401. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் அவர் தம்முடைய இரு மூக்குத் துவாரங்களுக்குள் நீர் செலுத்திப் பின்னர் சிந்தட்டும்.
அத்தியாயம் : 2
402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அங்கத் தூய்மை செய்பவர், (மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்குச் சிந்தட்டும்! (மல ஜலம் கழித்துவிட்டு) கற்களால் துப்புரவு செய்பவர், ஒற்றைப்படையாகச் செய்யட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில்,இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (மல ஜலம் கழித்து விட்டுக்) கற்களால் துப்புரவு செய்தால் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 9 இரு கால்களையும் முழுமையாகக் கழுவுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும்.
405. ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்த தினத்தன்று நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது (ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அங்கு வந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான்! உளூவை நிறைவாகச் செய்! ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், நானும் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் இறுதித் தொழுகைக்காக (ஜனாஸா) புறப்பட்டுச் சென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் அறைவாயிலைக் கடந்துசென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளில் மஹ்ரீ (ரலி) அவர்களுடைய (அதாவது ஷத்தாத் பின் அல்ஹாத் அவர்களுடைய) முன்னாள் அடிமை சாலிம் (ரஹ்) அவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான் ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்கள் (மேற்கண்டபடி) கூறினார்கள் என்று தெரிவித்தார்கள் என இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமை சாலிம் என்று காண்பபடுகிறது.
அத்தியாயம் : 2
406. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக அங்கத்தூய்மை (உளூ) செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உளூவை முழுமையாகச் செய்யுங்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
407. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களைக் கழுவாமல்) கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவ (மஸ்ஹு செய்ய) ஆரம்பித்தோம். (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள் (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அறிவிப்புச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
408. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனை தான் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 2
409. முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நீர்குவளையில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த மக்கள் சிலரைக் கண்டார்கள். அப்போது, உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு நரக வேதனைதான் என்று அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகாலகளுக்கு நரக வேதனைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 10 (அங்கத் தூய்மை செய்யும்போது) கழுவ வேண்டிய உறுப்புகள் அனைத்தையும் சிறிதும் விடுபடாமல் முழுமையாகக் கழுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும்.
411. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார்.
$
அத்தியாயம் : 2
பாடம் : 11 அங்கத் தூய்மை செய்த நீரோடு (சிறு) பாவங்களும் வெளியேறுகின்றன.
412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.
அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 12 அங்கத் தூய்மை செய்யும்போது முகம், கை, கால் ஆகிய உறுப்புகளைக் (கழுவ வேண்டிய எல்லையைவிடக்)கூடுதலாகக் கழுவுவது விரும்பத் தக்கதாகும்.
414. நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தை முழுமையாகக் கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை புஜம்வரைக் கழுவினார்கள். பிறகு இடக்கரத்தை புஜம் வரைக் கழுவினார்கள். பிறகு (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். பிறகு வலக் காலை கணைக்கால் வரைக் கழுவினார்கள். பிறகு இடக்காலையும் (அவ்வாறே) கணைக்கால்வரைக் கழுவினார்கள். பின்னர், இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.
மேலும், அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தமையால் மறுமை நாளில் (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போராய் இருப்பீர்கள். எனவே, உங்களில் யாருக்கு முடியுமோ அவர் (தம் பிரதான உறுப்புகளை) எல்லைக்கு மேல் அதிகமாகக் கழுவிக்கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
415. நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணைக்கால்வரை சென்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்துகொள்ளட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 2
416. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
417. அபூஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மறுமை நாளில்) எனது சமுதாயத்தார் எனது (அல்கவ்ஸர் எனும்) தடாகத்திற்கு வருவார்கள். ஒருவர் தமது ஒட்டகத்தை விட்டும் பிறரது ஒட்டகத்தை விரட்டிவிடுவதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரை விரட்டுவேன் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் நபியே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆம்; வேறெவருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். உங்களில் ஒரு குழுவினர் என்னைவிட்டுத் தடுக்கப்படுவர். அவர்களால் (என்னருகில்) வந்து சேரமுடியாது. அப்போது நான், என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் என்பேன். அப்போது வானவர் ஒருவர் என்னிடம், உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாய் உங்களது மார்க்கத்தில்) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்பார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
418. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது (அல்கவ்ஸர் எனும்) தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டு மற்றவர்களின் ஒட்டகத்தை விரட்டுவதைப் போன்று, அந்தத் தடாகத்திலிருந்து சிலரை நான் விரட்டிவிடுவேன் என்று கூறினார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; நீங்கள் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் வருவீர்கள். இந்த அடையாளம் வேறெவருக்கும் இருக்காது என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 2
419. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் (அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்று சொன்னார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள் என்று கூறினார்கள். மக்கள், உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ளமாட்டாரா, கூறுங்கள் என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தனர். (அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் வாருங்கள் என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படும். அப்போது நான் (இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;அப்புறப்படுத்துவானாக! என்று கூறுவேன்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) பொது மையவாடிக்குப் புறப்பட்டார்கள். (அங்கு போய்) அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்; வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. (அறிந்துகொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக) உறுதியாக என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 2
பாடம் : 13 உளூவின் நீர், (உறுப்புகளில்) எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் (மறுமையில்) வெண்மையும் பரவும்.
420. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள்.
நான், அபூஹுரைரா (ரலி) அவர்களே! இது என்ன அங்கத் தூய்மை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு அங்கத் தூய்மை செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 2