3333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால்,அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையை நிறுத்திவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு பொருளை ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டால், அது அந்த மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 24
3334. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்ட மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், "நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும்,உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன்" என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப் பட்டவருக்கே உரியதாகும். அது (அவரது ஆயுட் காலத்திற்குப் பின்), அன்பளிப்பு வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
3335. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்" என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். "உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்" என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்கே திரும்பிவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள், "இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் இவ்வாறே தீர்ப்பளித்துவந்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3336. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இது உனக்கும் உன் சந்ததிக்கும் ஆயுட்கால அன்பளிப்பாகும்" என்று கூறி அன்பளிப்பு வழங்கப்பட்ட ஒரு செல்வத்தின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கே உரியதாகிவிடும். அதில் நிபந்தனை விதிப்பதற்கோ விதிவிலக்குப் பெறுவதற்கோ அன்பளிப்பு வழங்கியவருக்கு அனுமதி கிடையாது"என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள், "ஏனெனில், அவர் (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச்சேரும் வகையிலேயே நன்கொடை வழங்கியுள்ளார். அந்த வாரிசுரிமை அவரது நிபந்தனையைத் துண்டித்துவிட்டது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3337. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப் பட்ட ஒரு பொருள், அன்பளிப்பாக வழங்கப்பட்டவருக்கே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆயுட்கால அன்பளிப்பு வழங்கப்படும் பொருள் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்து) உங்கள் செல்வங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்; அவற்றை வீணாக்கி விடாதீர்கள். ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) வழங்கினால் அது யாருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்; அவர் உயிரோடிருந்தாலும் சரி,இறந்துவிட்டாலும் சரி. பிறகு அவருடைய சந்ததிகளுக்கு உரியதாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
3339. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், பின்வரும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: அன்சாரிகள் முஹாஜிர்களுக்கு ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) வழங்கலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உஙகள் செல்வங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். (அவசரப்பட்டு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கி விடாதீர்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24
3340. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் புதல்வர் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக (உம்றா) வழங்கினார். பிறகு அந்தப் புதல்வர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணும் இறந்துவிட்டார். அந்தப் புதல்வர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்தப் புதல்வருக்குச் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் ஆயுட்கால அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் ஆவர். (அந்தப் புதல்வரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் "தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்" என்று கூறினர். அன்பளிப்புப் பெற்ற அப்புதல்வரின் மகன்கள், "இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது"என்று கூறினர்.
பின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றனர். தாரிக் பின் அம்ர், (தம்மிடம்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களை வரவழைத்(து அதைப் பற்றி விசாரித்)தார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் "ஆயுட்கால அன்பளிப்பு,அன்பளிப்பு பெற்றவருக்கே உரியதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சாட்சியமளித்தார்கள்.
இதன்படியே தாரிக் பின் அம்ரும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவித்தார். ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான் "ஜாபிர் சொன்னது உண்மையே" என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். அந்தத் தோட்டம் ஆயுட்கால அன்பளிப்புப் பெற்ற அப்புதல்வரின் மகன்களிடமே இன்றுவரை இருந்துவருகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3341. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டே தாரிக் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் "ஆயுட்கால அன்பளிப்பு, (அன்பளிப்புப் பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பிறகு அவருடைய) வாரிசுகளுக்கே உரியதாகும்" என்று தீர்ப்பளித்தார்கள்.
இத்தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3342. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா) செல்லும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3343. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயுட்கால அன்பளிப்பு (உம்றா), அன்பளிப்பு பெற்றவரின் வாரிசுரிமையாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
3344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயுட்கால அன்பளிப்பு செல்லும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசுரிமையாகும்" என்றோ, அல்லது "அது செல்லும்" என்றோ கூறினார்கள்" என (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24

3345. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் தமது செல்வம் ஒன்றில் இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்பினால், அவர் தமது இறுதி விருப்பத்தை எழுதித் தம்மிடம் (தயாராக) வைத்துக் கொள்ளாமல் இரண்டு இரவுகளைக்கூட கழிப்பதற்கு அனுமதியில்லை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
3346. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் மற்றும் முஹம்மத் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "இறுதி விருப்பம் தெரிவிக்க ஏதேனும் செல்வத்தைப் பெற்றிருந்தால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்பினால்..." என இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 25
3347. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்பிலும் "இறுதி விருப்பம் தெரிவிக்க ஏதேனும் ஒரு செல்வத்தைப் பெற்றிருந்தால்" என்றே இடம்பெற்றுள்ளது. அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "இறுதி விருப்பம் தெரிவிக்க விரும்பினால்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 25
3348. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் இறுதி விருப்பம் தெரிவிக்க ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருந்தால், அவர் தமது இறுதி விருப்பத்தை எழுதித் தம்மிடம் வைத்திருக்காமல் மூன்று இரவுகளைக்கூடக் கழிப்பதற்கு அனுமதியில்லை.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்றதிலிருந்து எனது இறுதி விருப்பத்தை எழுதி என்னிடம் வைத்திருக்காமல் ஓர் இரவைக்கூட நான் கழித்ததில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 25
பாடம் : 1 மூன்றில் ஒரு பாகத்திலேயே இறுதி விருப்பம் செல்லும்.
