பாடம் : 26 குடும்பத்தாருக்காகப் பேரீச்சம் பழங்கள் உள்ளிட்ட உணவுகளைச் சேமித்து வைத்தல்.
4155. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தக் குடும்பத்தாரிடம் பேரீச்சம் பழங்கள் (சேமித்துவைக்கப்பட்டு) உள்ளனவோ அவர்கள் பசித்திருக்கமாட்டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4156. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! பேரீச்சம்பழம் இல்லாத வீட்டாரே பட்டினி கிடக்கும் வீட்டார். ஆயிஷா! பேரீச்சம் இல்லாத வீட்டாரே "பட்டினி கிடக்கும் வீட்டார்" அல்லது "பட்டினிக்குள்ளாகும் வீட்டார்" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறினார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 27 மதீனா பேரீச்சம் பழங்களின் சிறப்பு
4157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் இந்த (மதீனாவின்) இரு மலைகளுக்கிடையே உள்ள பழங்களில் ஏழு பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு (அன்று) மாலைவரை எந்த விஷமும் தீங்களிக்காது.- இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் ஏழு "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்கிறாரோ அவருக்கு அன்றைய தினத்தில் (மாலைவரை) எந்த விஷமும் சூனியமும் இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் "அஜ்வா" (ரகப்) பேரீச்சம் பழத்தை அதிகாலை உண்பதில் "நிவாரணம்" அல்லது "விஷமுறிவு" உள்ளது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 28 சமையல் காளானின் சிறப்பும் அதைக் கொண்டு கண்ணுக்கு மருந்திடுவதும்.
4160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது, அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் வழியாக எனக்கு வந்த (முந்தைய) அறிவிப்பை நான் மறுக்கவில்லை.
அத்தியாயம் : 36
4162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான், மூசா (அலை) அவர்களு(டைய சமுதாயத்தாரு)க்கு அல்லாஹ் இறக்கி வைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் "மன்னு" வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.- இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 29 "அல்கபாஸ்" எனும் (மிஸ்வாக்) மரத்தின் கறுப்பு நிற பழத்துடைய சிறப்பு.
4166. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் "அல்கபாஸ்" மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதில் கறுப்பு நிறத்தைப் பறியுங்கள்" என்று சொன்னார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஆடு மேய்த்துள்ளீர்கள் போலிருக்கிறதே?" என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், ஆடு மேய்க்காத இறைத்தூதரும் உண்டா?" என்றோ அது போன்றோ (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 30 சமையல் காடியின் சிறப்பும் அதைக் குழம்பாகப் பயன்படுத்துவதும்.
4167. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குழம்புகளில்" அல்லது "குழம்பில்" அருமையானது (சமையல்) காடியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4168. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குழம்புகளில் அருமையானது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 36
4169. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், "நம்மிடம் காடி மட்டுமே உள்ளது" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டுவரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4170. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், "குழம்பேதும் இல்லையா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "காடிதான் குழம்புகளில் அருமையானது" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், "இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நானும் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டிருக்கிறேன்.
அத்தியாயம் : 36
4171. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின் உள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4172. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரைவரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஏதேனும் உணவு உள்ளதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "ஆம்" என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.
பிறகு (தம் வீட்டாரிடம்), "குழம்பேதும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 31 வெள்ளைப் பூண்டு சாப்பிடலாம்; பெரியவர்களைச் சந்தித்துப் பேசுபவர், அதையும் அதைப் போன்றதையும் தவிர்த்துக்கொள்வது அவசியமாகும்.
4173. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டுவரப்பட்டால், அதை உண்டுவிட்டு அதில் எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்புவார்கள். ஒரு நாள் (அவ்வாறு) எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதிலிருந்து அவர்கள் உண்ணவில்லை. ஏனெனில், அதில் வெள்ளைப் பூண்டு இருந்தது.
எனவே, அது குறித்து நான் "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை. அதிலிருந்து வரும் வாடை காரணமாக அதை நான் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். நான், "அவ்வாறாயின் தாங்கள் விரும்பாததை நானும் விரும்பமாட்டேன்" என்று சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4174. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த்தளத்திலும் நான் மேல்தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?" என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த்தளமே மிகவும் வசதியானது" என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல்தளத்தில் இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள்பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.
இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை" என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.
மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேத அறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36