பாடம்: 5 (பெரியவர்கள்) சிறாருக்கு முகமன் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
4377. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4378. சய்யார் பின் அபீசய்யார் வர்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள்.
"(ஒரு முறை) நான் அனஸ் (ரலி) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அச்சிறுவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள். மேலும், அனஸ் (ரலி) அவர்கள், "(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அச்சிறுவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) கூறினார்கள் என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 6 வீட்டுவாசலில் திரையை விலக்கிவைத்திருப்பது போன்ற அடையாளங்களை, உள்ளே செல்ல அனுமதியாகக் கருதலாம்.
4379. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(என் வீட்டுவாசலில்) திரை விலக்கப்படுவதும், எனது அரவத்தை நீ செவியுறுவதும் என்னிடம் (வீட்டுக்குள்) நீ வரலாம் என்பதற்கான அனுமதியாகும். நானாக (வரவேண்டாம் எனத்) தடுக்காதவரை" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 7 இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகப் பெண்கள் வெளியே செல்லலாம்.
4380. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பர்தா" அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னர் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (இரவு நேரத்தில்) வெளியே சென்றார்கள். சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமும் (உயரத்துக்கு ஏற்ற) பருமனும் உள்ளவராக இருந்தார்கள். அவரை அறிந்தவர்களுக்கு அவர் (பர்தா அணிந்து சென்றாலும் அவர்) யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களைப் பார்த்து (அறிந்து) விட்டு, "சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! (பர்தா அணிந்திருந்தாலும்) நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அறிந்து கொள்ளப்படுகிற நிலையில்) எப்படி வெளியே வருகிறீர்கள் என்பது குறித்து யோசித்துப் பாருங்கள்" என்று சொன்னார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பிவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கையில் இறைச்சி கலந்த எலும்புத்துண்டு ஒன்று இருந்தது. சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. பின்னர் அந்நிலை விலக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் அந்த எலும்புத்துண்டு (அப்படியே) இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்திருக்கவில்லை. மேலும், அவர்கள் "(பெண்களே!) நீங்கள் உங்கள் (அடிப்படைத்) தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்டவராயிருந்தார்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களது அறிவிப்பில் "அதாவது கழிப்பிடங்களுக்கு(ச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது)" என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "சவ்தா (ரலி) அவர்கள் மக்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்ட பெண்ணாக இருந்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4381. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் (மதீனாவின்) புறநகர்ப் பகுதிகளுக்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு வேளைகளில் புறப்பட்டுச் செல்வார்கள். ("புற நகர்ப் பகுதிகள்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "மனாஸிஉ" எனும் சொல், விசாலமான இடங்களைக் குறிக்கும். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தங்கள் துணைவியரைத் திரைக்குள்ளிருக்குமாறு கூறுங்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் ஓர் இரவில் இஷா நேரத்தில் வெளியே சென்றார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உயரமான பெண்ணாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, "சவ்தாவே! (நீங்கள் பர்தா அணிந்திருந்தாலும்) நாங்கள் உம்மை யார் என்று அடையாளம் தெரிந்துகொண்டோம்" என்று கூறினார்கள். பர்தா தொடர்பான சட்டம் அருளப்பட வேண்டுமென்ற பேராவலிலேயே இவ்வாறு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவ்வாறே பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 8 அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருப்பதும் அவளிடம் செல்வதும் தடை செய்யப்பட்டதாகும்.
4382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனத்தில் வையுங்கள்! கன்னிகழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்;அவர் அவளை மணந்துகொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர!
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4383. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் (அவள் இருக்குமிடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் ("அல்ஹம்வு") மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4384. லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்ஹம்வு" என்பது கணவருடைய சகோதரர், கணவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர் போன்ற உறவினர்களைக் குறிக்கும்.
அத்தியாயம் : 39
4385. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (தனிமையிலிருந்த தம் துணைவியாரிடம்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, "(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்" என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்" என்று கூறிவிட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, "இன்றைய தினத்திற்குப்பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்;அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 9 ஒருவர் தம் மனைவியுடனோ அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய பெண் உறவினர் ஒருவருடனோ தனிமையில் இருப்பதை யாரேனும் பார்த்தால் "இவர் (எனக்கு) இன்ன (உறவுடைய) பெண்" என்று கூறி, கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும்.
