பாடம் : 5 தேவையின்றி அதிகமாகக் கேள்வி கேட்பது, தர வேண்டிய உரிமையைத் தர மறுப்பது, உரிமையில்லாததைத் தருமாறு கோருவது ஆகியவற்றுக்கு வந்துள்ள தடை.
3533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான். 1,2. அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும் அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும் விரும்புகின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 30
3534. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (வெறுக்கின்றான் என்பதைக் குறிக்க "யக்ரஹு" என்பதற்குப் பகரமாக) "யஸ்க(த்)து" என இடம்பெற்றுள்ளது. "பிரிந்துவிடாமலிருப்பதையும்" எனும் சொற்றொடர் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 30
3535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) மறுப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். மேலும், (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது,செல்வத்தை வீணாக்குவது ஆகிய மூன்றையும் உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்" என்று இல்லை.
அத்தியாயம் : 30
3536. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது, செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள்.
அத்தியாயம் : 30
3537. வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 6 நீதிபதி (தீர்ப்பின்போது) செய்த ஆய்வு சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அவருக்கு நன்மை உண்டு.
3538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு ஒரு நன்மை உண்டு.
இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இந்த ஹதீஸை நான் அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் "இவ்வாறே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசலமா (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்று யஸீத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என ஹதீஸின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 7 நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்பளிப்பது விரும்பத்தக்கதன்று.
3539. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) -அப்போது அவர் (ஈரான் -ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்த) "சிஜிஸ்தான்" பகுதியில் நீதிபதியாக இருந்தார்.- அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
(மகனே!) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், "கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்கவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும்.
3540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
3541. சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்"என்று கூறி (விளக்கம் கோரி)னேன்.
அதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், "அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்"என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 9 சாட்சிகளில் சிறந்தவர்.
3542. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "சாட்சிகளில் சிறந்தவர் யாரென உங்களுக்கு நான் சொல்லட்டுமா? சாட்சியளிக்கும்படி கோராமலேயே தாமாக முன்வந்து சாட்சியமளிப்பவரே அவர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 30
பாடம் : 10 சட்ட ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுதல்.
3543. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களது காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர். (ஒரு நாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் "உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது" என்று கூற, அதற்கு மற்றவள் "உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது" என்று சொன்னாள்.
ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின்மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் அவ்விருவரும் விஷயத்தைத் தெரிவித்தனர்.
அப்போது சுலைமான் (அலை) அவர்கள், "என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகிறேன்" என்று கூறினார்கள். உடனே இளையவள், (பதறிப்போய்) "அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன் தான்" என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்தபோதும் மூத்தவள் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தாள்.) ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்துகொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றுதான் நான் (கத்திக்கு) "சிக்கீன்"எனும் சொல்லை (நபியவர்கள் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) "முத்யா" எனும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந்தோம்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 30
பாடம் : 11 வழக்காடும் இருவருக்கிடையே நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும்.
3544. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கிய அந்த மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை வாங்கிக்கொள். உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்க வில்லை" என்று கூறினார்.
நிலத்தை விற்றவரோ, "நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)" என்று கூறினார்.
(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனரா?" என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான்" என்று சொன்னார். மற்றொருவர், "எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார். தீர்ப்புச் சொன்னவர், "அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார்.
அத்தியாயம் : 30

3545. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொணடேயிரு. அதன் உரிமையாளர் (தேடி) வந்தால் (கொடுத்துவிடு) இல்லையேல் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள்.
அந்த மனிதர், “வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஒநாய்க்கு உரியது” என்று கூறினார்கள்.
அந்த மனிதர், “வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன்க்கும் அதற்கும் என்ன தொடர்பு? (குடிப்பதற்கு) அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (திமிலும்), (நடப்பதற்கு) அதன் கால்குளம்பும் உள்ளது. அதை அதன் உரிமையாளன் சந்திக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக்கொள்கிறது) மரத்திலிருந்து (அதன் இலைதழைகளைத்) தின்கிறது (அதைப் பற்றி நீ ஏன் கவலைப் பட வேண்டும்?)” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 31
3546. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு.. அதன் முடிச்சையும் (மூடியையும்) பையையும் (உறையையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடு.. (வராவிட்டால்) நீயே செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள்.
அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். “அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஓநாய்க்குரியது” என்று சொன்னார்கள்.
அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதை கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களின் ‘இரு கன்னங்களும்’ அல்லது ‘அவர்களது முகம்’ சிவந்து விட்டது. பிறகு ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? (நடப்பதற்கு) அதனுடன் கால்குளம்பும் (குடிப்பதற்கு) அதனுடன் தண்ணீர் பையும் (திமிலும்) உள்ளது. அதை அதன் உரிமையாளர் சந்திக்கும்வரை (சுயமாக அது வாழ்ந்துகொள்கிறது)’ என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 31
3547. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அம்ர் பின அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(ஓராண்டுக் காலத்திற்குள்) அதைத் தேடிக்கொண்டு யாரும் வராவிட்டால் நீயே அதைச் செலவழித்துக்கொள்’ என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3548. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து....’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில், ‘இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமும் நெற்றியும் சிவந்துவிட்டன. அவர்கள் கோபமடைந்தார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ‘ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்பதற்குப் பிறகு ‘அதன் உரிமையாளர் வராவிட்டால் உன்னிடம் அது அடைப்கலமா இருக்கட்டும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3549. நபித்தோழர் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவை பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. (அதற்கு உரியவரை) நீ கண்டுடிபிடிக்காவிட்டால் நீயே அதைச் செலவிட்டுக்கொள். ஆனால், அது உன்னிடம் அடைக்கலமாகவே இருக்கட்டும். ஆதைத் தேடிக்கொண்டு யாரும் என்றைக்காவது ஒரு நாள் வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்துவிடு’ என்ற கூறினார்கள்.
அவர்களிடம் கேள்வி கேட்டவர், வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி கேட்டதற்கு, ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு (அதன் வழியில்) அதை விட்டுவிடு. ஏனெனில், அதனுடன் (நடப்பதற்கு) கால்குளம்பும், (குடிப்பதற்கு) அதன் தண்ணீர்ப் பையும்(திமிலும்) உள்ளது. அதை அதன் உரிமையாளர் கண்டுபிடிக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது. மரங்களிலுருந்து (இலைகளை) தின்கிறது (அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படவேண்டும்?)’ என்று கூறினார்கள்.
அவர்களிடம் (வழிதவறி வந்த) ஆட்டைப் பற்றி அவர் கேட்டபோது, ‘நீ அதைப் பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக் குரியது அல்லது ஓநாய்க்குரியது’ என்று விடையளித்தார்கள.
அத்தியாயம் : 31
3550. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்த ஒட்டகத்தை பற்றிக் கேட்டார்’ என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அவற்றில் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் அர்ரஃயு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் தம் கன்னங்கள் சிவக்குமளவுக்குக் கோபப்பட்டார்கள்’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘அதன் உரிமையாளர் (அதை தேடிக்கொண்டு) வந்து, (நீ அதன் அடையாளத்தைப் பற்றி கேட்கும்போது) அவர் அதன் பையையும் எண்ணிக்கையையும் முடிச்சையும் (சரியாக) அறிந்திருந்தால் அவரிடம் அதைக் கொடுத்துவிடு. இல்லையேல், அது உனக்கே உரியது’ என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31
3551. ஸைத் பின் காலித் அல்ஜுஹனி (ரழி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள் “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்பச் செய்து கொண்டேயிரு (அதற்குரியவர்) அறியப்படாவிட்டால் அதன் பையையும் முடிச்சையும் நீ அறிந்து வைத்துகொள். பிறகு நீ அதை உண்ணலாம. பிறகு அதற்குரியவர் வந்தால் அவரிடம் அ(தற்குரிய)தை செலுத்திவிடு” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 31
3552. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “பின்னர் அதற்குரியவர் அறிந்து கொள்ளப்பட்டால் அதை (அவரிடம்) ஒப்படைத்துவிடு. இல்லையென்றால், அதன் பையையும் முடிச்சையும் எண்ணிக்கையையும் நீ அறிந்து வைத்துக்கொள்” என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 31