பாடம் : 1 "அல்கஸாமா" சத்தியம்.
3439. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
(அம்மூவரில்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் தம்முடன் வந்த (வயதில் பெயரி)வர்களை முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசப்போனார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரியவர்களைப் பேசவிடு" என்று சொன்னார்கள். உடனே அப்துர் ரஹ்மான் அமைதியாகிவிட்டார். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவ்விருவருடனும் பேசினார்கள்.
அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை" அல்லது "உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை" எடுத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?"என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) ஏற்க முடியும்?" என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
அத்தியாயம் : 28
3440. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பேரீச்சந்தோட்டத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். யூதர்கள்மீது (அவர்கள்தாம் கொன்றிருப்பார்கள் என) சந்தேகம் ஏற்பட்டது.
ஆகவே, அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர்களான ஹுவய்யிஸா (ரலி) மற்றும் முஹய்யிஸா (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தம் சகோதரர் (கொலை) தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) பேசினார்கள். அம்மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "பெரியவர்களைப் பேசவிடு" அல்லது "வயதில் பெரியவர் முதலில் பேசட்டும்" என்று கூறினார்கள்.
அவர்கள் இருவரும் (கொல்லப்பட்ட) தம் உறவினர் தொடர்பாகப் பேசியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஐம்பது பேர் யூதர்களில் (கொலை செய்த) மனிதருக்கெதிராகச் சத்தியம் செய்ய வேண்டும். அதையடுத்துக் கொலையாளியின் கழுத்தில் கயிற்றை மாட்டி அவன் ஒப்படைக்கப்படுவான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், "சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நாங்கள் எப்படிச் சத்தியம் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், யூதர்களில் ஐம்பது பேர் (நாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை எனச்) சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிக்கட்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நிராகரிக்கும் சமுதாயத்தார் ஆயிற்றே? (அவர்களுடைய சத்தியங்களை நாம் எப்படி ஏற்க முடியும்?)" என்று கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஒரு நாள் நான் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களது ஒட்டகத் தொழுவத்திற்குச் சென்றேன். (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்று தனது காலால் என்னை உதைத்துவிட்டது.
அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இவ்வாறு(தான் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.) அல்லது இதைப் போன்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்" என இடம்பெற்றுள்ளது. "ஒட்டகம் என்னை உதைத்து விட்டது" எனும் குறிப்பு அதில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3441. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அன்சாரிகள் என்றும் பின்னர் பனூ ஹாரிஸா குலத்தார் என்றும் அறியப்பட்டவர்களான அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். கைபர், அன்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பகுதியாயிருந்தது. யூதர்களே அங்கு வசித்துவந்தார்கள். (அங்கு சென்றதும்) அவர்கள் இருவரும் தம் தேவைக்காகத் தனித்தனியே பிரிந்துசென்றனர்.
அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு (அத்தோட் டத்திலுள்ள) ஒரு தண்ணீர் தொட்டியில் கிடப்பதைக் கண்டார்கள். உடனே முஹய் யிஸா (ரலி) அவர்கள் அவரை (எடுத்து) அடக்கம் செய்துவிட்டு, மதீனாவை நோக்கி வந்தார்கள். கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (உறவினர்களான) முஹய்யிஸா (ரலி) மற்றும் ஹுவய்யிஸா (ரலி) ஆகியோரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்துல்லாஹ் (ரலி) அவர்களது நிலை குறித்தும் அவர் கொல்லப்பட்டுக் கிடந்த இடத்தைப் பற்றியும் தெரிவித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ்வை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என்று) உங்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு) பெறும் உரிமையை"அல்லது "உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை" எடுத்துக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சம்பவம் நடந்த இடத்தில் நாங்கள் இருக்கவுமில்லை; சம்பவத்தைப் பார்க்கவும் இல்லையே!" என்று கேட்டார்கள்.
"அப்படியானால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிப்பார்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியத்தை எப்படி நாங்கள் ஏற்க முடியும்?" என்று கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ்வின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
அத்தியாயம் : 28
3442. மேற்கண்ட ஹதீஸ் புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்சாரிகளில் பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) எனக் கூறப்படும் ஒரு மனிதரும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் எனக் கூறப்படும் அவருடைய தந்தையின் சகோதரர் ஒருவரும் (கைபர் பகுதியை நோக்கிச்) சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்று, "ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்" என்பதுவரை இடம் பெற்றுள்ளது.
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு கூடுதலாக) இடம் பெற்றுள்ளது:
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உயிரீட்டுத் தொகையாக வழங்கப்பட்ட அந்த ஒட்டகங்களில் ஒன்று ஒட்டகத் தொழுவத்தில் வைத்து என்னை உதைத்து விட்டது.
