3387. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் நண்பர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சிரமப்போர் படையுடன் செல்லவிருந்தனர். (தபூக் போர்தான் அது) அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும் படி என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளனர்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தர இயலாது" என்று சொன்னார்கள். நான் அங்கு போன நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்தார்கள். (அது) எனக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததாலும் என்மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்களோ என்ற அச்சத்தாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். இது நடந்து சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், "அப்துல்லாஹ் பின் கைஸே!" என்று பிலால் (ரலி) அவர்கள் (என்னை) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் அவரது அழைப்புக்குப் பதிலளித்தேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள், "உங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்" என்று சொன்னார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், "(இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்) இவ்விரு ஒட்டகங்களையும் இவ்விரு ஒட்டகங்களையும் இவ்விரு ஒட்டகங்களையும்" என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி "பிடித்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். அவற்றை அப்போதுதான் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். "உங்கள் நண்பர்களிடம் இவற்றைக் கொண்டுசென்று, "அல்லாஹ்" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்" (அறிவிப்பாளரின் ஐயம்) இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துள்ளார்கள். எனவே, இவற்றில் ஏறிப் புறப்படச் சொன்னார்கள்" எனத் தெரிவியுங்கள்" என்றார்கள்.
அவ்வாறே நான் என் தோழர்களிடம் அவற்றைக் கொண்டுசென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவற்றில் ஏறிப் பயணம் செல்லும்படி கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (வாகனம்) கேட்டதையும், முதலில் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததையும், பின்னர் அவற்றை வழங்கியதையும் அறிந்த மக்களிடம் விசாரிக்கும் வரையில் நான் உங்களை விடமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நான் உங்களிடம் சொல்லி விட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது" என்று சொன்னேன்.
அதற்கு என் தோழர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "(அதற்கெல்லாம் அவசியமில்லை) உங்களை நாங்கள் உண்மையாளர் என்றே உறுதியாக நம்புகிறோம். (இருப்பினும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதால்) உங்கள் விருப்பப்படி நாங்கள் செய்கிறோம்" என்று கூறினர். நான் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு "நான் அவர்களுக்குத் தரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே வழங்கியதையும் அறிந்த சிலரிடம் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் தெரிவித்ததைப் போன்றே தெரிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3388. ஸஹ்தம் பின் முளர்ரிப் அர்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் தமது உணவுத்தட்டைக் கொண்டு வரச்சொன்னார்கள். அதில் கோழி இறைச்சி இருந்தது. அப்போது "பனூ தைமுல்லாஹ்" எனும் குலத்தைச் சேர்ந்த சிவப்பான ஒரு மனிதர் உள்ளே வந்தார். அவர் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் போன்றிருந்தார். அவரை அபூமூசா (ரலி) அவர்கள் "நீ(யும்) வா (சாப்பிடு)" என்றழைத்தார்கள். ஆனால், அவர் தயங்கினார்.
அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், "இங்கே வா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கோழி இறைச்சியை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் "இந்தக் கோழி (இனம் அசுத்தம்) எதையோ தின்பதைக் கண்டு அதனால் அருவருப்படைந்து அதை உண்ணமாட்டேன் என்று நான் சத்தியம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இங்கே வா! நான் உனக்கு இதைப் பற்றி (விவரமாக)த் தெரிவிக்கிறேன்: நான் என் "அஷ்அரீ" குலத்தார் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்கள் பயணத்திற்கு வேண்டிய வாகனம் கேட்டுச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்கள் பயணத்திற்கு வேண்டிய வாகனம் தரமாட்டேன். நீங்கள் பயணம் செய்வதற்கு என்னிடம் வாகனம் ஏதுமில்லை" என்று கூறிவிட்டார்கள்.
நாங்கள் அல்லாஹ் நாடிய நேரம்வரை அங்கேயே இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் சில கொண்டுவரப்பட்டன. உடனே எங்களை அழைத்து, வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை (ஐந்து ஜோடி ஒட்டகங்களை) எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள்.