4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4387. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) "இஃதிகாஃபி"ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது இல்லத்திலேயே என் வசிப்பிடம் இருந்தது.
அப்போது அன்சாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று நில்லுங்கள். இவர் (என் துணைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தைப் போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்றோ, அல்லது "எதையேனும் போட்டுவிடுவான்" என்றோ சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4388. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் பள்ளிவாசலில் "இஃதிகாஃப்" இருந்தபோது,அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளிவாசலுக்குச்) சென்றேன். (அந்த இரவில்) சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தேன். என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள்... பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
ஆயினும், அதில் "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களை எல்லாம் சென்றடைகிறான்" என்று இடம்பெற்றுள்ளது. "ஓடுகிறான்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
பாடம் : 10 ஓர் அவைக்குச் செல்பவர், அங்கு இடைவெளி ஏதேனும் இருக்கக் கண்டால் அதில் அமர்ந்துகொள்ளலாம். இல்லாவிட்டால், பின்வரிசையிலேயே அமர வேண்டும்.
4389. அபூவாகித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் (கண்டுகொள்ளாமல்) சென்றுவிட்டார்.
(உள்ளே வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவைக்கு) முன்னால் வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் வட்டமான அந்த அவையில் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்துகொண்டார். மற்றொருவர் பின்வரிசையில் அமர்ந்துகொண்டார். மூன்றாமவரோ திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் பேசி) முடித்ததும், "இம்மூவரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்விடம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ (மக்களைத் தாண்டிச் செல்ல) வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (அவரைத் தண்டிக்க) வெட்கப் பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்தினான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 11 ஒரு மனிதர் முந்திச் சென்று தமக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அவ்விடத்திலிருந்து அவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
4390. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டுப் பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4391. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம். மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்" என்பது இடம் பெறவில்லை. அவற்றில் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம்) வெள்ளிக்கிழமை அன்றா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "வெள்ளிக்கிழமை அன்றும் அது அல்லாத மற்ற சமயங்களிலும்தான் என்று விடையளித்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4392. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு, அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்காக யாரேனும் அவரது இடத்திலிருந்து எழுந்(து இடமளித்)தால் அங்கு அவர்கள் அமரமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று உங்களில் ஒருவர், தம் சகோதரர் அமர்ந்த இடத்தில் தாம் அமர்வதற்காக அவரை எழுப்பிவிட்டு அங்கு அமர வேண்டாம். மாறாக, "(நகர்ந்து) இடமளியுங்கள்" என்று கூறட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 12 ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்.
4394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டு..." என்று இடம்பெற்றுள்ளது. (அதில் "உங்களில் ஒருவர்" எனும் குறிப்பு இல்லை.)
அத்தியாயம் : 39
பாடம் : 13 அந்நியப் பெண்கள் உள்ள இடத்திற்கு அலிகள் செல்ல வந்துள்ள தடை.
4395. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆணோ பெண்ணோ அல்லாத) அலி ஒருவர் என் அருகில் இருந்துகொண்டிருந்தார். அப்போது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போது அந்த அலி என் சகோதரரிடம், "அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவே! நாளை உங்களுக்கு "தாயிஃப்" நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்" என்று சொன்னார்.
அதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அலிகளான) இவர்கள் (அந்நியப் பெண்களான) உங்களிடம் வர வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4396. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலி ஒருவர் வருவார். அவர் பாலுறவு வேட்கையில்லாதவர்களில் ஒருவர் என்றே கருதிவந்தார்கள். ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஒருவரிடம் இருந்தபோது, அங்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த அலி ஒரு பெண்ணைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார். "அவள் வந்தால் நாலு (சதை மடிப்புகளு)டன் வருவாள். போனால் எட்டு (சதை மடிப்புகளு)டன் போவாள்" என்று அவர் சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர் இங்குள்ள (பெண்களின்) நிலைமை பற்றியும் அறிவார் என்று நான் ஏன் கருதக்கூடாது? (அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வர வேண்டாம்" என்று கூறினார்கள். எனவே, அவரை(ப் பெண்களைவிட்டு)த் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 39