4640. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உஸ்மான் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்தபோது (அவர்களிடம் நாங்கள் சென்றோம்)"என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும்.
4641. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 18 பெண்கள் மீது நபி (ஸல்) அவர்கள் காட்டிய அன்பும், பெண்களின் வாகனங்களை மெதுவாகச் செலுத்துமாறு ஒட்டகவோட்டிக்கு நபியவர்கள் கட்டளையிட்டதும்.
4642. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கறுப்பு நிற அடிமையான "அன்ஜஷா" எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப் பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து)கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4643. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் வந்தார்கள். அப்போது "அன்ஜஷா" எனப்படும் ஒட்டகவோட்டி ஒருவர், துணைவியர் அமர்ந்திருந்த ஒட்டகங்களை (பாட்டுப்பாடி விரைவாக) ஓடச்செய்து கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான் அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) அவர்கள் (இராக்வாசிகளிடம்), "(இங்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையைக் கூறியுள்ளார்கள். அதையே உங்களில் ஒருவர் சொல்லியிருந்தால்,அதற்காக அவரை நீங்கள் நையாண்டி செய்திருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4644. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருடன் (ஒரு பயணத்தில்) இருந்தார்கள். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகங்களை ஒட்டகவோட்டி ஒருவர் (பாட்டுப்பாடி விரைவாக) ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த ஒட்டகவோட்டியிடம்), "அன்ஜஷா! மெதுவாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4645. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அன்ஜஷா எனப்படும்) "அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்" ஒருவர் இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க, பாடிக்கொண்டிருந்த போது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிதானம், அன்ஜஷா! கண்ணாடிக் குடுவைகளை -அதாவது மென்மையான பெண்களை- உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 19 நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் நெருங்கிப்பழகியதும் மக்கள் அவர்களிடமிருந்து வளம் ("பரக்கத்") பெற்றதும்.
4646. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டுவருவார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச் செய்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4647. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையை நாவிதர் ஒருவர் மழித்துக் கொண்டிருக்கும் போது நான் பார்த்துள்ளேன். அப்போது நபித்தோழர்கள், ஒரு முடியாயினும் (தங்களில்) ஒருவரது கையில்தான் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 43
4648. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தங்களிடம் ஒரு தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்)" என்று கூறினாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரின் தாயே! எந்தத் தெருவுக்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை நான் நிறைவேற்றிவைக்கிறேன்" என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக் கொள்ளும் வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்) அவளுடன் தனியாக(ப் பேசிக்கொண்டு) நின்றிருந்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 20 நபி (ஸல்) அவர்கள் குற்றங்களிலிருந்து வெகு தொலைவில் விலகியிருந்ததும், அனுமதிக்கப்பெற்ற செயல்களில் எளிதானதையே அவர்கள் தேர்வு செய்ததும், அல்லாஹ்வின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது அல்லாஹ்வின் சார்பாக மக்களை அவர்கள் தண்டித்ததும்.
4649. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும்பட்சத்தில் (எப்போதும்) தேர்வு செய்வார்கள்.
அது பாவமான விஷயமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள்தான் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்காக (எதிலும் யாரையும் ஒரு போதும்) பழி வாங்கியதில்லை;இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4650. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒன்றைவிட மற்றொன்று எளிதானதாக இருக்கும் இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப் பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் (எப்போதும்) தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள்தான் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவ்விரண்டில் எளிதானதையே தேர்வு செய்வார்கள்" என்பதுவரையே இடம் பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
4651. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்த தில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அந்த அறிவிப்பாளர்களில் சிலர் வேறுசிலரைவிடக் கூடுதலான தகவல்களை அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 43
பாடம் : 21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணமும், அவர்களது உள்ளங்கையின் மென்மையும், அவர்கள் தொட்டுத் தடவியதால் ஏற்பட்ட வளமும்.
4652. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முதல்தொழுகை (லுஹ்ர்) தொழுதேன். பிறகு அவர்கள் தம் வீட்டாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது அவர்களுக்கு எதிரே சிறுவர்கள் சிலர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களின் கன்னங்களை ஒவ்வொருவராகத் தடவினார்கள். என் கன்னங்களிலும் தடவினார்கள். அவர்களது கரத்திலிருந்து "குளிர்ச்சியை" அல்லது "நறுமணத்தை" நான் உணர்ந்தேன். அவர்கள் தமது கையை நறுமணப் பையிலிருந்து அப்போதுதான் எடுத்ததைப் போன்றிருந்தது.
அத்தியாயம் : 43
4653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட நறுமணமிக்க "அம்பரை"யோ கஸ்தூரியையோ வேறெந்த நறுமணப் பொருளையோ நுகர்ந்ததேயில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிரும் வெண்ணிறம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்றிருந்தன. அவர்கள் நடந்தால் (பள்ளத்தில் இறங்குவதைப் போன்று முன்பக்கம்) சாய்ந்து நடப்பார்கள். அவர்களது உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட சுகந்தமான கஸ்தூரியையோ "அம்பரை"யோ நான் நுகர்ந்ததேயில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் (பரக்கத்) ஏற்பட்டதும்.
4655. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் (உம்மு சுலைம் (ரலி)) அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வைத் துளிகளை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள். என் தாயார், "இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைப் பொருட்களில் ஒன்றாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4656. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்மு சுலைம் (படுத்து) இராதபோது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வந்து உம்மு சுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், "இதோ நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லப்பட்டது.
உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4657. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு மதிய ஓய்வெடுப்பதற்காக வருவார்கள். அப்போது அவர்களுக்காக நான் தோல் விரிப்பு ஒன்றை விரிப்பேன். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களது உடலில் அதிகமாக வியர்வை ஏற்படும். அப்போது நான் அவர்களது வியர்வைத் துளிகளை எடுத்து வாசனைப் பொருட்களிலும் கண்ணாடிக் குடுவைகளிலும் சேகரிப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "தங்களது வியர்வைத் துளிகளை எனது நறுமணப் பொருளில் சேர்க்கிறேன்"என்று கூறுவேன்.
அத்தியாயம் : 43
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வரும்போது குளிர் காலத்திலும் வியர்வை ஏற்பட்டது.
4658. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குளிரான காலை நேரங்களிலும் வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும். பிறகு (அவர்களை விட்டு அந்நிலை விலகும்போது) அவர்களது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வழியும்.
அத்தியாயம் : 43
4659. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சில நேரங்களில் மணியோசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். பிறகு அச்செய்தியை நான் மனனமிட்டுக்கொண்ட நிலையில் அந்நிலை என்னை விட்டு விலகிவிடும். இன்னும் சில நேரங்களில், வானவர் ஒருவர் மனித உருவில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார். அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்"என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43