நாங்கள் (ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு திரும்பிச்) சென்றபோது, நாங்கள் எங்களுக்குள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அவர்களது சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பிவிட்டோம். இதில் நமக்கு வளம் வழங்கப்படாது" என்று பேசிக்கொண்டோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச்சென்று, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் பயணத்திற்கு வேண்டிய ஒட்டகங்கள் கேட்டு உங்களிடம் நாங்கள் வந்தோம். நீங்கள் ஒட்டகங்கள் தரமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்கள். பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் வழங்கினீர்கள். (உங்களது சத்தியத்தை) மறந்துவிட்டீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நாடினால் நான் ஒரு சத்தியம் செய்து, அஃதல்லாத வேறொன்றை அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக நான் கருதினால், அந்த வேறொன்றையே செய்வேன். சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்து விடுவேன். நீங்கள் செல்லுங்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வே உங்களுக்கு ஒட்டகங்களை வழங்கினான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது: "ஜர்ம்" குலத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தாருக்கும் "அஷ்அரீ" குலத்தாருக்குமிடையே நட்பும் சகோதரத்துவமும் இருந்து வந்தது. நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுக்குக் கோழி இறைச்சியுடன் உணவு பரிமாறப்பட்டது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸஹ்தம் அல்ஜர்மீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் கோழி இறைச்சி உண்டு கொண்டிருந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் அதில், "அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தச் சத்தியத்)தை நான் மறக்கவில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3389. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எங்கள் பயணத்திற்கு வேண்டிய ஒட்டகங்கள் கேட்டுச் சென்றோம். அப்போது அவர்கள், "உங்களை ஏற்றியனுப்ப என்னிடம் ஒட்டகங்கள் எதுவுமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் பயணத்திற்குரிய ஒட்டகங்களை நான் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். பிறகு எங்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகளை (மூன்று ஜோடி ஒட்டகங்களை) அனுப்பி வைத்தார்கள். அப்போது நாங்கள் "நாம் நமது பயணத்திற்குத் தேவையான ஒட்டகங்கள் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்கள் நமக்கு ஒட்டகம் தரமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்களே!" என்று கூறிவிட்டு, அவர்களிடம் (திரும்பிச் சென்று) அதைப் பற்றித் தெரிவித்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒரு சத்தியம் செய்து, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நான் கருதினால், அந்த வேறொன்றையே செய்வேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் (தபூக் போரின்போது) நடைப்பயணமாகவே சென்றோம். எனவே, நாங்கள் ஏறிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒட்டகம் கேட்டுச் சென்றோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 27
3390. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இரவு (நேரத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதுவிட்டு) நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து விட்டுப் பிறகு தம் வீட்டாரிடம் திரும்பிச் சென்றார். (காலம் தாழ்ந்து சென்றதால்) குழந்தைகள் அனைவரும் உறங்கிவிட்டிருப்பதைக் கண்டார். அப்போது அவருடைய மனைவி அவருக்கு உணவு கொண்டுவந்தார். அப்போது அவர் உண்ண மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டார். அவருடைய குழந்தைகள் (உறங்கிவிட்டது)தான் அதற்குக் காரணம். பிறகு அவருக்கு ஏதோ தோன்ற, உணவு உட்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அது குறித்துத் தெரிவித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் ஒரு சத்தியம் செய்து விட்டு, அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக வேறொன்றைக் கருதினால், அந்த வேறொன்றையே அவர் செய்யட்டும். சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்" என்றார்கள்.
அத்தியாயம் : 27
3391. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் தனது சத்தியத்தை முறித்துப் பரிகாரம் செய்துவிட்டு, (அந்த வேறொன்றையே) செய்யட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3392. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3393. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3394. தமீம் பின் தரஃபா அத்தாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் உதவி கேட்டு வந்தார். "ஒரு பணியாளரை விலைக்கு வாங்கும் கிரயத் தொகையை" அல்லது "ஒரு பணியாளரை விலைக்கு வாங்கும் கிரயத் தொகையில் ஒரு பகுதியை"த் தரும்படி கேட்டார். அப்போது அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள், "உமக்குத் தர என்னிடம் (இப்போது) எனது கவச ஆடையையும் எனது தலைக் கவசத்தையும் தவிர வேறொன்றுமில்லை. எனவே, நான் என் குடும்பத்தாருக்குக் கடிதம் எழுதுகிறேன். அவர்கள் உமக்கு அந்தத் தொகையைத் தருவார்கள்" என்று கூறினார்கள்.
ஆனால், அந்த மனிதர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதீ (ரலி) அவர்கள் கோபமடைந்து, "கேட்டுக்கொள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உமக்கு ஒன்றுமே நான் தரமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் சம்மதித்தார். அப்போது அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள், "கேட்டுக்கொள்: "ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு,அஃதல்லாத வேறொன்றை அதைவிட இறையச்சத்திற்குரிய செயலாகக் கருதும்பட்சத்தில் அந்த இறையச்சத்திற்குரிய செயலையே அவர் செய்யட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை (மட்டும்) நான் கேட்டிராவிட்டால், நான் எனது சத்தியத்தை முறித்திருக்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 27
3395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; தமது சத்தியத்தைக் கைவிடட்டும்.
இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3396. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு சத்தியம் செய்து விட்டு, அஃதல்லாத வேறொன்றை அதை விடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சத்தியத்தை முறித்துப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்.
இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3397. தமீம் பின் தரஃபா அத்தாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் நூறு திர்ஹங்கள் கேட்டார். அப்போது அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் "ஹாத்திம் அத்தாயீயின் மகனான என்னிடம் (மிகக் குறைந்த தொகையான) நூறு திர்ஹங்கள் கேட்கிறாயே! அல்லாஹ்வின் மீதாணையாக! உமக்கு நான் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். பிறகு (சத்தியத்தை முறித்து அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டு) "ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக அவர் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிராவிட்டால், (நான் எனது சத்தியத்தை முறித்திருக்கமாட்டேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் தமீம் பின் தரஃபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உமக்கு எனது நன்கொடையில் நானூறு திர்ஹங்கள் கிடைக்கும்" என்று அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3398. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துர் ரஹ்மான் பின் சமுரா! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால், அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய் (இறையுதவி கிட்டாது). கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால், அந்தப் பொறுப்பில் (இறைவனின்) உதவி நல்கப்படுவாய். நீ ஒரு சத்தியம் செய்து, அஃதல்லாத வேறொன்றை அதை விடச் சிறந்ததாக நீ கண்டால், உனது சத்தியத்(தை முறித்துவிட்டு, முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஅதமிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஆட்சிப் பொறுப்பு தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
பாடம் : 4 சத்தியம் செய்யச் சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும்.
