4159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழத்தை அதிகாலை உண்பதில் "நிவாரணம்" அல்லது "விஷமுறிவு" உள்ளது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 28 சமையல் காளானின் சிறப்பும் அதைக் கொண்டு கண்ணுக்கு மருந்திடுவதும்.
4160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது, அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் வழியாக எனக்கு வந்த (முந்தைய) அறிவிப்பை நான் மறுக்கவில்லை.
அத்தியாயம் : 36
4162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான், மூசா (அலை) அவர்களு(டைய சமுதாயத்தாரு)க்கு அல்லாஹ் இறக்கி வைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.- இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 29 "அல்கபாஸ்" எனும் (மிஸ்வாக்) மரத்தின் கறுப்பு நிற பழத்துடைய சிறப்பு.
4166. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் "அல்கபாஸ்" மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதில் கறுப்பு நிறத்தைப் பறியுங்கள்" என்று சொன்னார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஆடு மேய்த்துள்ளீர்கள் போலிருக்கிறதே?" என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், ஆடு மேய்க்காத இறைத்தூதரும் உண்டா?" என்றோ அது போன்றோ (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 30 சமையல் காடியின் சிறப்பும் அதைக் குழம்பாகப் பயன்படுத்துவதும்.
4167. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குழம்புகளில்" அல்லது "குழம்பில்" அருமையானது (சமையல்) காடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4168. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குழம்புகளில் அருமையானது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 36
4169. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டுவரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4170. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "காடிதான் குழம்புகளில் அருமையானது" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நானும் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்.
அத்தியாயம் : 36
4171. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின் உள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4172. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரைவரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஏதேனும் உணவு உள்ளதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "ஆம்" என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.
பிறகு (தம் வீட்டாரிடம்), "குழம்பேதும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 31 வெள்ளைப் பூண்டு சாப்பிடலாம்; பெரியவர்களைச் சந்தித்துப் பேசுபவர், அதையும் அதைப் போன்றதையும் தவிர்த்துக்கொள்வது அவசியமாகும்.
4173. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டுவரப்பட்டால், அதை உண்டுவிட்டு அதில் எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்புவார்கள். ஒரு நாள் (அவ்வாறு) எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதிலிருந்து அவர்கள் உண்ணவில்லை. ஏனெனில், அதில் வெள்ளைப் பூண்டு இருந்தது.
எனவே, அது குறித்து நான் "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை. அதிலிருந்து வரும் வாடை காரணமாக அதை நான் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். நான், "அவ்வாறாயின் தாங்கள் விரும்பாததை நானும் விரும்பமாட்டேன்" என்று சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4174. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த்தளத்திலும் நான் மேல்தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?" என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த்தளமே மிகவும் வசதியானது" என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல்தளத்தில் இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள்பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.
இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை" என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.
மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேத அறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 32 விருந்தினரை உபசரிப்பதும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும்.
4175. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.
பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்றே கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இன்றிரவு இவருக்கு விருந்தளிப்பவர் யார்? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று சொல்லி, (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டுக்குச் சென்றார். அங்கு தம் மனைவியிடம், "உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி "நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்றார்.
அவர், "(நம் குழந்தைகள் உணவு கேட்டால்) ஏதாவது காரணம் சொல்லி (தூங்கவைத்து) விடு; நம் விருந்தாளி நமது வீட்டுக்குள் நுழைந்ததும் (வீட்டிலுள்ள உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவதுபோல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு. நாமும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் போன்று அவருக்குக் காட்டிக்கொள். (மறக்காமல் விருந்தாளி வந்து) சாப்பிடக் கையை நீட்டும்போது விளக்கை நோக்கிச் சென்று அதை அணைத்துவிடு" என்று கூறினார்.
