4627. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை என்பதும், அவர்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்கியதும்.
4628. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்படியே ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4629. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று சொன்னார்.
அத்தியாயம் : 43
4630. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார்.
ஒரு மனிதர் உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிருப்பவற்றையும்விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.
அத்தியாயம் : 43
4631. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த முஸ்லிம்களும் புறப்பட்டுச் சென்று ஹுனைன் எனுமிடத்தில் ("ஹவாஸின்" குலத்தாருடன்) போரிட்டனர். அப்போது அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியளித்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய தினத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவுக்கு (முதலில்) நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு இன்னும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு மேலும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்.
(முந்நூறு ஒட்டகங்களைப் பெற்றுக்கொண்ட) ஸஃப்வான் பின் உமய்யா, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்று தாராளமாக) எனக்கு வழங்கினார்கள். அப்போது அவர்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் வெறுப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எனக்கு நன்கொடைகள் வழங்கிக்கொண்டே வந்து மக்களிலேயே எனக்கு மிகவும் உவப்பானவர்களாய் ஆகிவிட்டார்கள்" என்று கூறியதாக சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 43
4632. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "பஹ்ரைனின் நிதி நம்மிடம் வந்தால், நான் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தருவேன்" என்று கூறி, இரு கைகளையும் அள்ளித் தருவதைப் போன்று (மூன்று முறை) சேர்த்துக்காட்டினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
பின்னர் (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அந்த நிதி வந்தது. அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவரிடம் "எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் தர வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்" என்று பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அவர் பொது அறிவிப்புச் செய்தபோது) நான் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்று, "பஹ்ரைனின் நிதி நம்மிடம் வந்தால், நான் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தருவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்" என்றேன்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு கை நிறைய ஒரு தடவை அள்ளிக்கொடுத்து "எண்ணிப்பார்" என்று சொன்னார்கள். நான் எண்ணிப்பார்த்தபோது ஐநூறு (நாணயங்கள்) இருந்தன. பிறகு மீண்டும் "இதைப் போன்றே,இன்னும் இரு மடங்குகளும் பெற்றுக்கொள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4633. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது (பஹ்ரைனின் ஆளுநர்) அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (சிறிது) நிதி வந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள், "யாருக்காவது நபி (ஸல்) அவர்கள் கடன் தர வேண்டியிருந்தால், அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும். (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)" என்று கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
பாடம் : 15 நபி (ஸல்) அவர்கள் குழந்தைகள் மீதும் குடும்பத்தார்மீதும் காட்டிய அன்பும், அவர்களது பணிவும், பணிவின் சிறப்பும்.
4634. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு இன்றிரவு ஓர் ஆண் குழந்தை பிறந்தது; அவனுக்கு நான் என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயரைச் சூட்டினேன்" என்று கூறிவிட்டு, அக்குழந்தையை அபூ சைஃப் எனப்படும் கொல்லரின் மனைவியான உம்மு சைஃப் எனும் பெண்மணியிடம் (பாலூட்டுவதற்காக) ஒப்படைத்தார்கள்.
பின்னர் (குழந்தைக்கு உடல்நலக்குறைவு என அறிந்து அதைப் பார்ப்பதற்காகக்) குழந்தையிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அபூசைஃபிடம் நாங்கள் சென்றடைந்த போது, அவர் தமது உலையை ஊதிக்கொண்டிருந்தார். வீடு முழுவதும் புகை நிரம்பியிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக விரைவாகச் சென்று "அபூசைஃபே! (உலையை ஊதுவதை) நிறுத்துங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துள்ளார்கள்" என்றேன்.
உடனே அபூசைஃப் (உலையை ஊதுவதை) நிறுத்திவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கித் தம்மோடு அணைத்துக்கொண்டுவிட்டு, (பிரார்த்தனைகளில்) அல்லாஹ் நாடிய சிலவற்றைச் சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குழந்தை (இப்ராஹீம்) மூச்சு வாங்கிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது அவர்கள், "கண் அழுகின்றது; உள்ளம் கவலைப்படுகின்றது. நம் இறைவன் விரும்புவதைத் தவிர வேறெதையும் நாம் கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இப்ராஹீமே! உம(து பிரிவு)க்காக நாம் கவலைப்படுகிறோம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4635. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குழந்தை) இப்ராஹீம் மதீனாவின் மேட்டுப் பாங்கான கிராமப்பகுதியில் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்தார்.
(அங்கிருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லும் போது அவர்களுடன் நாங்களும் செல்வோம். அவர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். அப்போது வீட்டுக்குள் புகை மூட்டப்பட்டிருக்கும். குழந்தையின் பால்குடித் தந்தை (அபூசைஃப்) கொல்லராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டுத் திரும்புவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குழந்தை இப்ராஹீம் இறந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்ராஹீம் என் புதல்வர். பால்குடிப் பருவத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு அவரது பால்குடித் தவணையை முழுமையாக்கும் செவிலித் தாய்மார்கள் இருவர் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4636. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?" என்று கேட்டனர். மக்கள் "ஆம்" என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் "ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையைப் பறித்துவிட்டால்,என்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால், (என்னால் என்ன செய்ய முடியும்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4637. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதைக் கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், "எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை" என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "விஷயம் தெரியுமா? கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 16 நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வெட்கப்பட்டது.
4639. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஏதேனுமொன்றை வெறுத்தால், அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துவிடுவோம்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4640. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உஸ்மான் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்தபோது (அவர்களிடம் நாங்கள் சென்றோம்)"என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும்.
4641. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 18 பெண்கள் மீது நபி (ஸல்) அவர்கள் காட்டிய அன்பும், பெண்களின் வாகனங்களை மெதுவாகச் செலுத்துமாறு ஒட்டகவோட்டிக்கு நபியவர்கள் கட்டளையிட்டதும்.
4642. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கறுப்பு நிற அடிமையான "அன்ஜஷா" எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப் பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து)கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4643. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் வந்தார்கள். அப்போது "அன்ஜஷா" எனப்படும் ஒட்டகவோட்டி ஒருவர், துணைவியர் அமர்ந்திருந்த ஒட்டகங்களை (பாட்டுப்பாடி விரைவாக) ஓடச்செய்து கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான் அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) அவர்கள் (இராக்வாசிகளிடம்), "(இங்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையைக் கூறியுள்ளார்கள். அதையே உங்களில் ஒருவர் சொல்லியிருந்தால்,அதற்காக அவரை நீங்கள் நையாண்டி செய்திருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4644. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருடன் (ஒரு பயணத்தில்) இருந்தார்கள். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகங்களை ஒட்டகவோட்டி ஒருவர் (பாட்டுப்பாடி விரைவாக) ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த ஒட்டகவோட்டியிடம்), "அன்ஜஷா! மெதுவாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4645. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அன்ஜஷா எனப்படும்) "அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்" ஒருவர் இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க, பாடிக்கொண்டிருந்த போது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிதானம், அன்ஜஷா! கண்ணாடிக் குடுவைகளை -அதாவது மென்மையான பெண்களை- உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 19 நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் நெருங்கிப்பழகியதும் மக்கள் அவர்களிடமிருந்து வளம் ("பரக்கத்") பெற்றதும்.
4646. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டுவருவார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச் செய்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43