3399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் தோழன் (பிரதிவாதி) எந்த விஷயத்தில் உன்னை மெய்யாக்குவானோ அந்த விஷயத்தின் மீதே உனது சத்தியம் அமையும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்தியம் செய்யச் சொன்னவரின் எண்ணப்படியே சத்தியம் அமையும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
பாடம் : 5 (சத்தியத்தின்போது) "இன்ஷா அல்லாஹ்" கூறுதல்.
3401. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தனர். (ஒரு நாள்) அவர்கள், "நான் இன்றிரவு அவர்கள் அனைவரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் கர்ப்பமுற்று, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள். (அவ்வாறே சென்று தாம்பத்தியத்தில் ஈடுபட்டார்கள்.) ஆனால், துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும்கூட (ஒரு தோளுடைய) அரை மனிதனையே பெற்றெடுத்தார்.
சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" ("அல்லாஹ் நாடினால்" அவ்வாறு பெற்றெடுப்பர்) என்று கூறியிருந்தால், அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3402. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒரு முறை) இறைத்தூதர் சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள் "நான் இன்றிரவு (என்னுடைய) எழுபது துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது சுலைமான் நபியின் "தோழர் ஒருவர்" அல்லது "வானவர் ஒருவர்" "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்,அவ்வாறு பெற்றெடுப்பார்கள்) என்று சொல்லுங்கள்" என சுலைமான் (அலை) அவர்களிடம் கூறினார்.
சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூற மறந்துவிட்டார்கள். அதனால் அவர்களுடைய துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு தோளுடைய அரைக் குழந்தையையே பெற்றெடுத்தார்.
சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" (அல்லாஹ் நாடினால்) என்று கூறியிருந்தால் தமது சத்தியத்தை அடையாமல் இருந்திருக்கமாட்டார்கள்; தமது தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3403. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (ஒரு முறை) சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள், "நான் இன்றிரவு (என்னுடைய) எழுபது துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனச் சொல்லுங்கள்" என்று கூறப்பட்டது.
ஆனால், அவர்கள் அவ்வாறு கூறாமல் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்தார்கள். அவர்களுடைய துணைவியரில் எவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை; ஒரே ஒருவரைத் தவிர. அந்த ஒருவரும் (ஒரு தோளுடைய) அரை மனிதரையே பெற்றெடுத்தார். சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறியிருந்தால் தமது சத்தியத்தை அடையாமல் இருந்திருக்கமாட்டார்கள்; தமது தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.
அத்தியாயம் : 27
3404. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒரு முறை) சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள், "நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களுடைய தோழர் ஒருவர், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனச் சொல்லுங்கள்" என்றார். சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாமல், தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்தார்கள். அவர்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு தோளுடைய (அரை) மனிதரையே பெற்றெடுத்தார்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! சுலைமான் (அலை) அவர்கள் "இன்ஷா அல்லாஹ்" என்று கூறியிருந்தால், (அவர்கள் ஒவ்வொருவரும் வீரர்களைப் பெற்றெடுத்து) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் குதிரை வீரர்களாக அறப்போர் புரிந்திருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (வீர) மகனைக் கருக்கொண்டிருப்பார்கள்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
பாடம் : 6 தடை செய்யப்படாத ஒன்றாகவே இருந்தாலும், குடும்பத்தாரைப் பாதிக்கும் வகையில் ஒருவர் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருக்கலாகாது.
3405. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இதுவும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பதானது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவர்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிட அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும்.
அத்தியாயம் : 27
பாடம் : 7 இறைமறுப்பாளரின் நேர்த்திக்கடனும் அவர் இஸ்லாத்தை ஏற்ற பின் அந்த விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறையும்.
3406. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! "மஸ்ஜிதுல் ஹராம்" புனிதப் பள்ளிவாசலில் ஓர் இரவு "இஃதிகாஃப்" வழிபாடு மேற்கொள்வதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்றலமா?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூஉசாமா (ரஹ்) மற்றும் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஓர் இரவு இஃதிகாஃப்" என்று இடம்பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு பகல் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ந்துகொண்டார்கள்" என்று காணப்படுகிறது. ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ஒரு பகல் என்றோ ஓர் இரவு என்றோ குறிப்பு இல்லை. (இஃதிகாஃப் இருப்பதாக நேர்ந்துகொண்டார்கள் என்று பொதுவாகவே இடம் பெற்றுள்ளது.)
அத்தியாயம் : 27