துவிட்டார்" என்று சஅத் (ரலி) அவர்கள் கூறியதாகவும், "சஅத் (ரலி) அவர்களின் மூக்கு பிளவுற்றதாகவே இருந்தது" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4791. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்திலேயே, "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும், மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்" (6:52) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
ஆறு பேர் தொடர்பாகவே மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது. அவர்களில் நானும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அடங்குவோம். இணைவைப்பாளர்(களில் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டவர்)கள் நபி (ஸல்) அவர்களிடம், "இ(ந்தச் சாமானிய எளிய)வர்களையா நீர் நெருக்கத்தில் வைத்திருக்கிறீர்?" என்று கேட்டனர்.
அத்தியாயம் : 44
4792. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களிடம் "இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள்மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது" என்று கூறினர். நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான் பெயர் குறிப்பிட (விரும்பா)த இன்னும் இரு மனிதர்களுமே அந்த ஆறு பேர்.
(இணைவைப்பாளர்கள் இவ்வாறு கூறியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மனதில் (இணைவைப்பாளர்களின் கூற்றுக்கு ஆதரவான) அல்லாஹ் நாடிய ஓர் எண்ணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குள் (அவர்கள் சொல்வது சரியாயிருக்குமோ) என்று நினைத்தார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்..." (6:52) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 44
பாடம் : 6 தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4793. தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இணைவைப்பாளர்களுடன்) போரிட்ட அந்த நாட்களில் ஒன்றில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி), சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4794. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின்போது ("இன்றைய இரவில் தனியாகச் சென்று எதிரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என உளவு பார்ப்பதற்கு முன்வருபவர் யார்?" என்று தம் தோழர்களுக்கு) அழைப்பு விடுத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்கு முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்த போது (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்தபோது அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4795. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்களுடன் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) "ஹஸ்ஸான்" கோட்டையில் இருந்தோம். அப்போது உமர் பின் அபீசலமா ஒருமுறை எனக்காகத் தலையைத் தாழ்த்துவார். நான் (எதிரிகளின் திசையில்) பார்ப்பேன். மறுமுறை நான் தலையைத் தாழ்த்திக்கொள்வேன். உமர் பின் அபீசலமா (எதிரிகளின் திசையில்) பார்ப்பார். என் தந்தை (ஸுபைர்) அவர்கள் குதிரை மீதமர்ந்து பனூ குறைழா (யூதர்களை) நோக்கி ஆயுதத்துடன் கடந்து சென்றபோது, அவர்களை நான் அறிந்துகொண்டேன்.
அப்துல்லாஹ் பின் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
பின்னர் (ஒரு முறை) அதைப் பற்றி நான் என் தந்தையிடம் பேசியபோது, "அன்பு மகனே! அப்போது என்னை நீ பார்த்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். கவனமாகக் கேள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து, "என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்" என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அகழ்ப்போர் தினத்தன்று நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்கள் - அதாவது நபி (ஸல்) அவர்களின் துணைவியர்- இருந்த கோட்டையில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில் அப்துல்லாஹ் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தெரிவித்த செய்தி இடம்பெறவில்லை. ஹிஷாம் பின் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே அந்தக் குறிப்பு இடையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 44
4796. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி),தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும் "ஹிரா" மலைமீது இருந்தார்கள். அப்போது அந்தப் பாறை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று கூறினார்கள். - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹிரா" மலைமீது இருந்தபோது மலை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிராவே! அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மலைமீது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி),ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4797. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உன் பெற்றோர் "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172)என்பதில் அடங்குவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூபக்ர் (ரலி) அவர்களையும் ஸுபைர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4798. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் உன் பெற்றோர், "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172) எனும் இறை வசனத்தில் அடங்குவர் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 7 அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4799. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்கள்தான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44