472. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்முறை யாதெனில், அதை ஏழு தடவை கழுவுவதாகும்.
அத்தியாயம் : 2
473. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும் நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
மற்றவர்களது அறிவிப்பில் விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
பாடம் : 28 தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வந்துள்ள தடை.
474. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
475. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவும் வேண்டாம். பின்னர் அதில் குளிக்கவும் வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
476. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீ சிறுநீர் கழிக்காதே! பின்னர் அதில் குளிக்காதே!
அத்தியாயம் : 2
பாடம்: 29 தேங்கி நிற்கும் தண்ணீரில் (பெருந்துடக்கு உள்ளவர்) குளிப்பதற்கு வந்துள்ள தடை.
477. அபுஸ் ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவர் பெருந்துடக்கு உள்ளவராய் இருக்கும்போது தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அப்போது நான், அவர் என்ன செய்ய வேண்டும், அபூஹுரைரா அவர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர் (அதிலிருந்து) தண்ணீரை அள்ளிக் குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
$
அத்தியாயம் : 2
பாடம் : 30 பள்ளிவாசலில் பட்டுவிட்ட சிறுநீர் முதலான அசுத்தங்களைக் கழுவித் துப்புரவு செய்வது கட்டாயமாகும். நிலம் தண்ணீராலேயே தூய்மையாகிவிடும்; அதைத் தோண்ட வேண்டியதில்லை.
478. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கிச் சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதைச் சிறுநீர் மீது ஊற்றினார்கள்.
அத்தியாயம் : 2
479. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி பள்ளிவாசலின் ஒரு பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார். அப்போது அவரைப் பார்த்து மக்கள் சப்தமிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். அவர் (சிறுநீர் கழித்து) முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். அவ்வாறே (தண்ணீர் கொண்டுவரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
480. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.
பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 31 பால்குடி மாறாத குழந்தையின் சிறுநீர் பற்றிய சட்டமும் அதைக் கழுவும் முறையும்.
481. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அது அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார்கள். அதைக் கழுவவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
482. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால்குடி மாறாத ஓர் ஆண்குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்களது மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றி விட்டார்கள்.
- மேற்கண்ட (481ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
483. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உணவு உட்கொள்ளாத (பால்குடி மாறாத) என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டுவந்து அவர்களது மடியில் வைத்தேன். அது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது) சிறுநீர் கழித்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுநீர் பட்ட இடத்தில்) தண்ணீரைத் தெளித்துவிட்டதைத் தவிர வேறொன்றும் கூடுதலாகச் செய்யவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அதை (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்துவிட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
484. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டவரும் ஆரம்பமாக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பெண்மணிகளில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரான உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு உட்கொள்ளும் பருவத்தை அடையாத என் ஆண் மகவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அக்குழந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) தமது ஆடையின் மீது தெளித்தார்கள். அதை(க் கசக்கி) அழுத்தமாகக் கழுவவில்லை.
அத்தியாயம் : 2
பாடம் : 32 விந்து பற்றிய சட்டம்.
485. அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
486. அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 2
487. மேற்கண்ட (485ஆவது) ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
488. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் ஒருவரது ஆடையில் இந்திரியம் பட்டு விட்டால் அ(து பட்ட இடத்)தை (மட்டும்) கழுவ வேண்டுமா? அல்லது அந்த ஆடையையே கழுவ வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடையில் பட்ட) இந்திரியத்தை (மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த ஆடையில் கழுவியதற்குரிய அடையாளத்தை (ஈரத்தை) நான் காண்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஸாயிதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்திரிய(ம் பட்ட இட)த்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இப்னுல் முபாரக் (ரஹ்) மற்றும் அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து அதை நான் கழுவுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
489. அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்துவிட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள், உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்யக் காரணமென்ன? என்று கேட்டார்கள். நான்,தூங்கக்கூடியவர் கனவில் எதைக் காண்பாரோ அதை நான் கண்டேன் என்று கூறினேன். அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியம் பட்டிருக்கக்) கண்டீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்தாலும்கூட அதைக் கழுவத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான்விடுவேன் (கழுவமாட்டேன்) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 33 இரத்தம் அசுத்தமாகும் என்பது பற்றியும் அதைக் கழுவும் முறை பற்றியும்.
490. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு பட்டுவிட்டால்) அவள் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவட்டும். பின்னர் அந்த ஆடையிலேயே தொழுதுகொள்ளலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 34 சிறுநீர் அசுத்தமாகும்; அதைத் துப்புரவு செய்வது கட்டாயமாகும் என்பதற்கான சான்று.
491. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள்.
பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2