4653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட நறுமணமிக்க "அம்பரை"யோ கஸ்தூரியையோ வேறெந்த நறுமணப் பொருளையோ நுகர்ந்ததேயில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிரும் வெண்ணிறம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்றிருந்தன. அவர்கள் நடந்தால் (பள்ளத்தில் இறங்குவதைப் போன்று முன்பக்கம்) சாய்ந்து நடப்பார்கள். அவர்களது உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட சுகந்தமான கஸ்தூரியையோ "அம்பரை"யோ நான் நுகர்ந்ததேயில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் (பரக்கத்) ஏற்பட்டதும்.
4655. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் (உம்மு சுலைம் (ரலி)) அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வைத் துளிகளை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள். என் தாயார், "இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைப் பொருட்களில் ஒன்றாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4656. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்மு சுலைம் (படுத்து) இராதபோது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வந்து உம்மு சுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், "இதோ நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லப்பட்டது.
உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4657. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு மதிய ஓய்வெடுப்பதற்காக வருவார்கள். அப்போது அவர்களுக்காக நான் தோல் விரிப்பு ஒன்றை விரிப்பேன். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களது உடலில் அதிகமாக வியர்வை ஏற்படும். அப்போது நான் அவர்களது வியர்வைத் துளிகளை எடுத்து வாசனைப் பொருட்களிலும் கண்ணாடிக் குடுவைகளிலும் சேகரிப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "தங்களது வியர்வைத் துளிகளை எனது நறுமணப் பொருளில் சேர்க்கிறேன்"என்று கூறுவேன்.
அத்தியாயம் : 43
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வரும்போது குளிர் காலத்திலும் வியர்வை ஏற்பட்டது.
4658. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குளிரான காலை நேரங்களிலும் வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும். பிறகு (அவர்களை விட்டு அந்நிலை விலகும்போது) அவர்களது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வழியும்.
அத்தியாயம் : 43
4659. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சில நேரங்களில் மணியோசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். பிறகு அச்செய்தியை நான் மனனமிட்டுக்கொண்ட நிலையில் அந்நிலை என்னை விட்டு விலகிவிடும். இன்னும் சில நேரங்களில், வானவர் ஒருவர் மனித உருவில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார். அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்"என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4660. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்;அவர்களது முகம் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.
அத்தியாயம் : 43
4661. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, தமது தலையைத் தாழ்த்திக்கொள்வார்கள். நபித் தோழர்களும் தம் தலையைத் தாழ்த்திக்கொள்வார்கள். அந்நிலை விலக்கப்பட்டதும் தமது தலையை உயர்த்துவார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 24 நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வகிடெடுக்காமல் நெற்றியில் தொங்க விட்டதும், வகிடெடுத்து வாரிவிட்டதும்.
4662. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்கள் (யூத, கிறித்தவர்கள்) தமது தலைமுடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தனர். இணைவைப்பாளர்கள் தம் தலைமுடியை வகிடெடுத்துப் பிரித்துவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு இறைக்கட்டளை விதிக்கப்படாத விஷயங்களில் வேதக்காரர்களுக்கு ஒத்துப் போவதையே விரும்பி வந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) முன்தலை முடியை நெற்றியில் தொங்கவிட்டுவந்தார்கள். பிற்காலத்தில் அதை வகிடெடுத்து (வாரி)விட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றமும் அவர்கள் அழகிய முகஅமைப்புக் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்பதும்.
4663. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் (பரந்த முதுகும், விரிந்த மார்பும் அமைந்து) இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள். (அந்த ஆடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4664. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நீண்ட முடிவைத்து, சிவப்பு நிற அங்கி அணிந்திருந்த அழகான ஒருவரை நான் கண்டதேயில்லை. அவர்களது தலைமுடி தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. (விரிந்த முதுகும் பரந்த மார்பும் கொண்டு) அவர்கள் இருதோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிக உயரமுடையவராகவும் இருக்கவில்லை; குட்டையானவராகவும் இருக்கவில்லை. (நடுத்தர உயரமுடையவராகவே இருந்தார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அதிகமான) தலைமுடி இருந்தது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4665. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகான முகம் உடையவர்களாகவும் அழகான உருவ அமைப்புக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரேயடியாக உயரமானவராகவும் இருக்கவில்லை;குட்டையானவராகவும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் நிலை.
4666. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி எப்படி இருந்தது?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4667. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4668. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) இரு காது மடல்களின் பாதிவரை இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவற்றின் நிலை.
4669. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்" என்று ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
நான் சிமாக் (ரஹ்) அவர்களிடம், "விசாலமான வாய் ("ளலீஉல் ஃபம்") என்றால் என்ன?" என்று கேட்டேன். அவர்கள் "பெரிய வாய்" என்றார்கள். "விரிந்த கண் ("அஷ்கலுல் ஐன்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு "நீளமான கண் பிளவு" என்றார்கள்.
"மெலிந்த குதிகால்கள் ("மன்ஹூசுல் அகிப்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு, "குதிகாலில் சிறிதளவு சதைப்பற்று காணப்படுவது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவராகவும் கலையான முகமுடையவராகவும் இருந்தார்கள்.
4670. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபுத்துஃபைல் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:
அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் (ஹிஜ்ரீ) நூறாம் ஆண்டில் இறந்தார்கள்; அவர்களே நபித்தோழர்களில் இறுதியாக இறந்தவர் ஆவார்.
அத்தியாயம் : 43
4671. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்த) அபுத்துஃபைல் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; இந்தப் பூமியின்மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை" என்று கூறினார்கள்.
அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு கண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் கலையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்த நரைமுடி.
4672. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் நரை எதையும் பார்க்கவில்லை; இவ்வளவு தவிர" என்று கூறினார்கள். (அவை மிகவும் குறைவானவை என்பதைப் போன்று அறிவிப்பாளர் சைகை செய்தார் என இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)
மேலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் தம் நரைமுடிக்கு மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயமிட்டுவந்தனர்" என்றும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43