3450. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் மக்களிடம், "அல்கஸாமா சத்தியம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், "அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நம்மிடம் இன்னின்னவாறு கூறினார்கள்" என்றார்கள். நான், என்னிடமும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு "உரைனா" குலத்தார் பற்றிய ஹதீஸை (மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று) அறிவித்தேன்.
நான் அந்த ஹதீஸை அறிவித்து முடித்ததும் அன்பஸா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ் தூயவன்!" என (வியப்புடன்) கூறினார்கள். நான், "அன்பஸா அவர்களே! என்மீது சந்தேகப் படுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; இவ்வாறுதான் எம்மிடமும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, "சிரியாவாசிகளே! "இவர்" (அபூ கிலாபா) அல்லது "இவரைப் போன்றவர்" உங்களிடையே இருக்கும்வரை நீங்கள் நன்மையில் நீடிப்பீர்கள்"என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உக்ல் குலத்தாரில் எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் "அவர்க(ளது காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்துவதற்காகக் கை, கால் நரம்புக)ளுக்குச் சூடிடவில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3451. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உரைனா" குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழியும் அளித்தனர். அப்போது மதீனாவில் நுரையீரல் சவ்வு அழற்சி நோய் ஏற்பட்டிருந்தது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் சுமார் இருபது அன்சாரீ இளைஞர்கள் இருந்தனர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உரைனா" கூட்டத்தாரைப் பிடித்து வர அனுப்பினார்கள். அவர்களுடன் காலடித் தடங்களை அறியும் தடய நிபுணர் ஒருவரையும் அனுப்பினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உரைனா குலத்தாரில் ஒரு குழுவினர்" என்று இடம்பெற்றுள்ளது. சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர்"என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 28
3452. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த ஒட்டக மேய்ப்பர்களின் கண்களில் அவர்கள் சூடிட்டதால்தான் அவர்களுடைய கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச் செய்தார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 3 கல் போன்ற கனரகப் பொருட்களாலும் கூராயுதங்களாலும் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு என்பதற்கான ஆதாரமும் பெண்ணைக் கொன்றதற்காக ஆண் கொல்லப்படுவதும்.
3453. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதனொருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கல் எறிந்து கொன்று விட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை" என்று தலையாட்டினாள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று (ஒரு மனிதரது பெயரைக் குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள் "ஆம்" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவன் ஒப்புக்கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரு கற்களுக்கிடையே அவனது தலையை வைத்து நசுக்கிக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3454. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவன் அன்சாரிகளில் ஒரு சிறுமியை, அவள் அணிந்திருந்த நகைக்காகக் கொலை செய்து, அவளை ஒரு பாழடைந்த கிணற்றில் போட்டு, அவளது தலையைக் கல்லால் நசுக்கினான். அவன் பிடிக்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். சாகும்வரை அவனைக் கல்லால் அடிக்குமாறு (மரண தண்டனை விதித்து) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கல்லால் எறிந்து கொல்லப்பட்டான்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3455. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். மக்கள் அவளிடம், "உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்ன மனிதனா? இன்ன மனிதனா?" என்று கேட்டார்கள். யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி ("ஆம் அவன்தான்" என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு (விசாரிக்கப்பட்டதில்), குற்றத்தை ஒப்புக்கொண்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 4 ஒரு மனிதன், தனது உயிரையோ உறுப்பையோ தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக அவனைப் பிடித்துத் தள்ளியதில் அவனது உயிருக்கோ உறுப்புக்கோ சேதம் ஏற்பட்டால், (பிடித்துத் தள்ளிய) அந்த மனிதன் அதற்குப் பொறுப்பாளி அல்லன்.
3456. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யஅலா பின் முன்யா (அல்லது யஅலா பின் உமய்யா - ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை கடிபட்டவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டிருப்பானா? "பல்லிழந்த) இவருக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கடித்தவரின் முன்பற்கள் இரண்டு விழுந்துவிட்டன" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் வாயிலாக இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3457. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் முன்கையைக் கடித்தார். அந்த மனிதர் தமது கையை இழுக்க, (கடித்த) அவரது முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். "நீ அவரது இறைச்சியை உண்ணப் பார்த்தாய் (அதனால் அவர் கையை இழுத்தார். எனவே, உனது பல்லுக்கு இழப்பீடு இல்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3458. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்களு டைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒரு மனிதர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, (கடித்த) அந்த மனிதரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், "கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கரத்தை நீ கடிக்கப் பார்த்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3459. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவருடைய "முன்பல் ஒன்று" அல்லது "முன்பற்கள்" விழுந்துவிட்டன. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உதவியை நாடினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று நீ கடித்துக் கொண்டிருக்கும்வரை அவர் தமது கையை உனது வாய்க்குள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடச் சொல்கிறாயா? நீ உனது கையை அவர் கடித்து முடிக்கும்வரை அவரது வாய்க்குள் விட்டுவை. பிறகு இழுத்துப் பார் (தெரியும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 28
3460. யஅலா பின் முன்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தபோது, (கடிபட்ட) அவர் தமது கையை இழுக்க, அவரது (அதாவது கடித்தவரது) முன்பற்கள் இரண்டு விழுந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என) அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேலும் "நீ அவரை, கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கப் பார்த்தாய்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3461. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். - என்னைப் பொறுத்தவரை என் செயல்களிலேயே அந்த அறப்போர்தான் என்னிடம் மிகவும் வலுவானதாகும் -என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதருடன் சண்டையிட்டார். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரின் கையைக் கடித்துவிட்டார்.