3349. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது (நான் மக்காவிலிருந்த சமயம் எனக்கு ஏற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர்நோக்கியிருந்தேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தனாகிய எனக்கு, என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் நோய் என்னைப் பீடித்துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பாகங்களைத் தர்மம் செய்துவிடட்டுமா?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வேண்டாம்" என்றார்கள். நான், "அவ்வாறாயின், என் சொத்தில் பாதியைத் தர்மம் செய்யட்டுமா?" என்று கேட்டேன். அதற்கும் "வேண்டாம்" என்று சொன்ன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பாகம் (வேண்டுமானால் தர்மம் செய்யலாம்). மூன்றில் ஒரு பாகமேகூட அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விரும்பிச் செய்கின்ற தர்மம் எதுவாயினும் அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிரதிபலன் வழங்கப்படும். எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவுக்கும்கூட (உங்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படும்)"என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்கள் அனைவரும் மதீனாவுக்குச் சென்று விடுவார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) என் தோழர்களைவிட்டுப் பின்தங்கியவனாக ஆகி விடுவேனா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் இங்கு இருந்தபோதிலும் அல்லாஹ்வின் உவப்பை நாடி நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் தகுதியும் மேன்மையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும்" எனக் கூறிவிட்டு, "உங்களை வைத்துச் சில கூட்டத்தார் நன்மையடைவதற்காகவும் வேறுசிலர் துன்பமடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்க வைக்கப்படலாம்" என்று கூறினார்கள்.
மேலும், "இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் அடிச்சுவடுகளின் வழியே (முந்திய இணை வைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே" எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்து விட்டதற்காக, "பாவம் சஅத் பின் கவ்லா! (அவர் மீண்டும் ஹிஜ்ரத் பூமிக்கே திரும்பிச் செல்ல விரும்பினார். ஆனால்,நடக்கவில்லை)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில், "என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் தெரிவித்த அனுதாபம் இடம்பெறவில்லை. ஆயினும் அதில், "நான் எந்த மண்ணை விட்டு நாடு துறந்து சென்றேனோ அதே மண்ணிலேயே இறப்பதை வெறுத்தேன்" என்று சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 25
3350. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உடல் நலிவுற்றிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பினேன். (அவர்கள் வந்தபோது,) "நான் விரும்பிய முறையில் என் செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுக்க என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்கள். "அவ்வாறாயின் பாதியாவது (அறவழியில் செலவிட அனுமதியுங்கள்)" என்று கேட்டேன். அதற்கும் மறுப்புத் தெரிவித்தார்கள். நான் "(என் செல்வத்தில்) மூன்றில் ஒரு பாகத்தை (தர்மம் செய்ய அனுமதியுங்கள்)" என்று கேட்டபோது அமைதியாக இருந்தார்கள். இதன் பின்னரே மூன்றில் ஒரு பாகம் (இறுதி விருப்பம் தெரிவிக்க) அனுமதிக்கப்பட்டதாயிற்று.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இதன் பின்னரே மூன்றில் ஒரு பாகம் (இறுதி விருப்பம் தெரிவிக்க) அனுமதிக்கப் பட்டதாயிற்று" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 25
3351. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் நோயுற்றிருந்தபோது) என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான், "என் செல்வங்கள் அனைத்திலும் இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்" என்றார்கள். நான், "அவ்வாறாயின் (என் செல்வத்தில்) பாதியில் (இறுதி விருப்பம் தெரிவித்து விடட்டுமா)?" என்று கேட்டேன். அதற்கும் "வேண்டாம்" என்றார்கள். நான் "மூன்றில் ஒரு பாகத்திலாவது (இறுதி விருப்பம்) தெரிவிக்கட்டுமா)?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்; மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 25
3352. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள். "நான் சஅத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நாடு துறந்து சென்ற இந்த மண்ணிலேயே (மக்காவிலேயே) இறந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்" என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக! இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக!" என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகிறாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்றார்கள். நான் "மூன்றில் இரண்டு பாகங்களில் (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா)?" என்று கேட்டேன்.
அதற்கும் "வேண்டாம்" என்றார்கள். "அவ்வாறாயின் பாதியிலாவது (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா)?" என்று கேட்டேன். அதற்கும் "வேண்டாம்" என்று சொன்னார்கள். "அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும் (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா)?" என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) ஈவதும் ஈகைதான். நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் ஈகைதான். உமது செல்வத்திலிருந்து உம்முடைய துணைவி உண்பதும் ஈகைதான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் (அல்லது நல்ல நிலையில்) விட்டுச்செல்வதே சிறந்ததாகும்" என்று கூறினார்கள். ("கையேந்தும் நிலையில்" என்று கூறும்போது) தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.
இதை (பின்னாளில் பிறந்த) சஅத் (ரலி) அவர்களின் மூன்று புதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 25