3554. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அனைவருடைய அறிவிப்பிலும் ‘மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்(ய வேண்டும்)’ என இடம்பெறறுள்ளது. ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் ‘இரண்டு ஆண்டுக் காலத்திற்கு அல்லது மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் சயீத் (ரஹ்), ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்), ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், ‘பின்னர் யாரேனும் ஒருவர் (கண்டெடுக்கப்பட்ட) அப்பொருனின் எண்ணிக்கையையும் பையையும் அதன் முடிச்சையும் தெரிவித்து (உன்னிடம்) வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிட’ என்று இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து வகீஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் அறிவிக்கும் அறிவிப்பில் ‘(அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால்) அது உனது செல்வத்தின் வகையைப் போன்றதாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. சுஃப்யானிடமிருந்து முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் ‘இல்லையென்றால், அதை நீ பயன்படுத்திக்கொள்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3555. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாஜிகள் தவறவிட்ட பொருளை எடுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
3556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் வழிகேட்டிலேயே உள்ளார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
பாடம் : 2 உரிமையாளரின் அனுமதியின்றி கால்நடையில் பால் கறப்பதற்கு வந்துள்ள தடை.
3557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி வேறெவரும் பால் கறக்கவேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்குப் பெட்டகத்திற்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்றுவிடுவதை விரும்புவாரா? கால் நடைகளின் மடிகள், கால்நடை உரிமையாளர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் உரிமையாளரின் அனுமதியின்றி எவரது கால்நடையிலும் பால் கறக்க வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்புகளிலும் "எடுத்துச் சென்றுவிடுவதை" என்பதைக் குறிக்க "ஃபயுன்தஸல" எனும் சொல் (மூலத்தில்) இடம்பெற்றுள்ளது. லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஃபயுன்தகல தஆமுஹு" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
பாடம் : 3 விருந்து உள்ளிட்ட உபசாரம்.
3558. அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்" என்று கூறினார்கள். மக்கள், "அவருடைய கொடை என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அவற்றுக்குப் பின்னால் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும்,அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3559. அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். ஒரு பகல் ஓர் இரவு (விருந்துபசாரம்) அவருடைய கொடையாகும். ஒரு முஸ்லிமான மனிதர், தம் சகோதரரிடம் அவரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை" என்று கூறினார்கள்.
மக்கள், "அவரைப் பாவத்தில் தள்ளுதல் எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவ(ர் தம் சகோதர)ரிடம் தங்கி இருப்பார். ஆனால், விருந்துபசாரம் செய்யுமளவுக்கு அவரிடம் எதுவுமே இருக்காது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3560. மேற்கண்ட ஹதீஸ் அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன். என் கண்ணால் பார்த்தேன்;எனது உள்ளம் மனனமிட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், "உங்களில் ஒருவர் தம் சகோதரரைப் பாவத்தில் தள்ளும் அளவுக்குத் தங்கியிருப்பதற்கு அனுமதி இல்லை" என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3561. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறீர்கள். நாங்கள் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கின்றனர். அவ்வாறெனில் (அது குறித்து) தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால்,அவர்களிடமிருந்து விருந்தினர்க(ளான உங்க)ளுக்குத் தேவை யான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
பாடம் : 4 தேவைக்கு மேல் எஞ்சியுள்ள செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கதாகும்.
3562. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும் இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்" என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றி (தேவைக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவருக்கு அவற்றைக் கொடுக்கட்டும் என்று) கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று நாங்கள் கருதினோம்.
அத்தியாயம் : 31
பாடம் : 5 பயணத்தில் உணவு குறைவாக இருந்தால், அதை மற்ற உணவுகளுடன் கலந்து பிறருக்கு உதவுவது விரும்பத்தக்கதாகும்.
3563. சலமா பின் அம்ர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("ஹவாஸின்" எனும்) ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது எங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, நாங்கள் எங்கள் வாகன ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்க முடிவு செய்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடமிருந்த (எஞ்சிய) உணவுப் பொருட்களைத் திரட்டும்படி உத்தரவிட்டார்கள்.