(யஅலா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் அவர்களுடைய புதல்வர் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் "கடித்தவர் யார் என்று என்னிடம் அறிவித்தார்கள் (நான்தான் மறந்துவிட்டேன்)" என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)
கடிபட்டவர் கடித்தவரின் வாயிலிருந்து தமது கையை இழுத்தார். அப்போது அவருடைய முன்பற்களில் இரண்டில் ஒன்று கழன்று (விழுந்து)விட்டது. பிறகு இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது முன்பல்லுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 5 பற்கள் போன்றவற்றில் பழிக்குப்பழி உண்டு என்பதற்கான ஆதாரம்.
3462. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், "பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)" என்று கூறினார்கள்.
அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்" என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், "அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது" என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 6 ஒரு முஸ்லிமுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான காரணங்கள்.
3463. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்" என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை.
அவை: 1. திருமணமானவன் விபசாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. "ஜமாஅத்" எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமது மார்க்கத்தைக் கைவிட்ட (தேசதுரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3464. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (ஆற்றிய உரையில் பின்வருமாறு) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்" என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவர்களில்) மூன்று பேரைத் தவிர: 1. "ஜமாஅத்" எனும் கூட்டமைப்பைவிட்டு வெளியேறி இஸ்லாத்தைக் கைவிட்டவன். 2. திருமணமாகியும் விபசாரம் செய்தவன். 3. ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக கொல்லப்பட வேண்டியவன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இந்த ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ" எனும் (பிரமாண) வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 28
பாடம் : 7 கொலையை ஆரம்பித்துவைத்தவர் மீதுள்ள குற்றம்.
3465. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகில்) அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கு ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்த முதல் மனிதர் ஆவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஜரீர் பின் அப்தில் ஹமீத் மற்றும் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்தவர்" என்று இடம் பெற்றுள்ளது. "முதல் மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 28
பாடம் : 8 மறுமையில் வழங்கப்படும் கொலைக்கான தண்டனையும், மறுமை நாளில் மனிதர்களிடையே முதலாவதாக அளிக்கப்படும் தீர்ப்பு கொலை தொடர்பானதாகவே இருக்கும் என்பதும்.
3466. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகவே இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சிலரது அறிவிப்பில் ("தீர்ப்பு வழங்கப்படும்" என்பதைக் குறிக்க) "யுக்ளா" எனும் சொல்லும், வேறுசிலரது அறிவிப்பில் "யுஹ்கமு" எனும் சொல்லும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 9 மனிதர்களின் உயிர், சுயமரியாதை, செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
3467. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையேயுள்ள "முளர்" குலத்தாரின் ரஜப் மாதமாகும்" என்று சொன்னார்கள்.
பிறகு "இது எந்த மாதம்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது துல்ஹஜ் இல்லையா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்றோம்.
பிறகு "இது எந்த நகரம்?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்று கூறினோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது "அல்பல்தா" (மக்காவின் பெயர்களில் ஒன்று) அல்லவா?" என்று கேட்க, நாங்கள் "ஆம்" என்றோம். மேலும் "இது எந்த நாள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
பிறகு "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களின் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (அவற்றுக்கு ஊறு விளைவிப்பதற்கு உங்களுக்கு அனுமதியில்லை.) நீங்கள் மறுமையில் உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் "நிராகரிப்பாளர்களாய்" அல்லது "வழிகெட்டவர்களாய்" நீங்கள் மாறிவிடாதீர்கள்.
இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்குச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்" என்று கூறினார்கள். பிறகு "நான் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3468. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஹ்ருடைய) அந்நாளில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது "இது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?"என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு,) "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
மேலும் "இது எந்த மாதம்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்" என்று சொன்னோம். அவர்கள் "இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றோம்.
மேலும், "இது எந்த நகரம்?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்"என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு), "இது "அல்பல்தா" (புனித நகரம் மக்கா) அல்லவா?" என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று விடையளித்தோம்.
அப்போது அவர்கள், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (இதை) இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
பிறகு கறுப்பு கலந்த இரு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் திரும்பி, அவற்றை அறுத்தார்கள். மேலும்,ஆட்டிறைச்சியில் சிறிதளவு எடுத்து எங்களிடையே பங்கிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(நஹ்ருடைய) நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்தார்கள். ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 28
3469. மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது "இது எந்த நாள்?" என்று கேட்டார்கள்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அவற்றில் "உங்கள் மானம்" என்பதும் "பிறகு இரு செம்மறியாட்டு கடாக்களின் பக்கம் திரும்பினார்கள்" என்பதும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம் பெறவில்லை.
அவற்றில் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இந்த நாள் எந்த அளவுக்குப் புனிதமானதோ அதைப் போன்றே (உங்கள் உயிர்களும் உடைமைகளும்) நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள்வரை உங்களுக்குப் புனிதமானவையாகும்" என்று கூறிவிட்டு "நான் (இறைச்செய்திகளை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்றோம். அவர்கள் "இறைவா! நீயே இதற்குச் சாட்சியாக இரு" என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28