4533. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) "உன் "ரப்பு"க்கு (அதிபதிக்கு) பருகத் தண்ணீர் கொடு. உன் "ரப்பு"க்கு உணவு கொடு. உன் "ரப்பு"க்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு" என்று கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமையாளரை) "ரப்பீ" என்று கூற வேண்டாம். மாறாக, "சய்யிதீ", "மவ்லாய" என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண்டாம். மாறாக, "ஃபத்தாய" (என் பணியாள்) "ஃபத்தாத்தீ" (என் பணிப்பெண்) என்று கூறட்டும்.
அத்தியாயம் : 40
பாடம் : 4 (மனக் குழப்பத்திலுள்ள) ஒரு மனிதர் ("என் மனம் அசுத்தமாகிவிட்டது" எனும் பொருள் பொதிந்த) "கபுஸத் நஃப்சீ"எனும் சொல்லை ஆள்வது வெறுக்கத்தக்கதாகும்.
4534. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் ("என் மனம் அசுத்தமாகிவிட்டது" எனும் பொருள் பொதிந்த) "கபுஸத் நஃப்சீ" எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, ("என் மனம் கனத்துவிட்டது" எனும் பொருள் கொண்ட) "லகிசத் நஃப்சீ" எனும் சொல்லையே கூறட்டும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மாறாக" எனும் சொல் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
4535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் ("என் மனம் அசுத்தமாகிவிட்டது" எனும் பொருள் பொதிந்த) "கபுஸத் நஃப்சீ" எனும் சொல்லைக் கூற வேண்டாம். ("என் மனம் கனத்துவிட்டது" எனும் பொருள் கொண்ட) "லகிசத் நஃப்சீ"எனும் சொல்லையே கூறட்டும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
பாடம் : 5 கஸ்தூரியை உபயோகப்படுத்துவதும், அது நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்ததாகும் என்பதும், நறுமணச் செடிகளையும் (மலர்களையும்) வாசனைத் திரவியங்களையும் (யாரேனும் அளித்தால் அதை) ஏற்க மறுப்பது வெறுக்கத்தக்கதாகும் என்பதும்.
4536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்லக்கூடியவளாய் இருந்தாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப்பார்கள்.) ஆகவே, அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாக தன்னை) ஆக்கிக் கொண்டாள்.
மேலும், தங்கத்தாலான மோதிரம் ஒன்றையும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரேயொரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. (அந்தக் குழியைத் தவிர வேறு துவாரங்கள் எதுவும் அதில் இருக்கவில்லை.) பிறகு அவள் அக்குழிக்குள் கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். -கஸ்தூரி நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்ததாகும்.- (இவ்வாறு செய்து கொண்ட) பின்னர் அவள் அவ்விரு பெண்களுக்கிடையே நடந்து சென்றாள். ஆகவே, அவளை மக்கள் (அடையாளம்) அறிந்து கொள்ளவில்லை. அப்போது அவள் (மோதிரத்திலிருந்து கஸ்தூரியை கமழச் செய்வதற்காக) தமது கையை இவ்வாறு அசைத்து சைகை செய்தாள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, தமது கையை உதறி சைகை செய்து காட்டினார்கள்.
அத்தியாயம் : 40
4537. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறினார்கள். அப்போது "அவள் தனது மோதிரத்தி(ன் நடுக்குழியி)ல் கஸ்தூரியை இட்டு நிரப்பியிருந்தாள். கஸ்தூரி,நறுமணப் பொருட்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
4538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரிடம் வாசனைத் திரவியம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில்,அது எடுத்துச் செல்வதற்கு எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40
4539. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். (சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நறுமணப் புகையிடுவார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 40

4540. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)" என்றேன். "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு"என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் "உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 41
4541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 41
4542. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
(கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் பாடல்தான்.
(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர்கள் யாத்த பாடல்களிலேயே மிக உண்மையானது,
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் பாடல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல் (கவிஞர்) லபீத் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடியவையே" எனும் சொல்தான். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பில், இதைவிடக் கூடுதலான தகவல் இல்லை.
அத்தியாயம் : 41
4546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "புரையோடும் அளவுக்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 41
4547. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடப் புரையோடும் அளவுக்குச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 41
4548. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்" எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 41
பாடம் : 1 பகடைக்காய் விளையாட்டு ("நர்த ஷீர்") தடை செய்யப்பட்டதாகும்.
4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41

4550. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (உறக்கத்தில்) பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும்,அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை.
இறுதியில் (ஒரு நாள்) நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் அதைப் பற்றித் தெரிவித்தேன். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானி டமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவர் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; அதிலிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும்,அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை" என்று அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் கூறிய குறிப்பு (ஆரம்பத்தில்) இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் (ரஹ்), மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது"எனும் குறிப்பு இல்லை. யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 42
4551. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே,உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்து விட்)ட காரணத்தால், மலையைவிடக் கனமான ஒரு கனவை நான் கண்டாலும்கூட அதை நான் பொருட்படுத்துவதில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அபூ சலமா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்று இடம்பெறவில்லை. முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேலும், அவர் முன்பு படுத்திருந்த பக்கத்திலிருந்து திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 42
4552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42