3964. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளன்று நிகழ்த்திய உரையில்), "யார் நமது தொழுகையைத் தொழுது, நமது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்கி, நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் (குர்பானிப் பிராணியை) அறுக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அப்போது என் தாய்மாமா (அபூபுர்தா (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மகனுக்காக (தொழுகைக்கு) முன்பே குர்பானி கொடுத்துவிட்டேனே?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது நீங்கள் உங்களுடைய வீட்டாருக்காக அவசரப்பட்டு அறுத்துவிட்ட ஒன்றாகும். (அது குர்பானியாகாது)" என்று கூறினார்கள்.
அதற்கு என் தாய்மாமா, "என்னிடம் இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஆடொன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து குர்பானி கொடுப்பீராக! அது (உமது) குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3965. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஈதுல் அள்ஹா பெருநாளன்று) "இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம். பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியை அடைந்து கொண்டவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு முன்பே) யார் குர்பானிப் பிராணியை அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும். அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது" என்று சொன்னார்கள்.
(என் தாய்மாமா) அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டிருந்தார். அவர் (எழுந்து), "என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து (குர்பானி கொடுத்து)விடுவீராக! உமக்குப் பின்னர் வேறெவருக்கும் அது செல்லாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று தொழுகைக்குப் பிறகு எங்களிடையே உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
3966. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், "தொழுவதற்கு முன்பே யாரும் குர்பானி கொடுக்க வேண்டாம்" என்று கூறினார்கள். ஒரு மனிதர், "என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளைவிடச் சிறந்ததாகும்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி உமக்குப் பிறகு வேறெவருக்கும் செல்லாது"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3967. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாய்மாமா) அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்துக் குர்பானி கொடு)ப்பீராக!" என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை.
-அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும்"என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) நான் எண்ணுகிறேன்.-
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதையே அதற்குப் பதிலாக அறுத்துக் கொள்வீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் இது செல்லாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என்று நான் எண்ணுகிறேன்)" என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் கூறியுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 35
3968. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று, "(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்" என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை அயலாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும் கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாத மற்றவருக்கும் பொருந்துமா, அல்லது பொருந்தாதா என்பது எனக்குத் தெரியாது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு செம்மறியாட்டுக் கடாக்களின் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறிய ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3969. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) தொழுதுவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அப்போது தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்து விட்டவர்களை மீண்டும் குர்பானி கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3970. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது இறைச்சி மணம் வருவதைக் கண்டு குர்பானிப் பிராணிகளை (தொழுகைக்கு முன்பே) அறுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். "யார் (தொழுகைக்கு முன்பே) குர்பானிப் பிராணியை அறுத்தாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
பாடம் : 2 குர்பானிப் பிராணியின் வயது.
3971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே அறுத்துக் குர்பானி கொடுங்கள். அது கிடைக்காவிட்டால் செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 35
3972. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் "நஹ்ரு" டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களுக்கு (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள். அப்போது சிலர், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டார்கள் என எண்ணி,முன்பே சென்று (தங்களுடைய குர்பானிப் பிராணிகளை) அறுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தாம் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டவர் அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு பிராணியை அறுக்க வேண்டும். தாம் அறுப்பதற்கு முன் எவரும் அறுக்க வேண்டாமென்று உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 35
3973. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சில குர்பானிப் பிராணிகளை என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்த பின்) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக்குட்டி ஒன்று எஞ்சியது. அது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, "அதை நீரே (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("தம் தோழர்களுக்கு" என்பதைக் குறிக்க "அலா அஸ்ஹாபிஹி"என்பதற்குப் பதிலாக) "அலா ஸஹாபத்திஹி" எனும் சொற்றொடர் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3974. உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (எனது பங்காக) ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது. நான், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு தான் எனக்குக் கிடைத்தது" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (அறுத்து) நீர் குர்பானி கொடுப்பீராக!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
பாடம் : 3 குர்பானிப் பிராணியை அறுக்கும் பொறுப்பை வேறெவரிடமும் ஒப்படைக்காமல் நேரடியாகத் தாமே (தமது கையால்) அறுத்துக் குர்பானி கொடுப்பதும் பிராணியை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரும் தக்பீரும் கூறுவதும் விரும்பத்தக்கவை ஆகும்.
3975. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் ("பிஸ்மில்லாஹ்") கூறினார்கள். தக்பீரும் ("அல்லாஹு அக்பர்") சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.
அத்தியாயம் : 35
3976. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்ததையும் அல்லாஹ்வின் பெயர் கூறி, தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததையும் நான் பார்த்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது: நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் இதை அனஸ் (ரலி) அவர்களிடம் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வின் பெயரால்,அல்லாஹ் பெரியவன்) என்று கூறியதையும் நான் பார்த்தேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3977. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அந்தக் கத்தியை எடு" என்றார்கள். பிறகு "அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு" என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) "பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்" (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)" என்று கூறி, அதை அறுத்தார்கள்.
அத்தியாயம் : 35
பாடம் : 4 பல், நகம் மற்றும் எலும்பு ஆகியவை தவிர இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் வேறு எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்கலாம்.
3978. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக் கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை (கூரிய) கத்திகள் இல்லாத நிலையில் நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பிராணி சாவதற்கு முன்பாகக் கூர்மையான ஏதேனும் ஒரு பொருளால்) "விரைவாக அறுத்துவிடுங்கள்" அல்லது "உயிரிழக்கச் செய்துவிடுங்கள்". இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பு இனமாகும். நகங்களோ (இறைமறுப்பாளர்களான) அபிசீனியர்களின் கத்திகளாகும்" என்று கூறினார்கள்.
(அந்தப் போரில்) எங்களுக்குச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச்செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3979. மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் "திஹாமா" பகுதியிலுள்ள "துல்ஹுலைஃபா" வில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) சில ஆடுகளையும் ஒட்டகங்களையும் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி) விட்டார்கள்.
(இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள் பாத்திரங்களைக் கவிழ்த்துவிடும்படி உத்தரவிட, அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கி (பங்கிடலா)னார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
3980. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஒட்டகங்களை அறுக்க வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே! ஆகவே, (கூர்மையான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?" என்று கேட்டோம். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
"அப்போது (போர்ச் செல்வமாக நாங்கள் பெற்ற) ஒட்டகங்களிலிருந்து ஒன்று மிரண்டு ஓடியது. நாங்கள் அம்பெய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து நிறுத்தினோம்" என்றும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் (நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே!) நாங்கள் (கூரான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?" என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3981. மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இன்று ஒட்டகங்களை அறுக்க வாட்களைப் பயன்படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே!"என்று கேட்டேன் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில் "மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 35
பாடம் : 5 இஸ்லாத்தின் ஆரம்பத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என விதிக்கப்பெற்றிருந்த தடையும், பின்னர் அது மாற்றப்பட்டு எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் சேமித்துவைக்கலாம் என்ற (புதிய) அனுமதி வந்த விவரமும்.
3982. அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3983. அபூஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். பிறகு (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடனும் தொழுதிருக்கிறேன். அலீ (ரலி) அவர்கள் உரையாற்றுவதற்கு முன் எங்களுக்குப் பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள்.
பிறகு மக்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்தார்கள். எனவே, (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சிகளை) உண்ணாதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35