அத்தியாயம் : 28
3443. சஹ்ல் பின் அபீஹஸ்மா அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்(கள் அன்சாரி)களில் சிலர் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கு அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல், தாமே நூறு தர்ம ஒட்டகங்களை உயிரீட்டுத் தொகையாக வழங்கினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3444. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் பெரியவர்கள் சிலரிடமிருந்து (கேட்டுக்) கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சம் பழங்கள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். பின்னர் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்து தெரிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு "நீர் நிலையில்" அல்லது "குழியில்" கிடந்தார். பிறகு யூதர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்தாம் அவரைக் கொலை செய்தீர்கள்" என்று நான் கூறினேன். யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் கொல்லவில்லை" என்று கூறினர்.
பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்கள் தம் குலத்தாரை நோக்கி வந்து அவர்களிடமும் அதைப் பற்றித் தெரிவித்தார்கள். பின்னர் அவரும் அவரைவிட வயதில் மூத்தவரான அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் மற்றும் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (நபியவர்களிடம்) வந்தார்கள். அப்போது கைபரில் அப்துல்லாஹ்வுடன் இருந்த முஹய்யிஸா (ரலி) அவர்கள் (அவர்கள் இருவரையும் முந்திக் கொண்டு) பேச ஆரம்பித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், "வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு" என்று கூறினார்கள். எனவே, (முதலில்) ஹுவய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு முஹய்யிஸா பேசினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்வதன் மூலம் யூதர்களே கொலை செய்தார்கள் என்பது நிரூபணமானால்,) ஒன்று அவர்கள் (கொல்லப்பட்ட) உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கட்டும்! அல்லது (நம்முடன் நடந்த சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொண்டு) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
பிறகு இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை" எனப் பதில் எழுதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அகியோரிடம், "(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை யூதர்கள்தாம் கொலை செய்தார்கள் என்று) சத்தியம் செய்து,நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்து பழிவாங்கிக்கொள்ளும்) உரிமையை பெற்றுக்கொள்கிறீர்களா?"என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மூவரும் "இல்லை" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் உங்கள் குற்றச்சாட்டுக்கு (மறுப்புத் தெரிவித்து) யூதர்கள் சத்தியம் செய்வர்" என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், "அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே (யூதர்கள் பொய் சத்தியம் செய்வதற்குக்கூட தயங்கமாட்டார்கள்)" என்று கூறினர்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை கொடுத்துவிட்டார்கள். அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவை அவர்களது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.
சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்த ஒட்டகங்களில் சிவப்பு ஒட்டகம் ஒன்று தனது காலால் என்னை உதைத்து விட்டது.
அத்தியாயம் : 28
3445. அன்சாரீ நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் இருந்துவந்த "அல்கஸாமா" சத்திய முறையை நீடிக்கச் செய்தார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3446. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் சிலர் "யூதர்கள் தங்களில் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக" குற்றம் சாட்டியபோது இவ்வாறே (சத்தியம் செய்யுமாறு) தீர்ப்பளித்தார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
பாடம் : 2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்கும் உரிய (தண்டனைச்) சட்டம்.
3447. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உரைனா" குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு வந்(து தங்கியிருந்)தபோது, அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் தர்ம ஒட்டகங்களிடம் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி (நிவாரணமடைந்து) கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் செய்து குணமடைந்தனர். பிறகு (நபியவர்களின்) ஒட்டக மேய்ப்பாளர்களைத் தாக்கிக் கொலை செய்தனர்; இஸ்லாத்திலிருந்து வெளியேறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர்.
இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைப் பிடித்துவர) ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டுவரப்பட்டதும் (பல கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களது (இடக்) கையையும் (வலக்) காலையும் துண்டித்தார்கள்; அவர்களது கண்களில் சூடிட்டார்கள்; பிறகு சாகும்வரை அவர்களை "ஹர்ரா"ப் பகுதியில் போட்டுவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3448. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உக்ல்" குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிமொழி அளித்(து மதீனாவில் தங்கியிருந்)தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்களது உடல் நோய் கண்டது. எனவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப்பற்றி முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம் ஒட்டக மேய்ப்பருடன் ஒட்டகங்களிருக்கும் இடத்திற்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் பயன்படுத்தி (நிவாரணம் பெற்று)க் கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் "சரி" என்று கூறி, புறப்பட்டுச் சென்று ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அந்த ஒட்டக மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர்.