அவ்வாறே (விருந்தாளி வந்ததும்) அவர்கள் அனைவரும் அமர்ந்தனர். விருந்தாளி சாப்பிட்டார். பிறகு (விருந்தளித்த) அந்தத் தோழர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்றிரவு நீங்கள் இருவரும் உங்கள் விருந்தாளியிடம் நடந்து கொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் வியப்படைந்தான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4176. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அன்சாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் துணைவியாரிடம், "குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கவைத்துவிடு; விளக்கை (ஏற்றிவிடுவதைப் போன்று பாவனை செய்து அதை) அணைத்துவிடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்துவிடு" என்று கூறினார். இது தொடர்பாகவே, "தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்" (59:9) எனும் இறை வசனம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விருந்தாளியாக வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவருக்கு விருந்தளிப்பதற்கு எதுவும் இருக்க வில்லை. எனவே, (தம் தோழர்களை நோக்கி), "இவருக்கு விருந்தளிக்கும் ஆள் யாரேனும் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் அபூதல்ஹா (ரலி) எனப்படும் ஒரு மனிதர் எழுந்து, அந்த விருந்தாளியை தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில் (59:9 ஆவது) இறைவசனம் இறங்கியது தொடர்பான குறிப்பும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 36
4177. மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என்னிரு நண்பர்களும் பசியால் காதும் கண்ணும் (அடைபட்டுப்) போய்விட்ட நிலையில் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுக்கு முன்னால் தலை காட்டினோம். (வறுமை சூழ்ந்திருந்த அந்த நிலையில்) அவர்களில் எவரும் எங்களை (விருந்தாளிகளாக) ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் எங்களைத் தம் வீட்டாரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கு மூன்று பெட்டை வெள்ளாடுகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், "இவற்றிலிருந்து பால் கறந்து நம்மிடையே பகிர்ந்துகொள்வோம்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பருகினோம். நபி (ஸல்) அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்காக எடுத்துவைத்தோம். நபி (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து,உறங்கிக்கொண்டிருப்பவரை விழிக்கச் செய்யாமல், விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும் விதமாக (மெதுவாக) முகமன் (சலாம்) சொல்வார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து (அதை) அருந்துவார்கள்.
இந்நிலையில், எனது பங்கை நான் அருந்திவிட்ட நிலையில் ஓர் இரவில் என்னிடம் ஷைத்தான் வந்து, "முஹம்மத் அவர்கள் அன்சாரிகளிடம் செல்லும்போது அவர்களுக்கு அன்சாரிகள் அன்பளிப்புகள் வழங்குகிறார்கள். நபி (ஸல்) அவர்களும் அதைப் பெற்று (புசித்து)க்கொள்கிறார்கள். இந்த ஒரு மிடறு(ப்பால்) அவர்களுக்குத் தேவையே இருக்காது" என்று சொன்னான்.
எனவே, நான் அந்தப் பாலை நோக்கிச் சென்று அதைப் பருகிவிட்டேன். என் வயிற்றுக்குள் பால் இறங்கியதும், (அருந்திய) அந்தப் பாலை(த் திருப்பி)க் கொடுக்க வழியில்லை என்பதை நான் உணர்ந்தேன். பிறகு ஷைத்தான் "உனக்குக் கேடு நேரட்டும்! என்ன காரியம் செய்துவிட்டாய்! முஹம்மத் அவர்களுக்குரிய பானத்தைப் பருகிவிட்டாயே? அவர் (வீட்டுக்கு) வரும் போது, பால் இல்லாததைக் கண்டு உனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டால் நீ அழிந்துபோவாய். உனது இம்மையும் மறுமையும் (பாழாகிப்) போய்விடுமே!" என்று என்னைச் சஞ்சலப்படுத்தினான்.
அப்போது என்மீது ஒரு சால்வை இருந்தது. அதை என் பாதங்கள்மீது போர்த்தினால் தலை வெளியே தெரியும். தலைமீது போர்த்தினால் என் பாதங்கள் வெளியே தெரியும். (உடல் முழுவதும் போர்த்தி மூடிக்கொள்ளும் அளவுக்கு அது இருக்கவில்லை.) எனக்கு (அன்றிரவு குற்றஉணர்வால்) தூக்கமே வராமலாயிற்று. என்னிரு தோழர்களோ (நிம்மதியாகத்) தூங்கிவிட்டனர். நான் செய்த தவறை அவர்களிருவரும் செய்யவில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து வழக்கம்போல் சலாம் சொன்னார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து, அதைத் திறந்தார்கள். அதில் எதுவும் இருக்கவில்லை. அப்போது வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். "இப்போது எனக்கெதிராக அவர்கள் பிரார்த்திப்பார்கள். நான் அழிந்துபோய்விடுவேன்" என்று நான் (எனக்குள்ளே) கூறிக்கொண்டேன்.