நாங்கள் அவ்வாறே செய்தோம். அதற்காக நாங்கள் தோல்விரிப்பு ஒன்றை விரித்துப் போட்டோம். அந்த விரிப்பின் மீது மக்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்தனர். அதில் எந்த அளவு உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளன என்பதை மதிப்பிடுவதற்காக நான் எட்டிப் பார்த்தேன். ஓர் ஆடு படுத்திருக்கும் இடம் அளவுக்கு உணவுப் பொருட்கள் குவிந்திருப்பதாக நான் மதிப்பிட்டேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்பும் அளவுக்கு அதிலிருந்து உண்டோம். பிறகு எங்கள் தோல் பைகளிலும் நிரப்பிக்கொண்டோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்குத் தண்ணீர் உள்ளதா?" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் தமது நீர்க் குவளையைக் கொண்டுவந்தார். அதில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அவர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார். அந்தத் தண்ணீரில் நாங்கள் அனைவரும் அங்கத் தூய்மை (உளூ) செய்தோம். நாங்கள் ஆயிரத்து நானூறு பேரும் தாராளமாக ஊற்றிக் கழுவினோம்.
அதன் பிறகு எட்டுப் பேர் வந்து "அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீர் உள்ளதா?" என்று கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அங்கத் தூய்மை செய்வதற்குரிய) தண்ணீர் தீர்ந்துவிட்டது" என்று கூறிவிட்டார்கள்.
அத்தியாயம் : 31

பாடம் : 1 இஸ்லாமிய அழைப்புச் செய்தி எட்டிய பிறகும் அதை ஏற்க மறு(த்து தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக இரு)ப்போர்மீது முன்னறிவிப்பின்றி தாக்குதல் தொடுப்பது செல்லும்.
3564. இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எதிரிகள்மீது) தாக்குதல் தொடுப்பதற்கு முன் அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பது பற்றிக் கேட்டு நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு பதில் எழுதினார்கள்.
அதில் அவர்கள், "இஸ்லாத்தின் ஆரம்பத்தில்தான் இவ்வாறு (அழைப்பு விடுக்கும் வழக்கம்) இருந்தது. (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பனுல் முஸ்தலிக்" குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்கள்மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போர் வீரர்களைக் கொன்றார்கள்; (பெண்கள், சிறார்கள் ஆகியோரைக்) கைதிகளாகப் பிடித்தார்கள்.
அன்றுதான் ஜுவைரியா (ரலி) அவர்களை, அல்லது பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக் கொண்டார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அப்போது (நபியவர்களின்) அப்படையில் இருந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சுலைம் பின் அக்ளர் (ரஹ்) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அன்றுதான் ஜுவைரியாவை உரிமையாக்கிக்கொண்டார்கள்" என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன். ஆனால், "பின்துல் ஹாரிஸை" என்று அவர் சொன்னது உறுதி.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களை உரிமையாக்கிக்கொண்டார்கள்" என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 2 தலைவர், படைப்பிரிவுகளுக்குத் தளபதிகளை நியமிப்பதும், போர் நெறிகள் குறித்து அவர்களுக்கு அவர் அறிவுறுத்துவதும்.
3565. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அடுத்து வரும் ஹதீஸை) எனக்கு அறிவித்த அல்கமா பின் மர்ஸத் (ரஹ்) அவர்கள், இதை எங்களுக்கு அறிவித்து,நன்கு எழுதி வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்.
இது இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3566. புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால்,தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; உம்முடைய எதிரிகளான இணைவைப்பாளர்களை நீர் சந்தித்தால் மூன்று அம்சங்களின் பக்கம் அவர்களை அழைப்பீராக.
அவற்றில் எந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வந்தாலும் அவர்களிடமிருந்து அதை ஏற்பீராக; நடவடிக்கையை நிறுத்தி விடுவீராக. பிறகு அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பீராக! அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களிடமிருந்து அதை ஏற்று, அவர்கள்மீது நடவடிக்கையை நிறுத்திவிடுவீராக.
பிறகு அவர்களை (அவர்கள் வசிக்கும்) அந்த ஊரிலிருந்து முஹாஜிர்கள் (நாடு துறந்தோர்) வசிக்கும் பகுதிக்கு வந்து குடியேறுமாறு அழைப்பீராக. மேலும், அவர்களிடம் "இவ்வாறு நீங்கள் செய்தால் முஹாஜிர்களுக்குக் கிடைக்கும் சாதகங்களும் முஹாஜிர்களுக்கு ஏற்படும் பாதகங்களும் உங்களுக்கும் உண்டு" என்று தெரிவித்துவிடுவீராக.