இவ்விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடிக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கை கால்களைத் துண்டித்து, அவர்களின் கண்களில் சூடிடுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் சாகும்வரை ("ஹர்ரா"ப் பகுதியில்) வெயிலில் போடப்பட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அஸ்ஸப்பாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கால்நடைகளை அவர்கள் ஓட்டிச் சென்று விட்டனர்; அவர்களின் கண்களுக்குச் சூடிடப்பட்டது"என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3449. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உக்ல் மற்றும் உரைனா குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை. (அவர்கள் உடல் நலிவுற்றனர்.) எனவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பால் ஒட்டகங்களிடம் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில் "அவர்களின் கண்களுக்குச் சூடு போடப்பட்டு, அவர்கள் "ஹர்ரா"ப் பகுதியில் போடப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப்படவில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3450. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் மக்களிடம், "அல்கஸாமா சத்தியம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், "அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நம்மிடம் இன்னின்னவாறு கூறினார்கள்" என்றார்கள். நான், என்னிடமும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு "உரைனா" குலத்தார் பற்றிய ஹதீஸை (மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று) அறிவித்தேன்.
நான் அந்த ஹதீஸை அறிவித்து முடித்ததும் அன்பஸா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ் தூயவன்!" என (வியப்புடன்) கூறினார்கள். நான், "அன்பஸா அவர்களே! என்மீது சந்தேகப் படுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; இவ்வாறுதான் எம்மிடமும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, "சிரியாவாசிகளே! "இவர்" (அபூ கிலாபா) அல்லது "இவரைப் போன்றவர்" உங்களிடையே இருக்கும்வரை நீங்கள் நன்மையில் நீடிப்பீர்கள்"என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உக்ல் குலத்தாரில் எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் "அவர்க(ளது காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்துவதற்காகக் கை, கால் நரம்புக)ளுக்குச் சூடிடவில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3451. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உரைனா" குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழியும் அளித்தனர். அப்போது மதீனாவில் நுரையீரல் சவ்வு அழற்சி நோய் ஏற்பட்டிருந்தது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் சுமார் இருபது அன்சாரீ இளைஞர்கள் இருந்தனர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உரைனா" கூட்டத்தாரைப் பிடித்து வர அனுப்பினார்கள். அவர்களுடன் காலடித் தடங்களை அறியும் தடய நிபுணர் ஒருவரையும் அனுப்பினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உரைனா குலத்தாரில் ஒரு குழுவினர்" என்று இடம்பெற்றுள்ளது. சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர்"என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 28
3452. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த ஒட்டக மேய்ப்பர்களின் கண்களில் அவர்கள் சூடிட்டதால்தான் அவர்களுடைய கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச் செய்தார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 3 கல் போன்ற கனரகப் பொருட்களாலும் கூராயுதங்களாலும் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு என்பதற்கான ஆதாரமும் பெண்ணைக் கொன்றதற்காக ஆண் கொல்லப்படுவதும்.
3453. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதனொருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கல் எறிந்து கொன்று விட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை" என்று தலையாட்டினாள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று (ஒரு மனிதரது பெயரைக் குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள் "ஆம்" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவன் ஒப்புக்கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரு கற்களுக்கிடையே அவனது தலையை வைத்து நசுக்கிக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 28
3454. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவன் அன்சாரிகளில் ஒரு சிறுமியை, அவள் அணிந்திருந்த நகைக்காகக் கொலை செய்து, அவளை ஒரு பாழடைந்த கிணற்றில் போட்டு, அவளது தலையைக் கல்லால் நசுக்கினான். அவன் பிடிக்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். சாகும்வரை அவனைக் கல்லால் அடிக்குமாறு (மரண தண்டனை விதித்து) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கல்லால் எறிந்து கொல்லப்பட்டான்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3455. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். மக்கள் அவளிடம், "உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்ன மனிதனா? இன்ன மனிதனா?" என்று கேட்டார்கள். யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி ("ஆம் அவன்தான்" என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு (விசாரிக்கப்பட்டதில்), குற்றத்தை ஒப்புக்கொண்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 28
பாடம் : 4 ஒரு மனிதன், தனது உயிரையோ உறுப்பையோ தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக அவனைப் பிடித்துத் தள்ளியதில் அவனது உயிருக்கோ உறுப்புக்கோ சேதம் ஏற்பட்டால், (பிடித்துத் தள்ளிய) அந்த மனிதன் அதற்குப் பொறுப்பாளி அல்லன்.
3456. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யஅலா பின் முன்யா (அல்லது யஅலா பின் உமய்யா - ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை கடிபட்டவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டிருப்பானா? "பல்லிழந்த) இவருக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கடித்தவரின் முன்பற்கள் இரண்டு விழுந்துவிட்டன" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் வாயிலாக இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28
3457. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் முன்கையைக் கடித்தார். அந்த மனிதர் தமது கையை இழுக்க, (கடித்த) அவரது முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். "நீ அவரது இறைச்சியை உண்ணப் பார்த்தாய் (அதனால் அவர் கையை இழுத்தார். எனவே, உனது பல்லுக்கு இழப்பீடு இல்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28
3458. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஅலா பின் உமய்யா (ரலி) அவர்களு டைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒரு மனிதர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, (கடித்த) அந்த மனிதரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், "கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கரத்தை நீ கடிக்கப் பார்த்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 28