பாடம் : 27 குதிரையின் தன்மைகளில் விரும்பத்தகாத அம்சம்.
3814. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைகளில் "ஷிகால்" வகையை விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3815. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஷிகால் என்பது குதிரையின் வலப்பக்கப் பின் காலிலும் இடப்பக்க முன் காலிலும் வெள்ளை நிறம் இருப்பதாகும். அல்லது வலப்பக்க முன் காலிலும் இடப்பக்கப் பின் காலிலும் வெள்ளை நிறம் காணப்படுவதாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 28 அறப்போர் புரிதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதல் ஆகியவற்றின் சிறப்பு.
3816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காகவும், அவன்மீது கொண்ட நம்பிக்கையாலும் அவனுடைய தூதர்களை மெய்ப்படுத்துவதற்காகவும் என்றே யார் அவனுடைய பாதையில் புறப்படுகிறாரோ அவரைச் சொர்க்கத்தில் நுழைய வைக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான். அல்லது அவர் பெற்ற நன்மையுடன் அல்லது போர்ச்செல்வத்துடன் அவர் புறப்பட்ட வீட்டுக்கே அவரைத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்க்க அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! அல்லாஹ்வின் வழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர், அவர் காயப்பட்ட அதே நிலையில் மறுமை நாளில் வருவார். அவரது (விழுப்புண்ணிலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஸ்லிம்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை இல்லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய புறப்படும் அனைத்துப் படைப்பிரிவுகளிலும் கலந்து கொள்ளாமல் நான் ஒருபோதும் பின்தங்கமாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்.) ஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதிகள் இல்லை. அவர்களிடமும் வாகன வசதிகள் இல்லை. இந்நிலையில் என்னுடன் வராமல் பின்தங்கிவிடுவது அவர்களுக்கு மனவேதனையை உண்டாக்கும் (ஆகவேதான், அனைத்துப் படைப்பிரிவுகளிலும் நான் கலந்துகொள்ளவில்லை).
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர்க் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தனது பாதையில் அறப்போர் புரியச் சென்றவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பேன்; அல்லது (மறுமையின்) நற்பலன் அல்லது அவர் அடைந்துகொண்ட போர்ச் செல்வம் ஆகியவற்றுடன் அவர் புறப்பட்ட அவரது இல்லத்திற்கே அவரைத் திருப்பி அனுப்புவேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டான். அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடவும் அவனுடைய வார்த்தையை மெய்ப்பிக்கவுமே புறப்பட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்ட ஒருவர் -தனது பாதையில் காயப்படுத்தப்பட்டவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்- தமது (விழுப்புண்ணிலிருந்து) குருதி கொப்புளிக்கின்ற நிலையிலேயே மறுமை நாளில் வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3819. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயங்களும், தாக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைப் போன்று குருதி கொப்புளிக்கும் நிலையிலேயே மறுமை நாளில் காணப்படும். (அவரது காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். மணம் கஸ்தூரி மணமாயிருக்கும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போரிட புறப்பட்டுச் செல்லும் அனைத்துப் படைப்பிரிவுகளிலும் கலந்துகொள்ளாமல் நான் அமர்ந்திருக்க மாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்).
ஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதி இல்லை. என்னைப் பின்பற்றி வருவதற்கு அவர்களிடமும் எந்த வசதியும் இல்லை. நான் சென்ற பிறகு போரில் கலந்து கொள்ளாமல் அமர்ந்துகொண்டிருக்க அவர்களது மனமும் இடம் கொடுக்காது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லையாயின் நான் (அனுப்பிவைக்கும்) எந்தப் படைப்பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் பின்தங்கியிருக்கமாட்டேன்..." என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அதில் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்(பட்டு, மீண்டும் மீண்டும் கொல்லப்)பட வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று காணப்படுகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக் கில்லையாயின், நான் அனுப்பிவைக்கும் எந்தப் படைப்பிரிவிலும் நானும் கலந்து கொள்ளாமல் பின் தங்கியிருக்கமாட்டேன்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3820. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், தனது பாதையில் புறப்பட்டுச் சென்றவரை (சொர்க்கத்தில் நுழைவிப்பதற்கு, அல்லது மறுமையின் பிரதிபலனுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரது இல்லத்திற்குத் திருப்பியனுப்புவதற்கு) அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய புறப்பட்டுச் செல்லும் எந்தப் படைப்பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் பின்தங்கியிருக்க மாட்டேன்" என்பதோடு முடிவடைகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 29 அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) வீரமரணம் அடைவதன் சிறப்பு.