அங்கிருந்து இடம்பெயர அவர்கள் மறுத்தால் அவர்களிடம் கூறிவிடுங்கள்: முஸ்லிம்களில் நாட்டுப்புறத்தாரைப் போன்றுதான் நீங்களும் இருக்க வேண்டும்; மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்குப் பொருந்தும் அனைத்து இறைச்சட்டங்களும் உங்களுக்கும் பொருந்தும்.போர்ச் செல்வங்கள் (ஃகனீமத்) மற்றும் போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) சொத்துகள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது; முஸ்லிம்களுடன் இணைந்து அறப்போர்களில் ஈடுபட்டால் தவிர (அப்போது மட்டுமே அவர்களுக்கு அச்செல்வங்கள் கிடைக்கும் என்று கூறிவிடுங்கள்). அதற்கும் அவர்கள் மறுத்தால் அவர்களிடம் "ஜிஸ்யா" (இராணுவக்) காப்புவரியைக் கோருக.
அதையேற்று அவர்கள் உமக்கு இணங்கினால் அவர்களிடமிருந்து அதை ஒப்புக்கொண்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிடுவீராக. அதற்கும் அவர்கள் மறுத்தால், அல்லாஹ்விடம் உதவி கோரிவிட்டு, அவர்கள்மீது போர் தொடுப்பீராக. ஒரு கோட்டையை நீர் முற்று கையிடும்போது, அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதரின் பொறுப்பையும் நீங்கள் தர வேண்டுமென அவர்கள் விரும்பினால், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பை அவர்களுக்குத் தந்துவிடாதீர்.
மாறாக, அவர்களுக்கு உமது பொறுப்பையும் உம்முடைய தோழர்களின் பொறுப்பையுமே தருவீராக. ஏனெனில்,நீங்கள் உங்களது பொறுப்பையும் உங்களுடைய தோழர்களின் பொறுப்பையும் முறித்துக் கொள்வதானது,அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதருடைய பொறுப்பையும் முறித்துக்கொள்வதைவிட எளிதானதாகும்.
நீங்கள் ஒரு கோட்டைவாசிகளை முற்றுகையிடும்போது, அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது இறங்கிவருவதற்கு அவர்கள் விரும்பினால், அல்லாஹ்வின் தீர்ப்பிற்கு அவர்கள் இறங்கிவர உடனே அவர்களுக்கு அனுமதியளிக்காதீர். மாறாக,உம்முடைய தீர்ப்புக்கு இணங்கிவர அவர்களுக்கு அனுமதியளிப்பீராக. ஏனெனில், அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைச் சரியாக நீர் நிறை வேற்றுவீரா என்பது உமக்குத் தெரியாது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் (இதை அறிவித்துவிட்டு), "இவ்வாறுதான் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அல்லது இதைப்போன்று (வேறு வார்த்தைகளில்) அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 32
3567. மேற்கண்ட ஹதீஸ் புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரது தலைமையில் படையை அனுப்பி னால், அல்லது படைப்பிரிவை அனுப்பினால் அவரை அழைத்து அறிவுரை கூறுவார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
3568. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 3 மக்களிடம் எளிதாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பேற்றக் கூடாது எனும் கட்டளை.
3569. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் எவரையேனும் தமது (அரசியல் அல்லது மார்க்கப்)பணிக்காக அனுப்பும்போது, "(மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள்; (அவர்களுக்கு) வெறுப்பேற்றிவிடாதீர்கள்; (அவர்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்"என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3570. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, "(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும் போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். நீங்கள் இருவரும் (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். முரண்பட்டுக்கொள்ளாதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் இருவரும் (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்; முரண்பட்டுக்கொள்ளாதீர்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; (நற்செய்திகளைக் கூறி) அமைதிப்படுத்துங்கள்; (எச்சரிக்கும்போதுகூட) வெறுப்பேற்றி விடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும்.
3572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் (விசாரணைக்காக மக்களில்) முன்னோர் பின்னோர் அனைவரையும் ஒன்றுதிரட்டும்போது, (உலகில்) மோசடி செய்த ஒவ்வொருவனுக்கும் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று ஏற்றப்படும். பிறகு "இது இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)"என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று நடப்படும். அப்போது "அறிந்துகொள்ளுங்கள்: இது இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)"என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32