ஆனால் அவர்கள், "இறைவா! எனக்கு உண்ண உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகப்பானம் புகட்டியவருக்கு நீ புகட்டுவாயாக!" (அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனீ வஸ்கி மன் சகானீ) என்று பிரார்த்தித்தார்கள்.
நான் அந்தச் சால்வையை எடுத்து அதை இறுக்கமாக என்மீது கட்டிக்கொண்டு, கத்தியை எடுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய அந்த வெள்ளாடுகளை நோக்கிச் சென்று, அவற்றில் கொழுத்த ஆடு எது என்பதைப் பார்த்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அறுக்கலாம் என நினைத்தேன். ஆனால்,அவற்றின் பால்மடிகள் திரண்டு காணப்பட்டன. அவற்றில் ஒவ்வொன்றும் பால் சுரந்து காணப்பட்டன.
உடனே நான் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் பால் கறப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு பாத்திரத்தை நோக்கிச் சென்று அதில் பால் கறந்தேன். அதில் நுரை ததும்பும் அளவுக்குக் கறந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன்.
அப்போது அவர்கள், "இன்றிரவு நீங்கள் உங்களுக்குரிய பானத்தைப் பருகினீர்களா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் பருகுங்கள்" என்றேன். அவர்கள் பருகி விட்டுப் பிறகு (மீதியை) என்னிடம் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! (இன்னும்) பருகுங்கள்" என்றேன். அவர்கள் பருகிவிட்டுப் பிறகு (மீதியை மீண்டும்) என்னிடம் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தாகம் தணிந்துவிட்டது;அவர்களது பிரார்த்தனை எனக்குக் கிடைத்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டபோது, (மகிழ்ச்சியால்) பூமியில் விழுமளவுக்குச் சிரித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "மிக்தாதே! ஏதோ ஒரு குறும்பு செய்துள்ளீர்! அது என்ன?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னின்னவாறு நடந்தது. இப்படி நான் செய்தேன்" என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள கருணையே ஆகும். இதை (முன்பே) என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நம் தோழர்கள் இருவரையும் நாம் எழுப்பி, அவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்திருக்கலாமே!" என்று கூறினார்கள்.
அப்போது நான், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அதைத் தாங்களும் தங்களுடன் நானும் அடைந்துகொண்ட பின் மக்களில் வேறு யாருக்குக் கிடைத்தாலும் (கிடைக்காவிட்டாலும்) அதை நான் பொருட்படுத்த மாட்டேன்" என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மிக்தாத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4178. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரிடமாவது உணவு இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் ஒரு "ஸாஉ" அல்லது "கிட்டத்தட்ட அந்த அளவு" உணவு(க்கு வேண்டிய மாவு) இருந்தது. அது தண்ணீர் விட்டுக் குழைக்கப்பட்டது.
(சற்று நேரத்திற்குப்) பின் பரட்டைத் தலையுடைய உயரமான இணைவைப்பாளரான மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "(இவை) விற்பனைக்கா? அல்லது அன்பளிக்கவா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை. விற்பனைக்குத்தான்" என்றார்.
அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்துச் சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொரிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் ஆளுக்கொரு துண்டை நபி (ஸல்) அவர்கள் வெட்டித் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) அவரிடமே கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து வைத்(துப் பிறகு கொடுத்)தார்கள்.
பிறகு இரு அகன்ற தட்டுக(ளில் அந்த இறைச்சி)களை வைத்தார்கள். அவற்றிலிருந்து நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அப்படியிருந்தும் அவ்விரு தட்டுகளிலும் மீதி இருந்தது. எனவே, அதை நான் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டேன்.
அத்தியாயம் : 36