3821. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும் நிலையில் இறந்துபோகின்ற எவரும் உலகமும் உலகத்திலுள்ள செல்வங்களும் கிடைப்பதாக இருந்தாலும் (மீண்டும்) உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். (இறைவழியில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியைத் தவிர. அவர் வீரமரணத்திற்குக் கிடைக்கும் மேன்மையைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்கு மீண்டும் வந்து (இறைவழியில் போரிட்டு) கொல்லப்பட வேண்டும் என்றே ஆசைப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3822. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகத்திலுள்ள செல்வங்கள் அனைத்தும் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். உயிர்த் தியாகியைத் தவிர! அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்குத் திரும்பிவந்து (இறைவழியில் போரிட்டு) பத்து முறைகள் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3823. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவதற்கு நிகரான அறச்செயல் எது?" என்று கேட்கப்பட்டது. "அதற்கு நிகரான அறத்தைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். முன்பு போன்றே மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை (மக்கள்) கேட்டனர். ஒவ்வொரு முறையும் "அதைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்றே நபியவர்கள் பதிலளித்தார்கள்.
மூன்றாவது முறை, "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றவரின் நிலை, (இடைவிடாது) நோன்பு நோற்று, (இடைவிடாது) நின்று வணங்கி, அல்லாஹ்வின் வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வழியில் அறப்போரில் ஈடுபட்டவர் திரும்பி வருகின்றவரை (இதே நிலையில் உள்ளார்)" என்று கூறினார்கள.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3824. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர், "நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் எந்த ஒரு நற்செயலையும் செய்யாமலிருப்பதை ஒரு பொருட்டாகவே கருதமாட்டேன்; ஹாஜிகளுக்குக் குடிநீர் வழங்குவதைத் தவிர" என்று கூறினார். மற்றொருவர், "நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் எந்த ஒரு நற்செயலையும் செய்யாமலிருப்பதை ஒரு பொருட்டாகவே நான் கருதமாட்டேன்; "மஸ்ஜிதுல் ஹராம்" (புனிதப்) பள்ளிவாசலை நிர்வகிப்பதை தவிர" என்று சொன்னார். இன்னொருவர், "நீங்கள் சொல்வதையெல்லாம்விட அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவதே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்.
அப்போது அவர்கள் மூவரையும் உமர் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள். "நீங்கள் உங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடைக்கு அருகில் உயர்த்தாதீர்கள். இது ஒரு வெள்ளிக்கிழமை தினமாகும். நான் ஜுமுஆ தொழுகையை தொழுததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் விளக்கம் கேட்பேன்" என்று கூறினார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "ஹாஜிகளுக்குக் குடிநீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போன்று கருதுகிறீர்களா?" (9:19) எனும் வசனத்தை இறுதிவரை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் இருந்தேன்..." என்றே ஹதீஸ் துவங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 33
பாடம் : 30 இறைவழியில் (போரிட) காலையிலும் மாலையிலும் செல்வதன் சிறப்பு.
3825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச்) செல்கின்ற காலை நேரம் அல்லது மாலை நேரமானது, இவ்வுலகத்தைவிடவும் அதிலுள்ளவற்றை விடவும் சிறந்ததாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3827. அ. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆ. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின், நான் அனுப்பிவைக்கின்ற எந்தப் படைப்பிரிவிலும் நான் கலந்துகொள்ளாமல் பின்தங்க மாட்டேன். அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3828. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அந்த உலகத்தைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல் அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் தயாரித்து வைத்துள்ள படித்தரங்கள்.
3829. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என்னிடம்) "அபூசயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு வியப்படைந்த நான், "மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். (மீண்டும்) அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொன்றும் சொல்கிறேன். சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்" என்று கூறினார்கள்.
நான், "அது என்ன (நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன; கடனைத் தவிர!
3830. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள்.
பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.
மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால்...?" என்று கேட்டார் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3831. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஒருவர் மற்றொருவரைவிடக் கூடுதலாக அறிவிக்கிறார். "நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து மேற்கண்டவாறு கேட்டார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3833. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் வீரமணமடைவது அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும்; கடனைத் தவிர.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33