3277. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள். (அதற்காக) இரும்புக் கவசத்தை அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3278. சுலைமான் பின் மிஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகத்தில் (சலம்) அடைமானம் பற்றிப் பேசினோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள்; அதற்காகத் தமது இரும்புக் கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என நமக்கு அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - அதில், "இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
பாடம் : 25 முன்பண வணிகம் (சலம்).
3279. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஓராண்டு அல்லது ஈராண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி,பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர். நபி(ஸல்) அவர்கள், "ஒருவர் (இவ்வாறு) பின்னால் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட எடைக்காகவும் அளவுக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (பின்னர் பொருளைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி) மக்கள் முன்பணம் செலுத்திவந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பொருளைப் பின்னர் பெற்றுக் கொள்வதாகக் கூறி) முன்பணம் கொடுப்பவர், குறிப்பிட்ட அளவுக்காகவும் குறிப்பிட்ட எடைக்காகவுமே முன்பணம் கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குறிப்பிட்ட தவணைக்கு" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குறிப்பிட்ட தவணைக்கு" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 26 உணவுப் பொருட்களைப் பதுக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
3281. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பதுக்கல் செய்பவன் பாவியாவான்" என்று சொன்னார்கள் என மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள். அப்போது சயீத் பின் அல் முசய்யப் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் பதுக்குகிறீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை அறிவித்துவந்த மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் பதுக்குபவராகவே இருந்தார்கள்"என்றார்கள்.
அத்தியாயம் : 22
3282. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாவியே பதுக்கல் செய்வான்.
இதை மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் பனூ அதீ பின் கஅப் குலத்தைச் சேர்ந்த மஅமர் பின் அப்தில்லாஹ் பின் நாஃபிஉ பின் அபீமஅமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 27 வியாபாரத்தில் (தேவையில்லாமல்) சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
3283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்தியம் செய்வது பொருளை விலை போகச் செய்யும்; இலாபத்தை அழித்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அது (பொருளை) விலைபோகச் செய்யும்; பின்னர் (வளத்தை) அழித்துவிடும்.
இதை அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 28 விலைக்கோள் உரிமை (அஷ் ஷுஃப்ஆ).
3285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருக்குக் கூட்டாக உள்ள குடியிருப்பு அல்லது தோட்டத்தில் தம்முடைய (பங்கை விற்க நாடுபவர்) பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் விற்பதற்கு உரிமை இல்லை. பங்காளி விரும்பினால் அதை வாங்கிக்கொள்வார்;விரும்பாவிட்டால் விட்டுவிடுவார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3286. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிரிக்கப்படாத குடியிருப்பு, அல்லது தோட்டத்தில் விலைக்கோள் உரிமை உள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பங்காளிக்கு அறிவிப்புச் செய்வதற்கு முன்னர் (தமது பங்கை) விற்க ஒருவருக்கு அனுமதி இல்லை. பங்காளி விரும்பினால் அதை வாங்கிக்கொள்வார்; விரும்பாவிட்டால் விட்டுவிடுவார். அவரிடம் அறிவிக்காமல் விற்றுவிட்டாலும் அவரே அதிக உரிமையுடையவர் ஆவார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3287. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிலம், வீடு, தோட்டம் ஆகிய (பிரிக்கப்படாத) கூட்டுச் சொத்துகள் ஒவ்வொன்றிலும் விலைக்கோள் உரிமை உள்ளது. எனவே, பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் விற்பது தகாது. ஒன்று அவரே வாங்கிக் கொள்வார்; அல்லது விட்டுவிடுவார். அவர் (தம் பங்காளிக்கு அறிவிக்க) மறுத்தாலும் பங்காளியே அதற்கு மிகவும் உரிமையுடையவர் ஆவார்; அவரிடம் அறிவிக்கும்வரை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 29 அண்டை வீட்டாரின் சுவரில் மரக்கட்டையைப் பதிப்பது.
3288. அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒருவர் தமது வீட்டுச் சுவரில் தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்" என்று கூறினார்கள்" என்று சொல்லிவிட்டு, "என்ன இது? (நபியவர்களின்) இ(ந்த உபதேசத்)தைப் புறக்கணிப்பவர்களாகவே உங்களை நான் காண்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும்) இதை நான் உங்களுக்கு வலியுறுத்திக் கொண்டுதான் இருப்பேன்"என்று கூறுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 30 அநீதியிழைத்தல், பிறர் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப் பட்டுள்ளன.
3289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3290. சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், "அவளையும் அந்த வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், "யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு" என்று கூறினேன்.
இந்த ஹதீஸை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். "சயீத் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது" என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக்குழியாக அமைந்தது.
அத்தியாயம் : 22
3291. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார் என அர்வா பின்த் உவைஸ் (அல்லது உனைஸ்) என்ற பெண் குற்றம் சாட்டினார். (அப்போதைய மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமிடம் சயீதுக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கேட்டார்கள்.
அதற்கு மர்வான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், "யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.அதற்கு மர்வான், "இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்" என்றார்கள்.
அப்போது சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் "இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் அவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.
அத்தியாயம் : 22
3292. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதி யி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையின்றி ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டாமல் விடுவதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3294. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனக்கும் என் கூட்டத்தாருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்துவந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூசலமா! மண்ணாசையைத் தவிர்த்துக் கொள்க! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அநியாயமாக ஒரு சாண் அளவு நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 31 பாதை விஷயத்தில் பிரச்சினை ஏற்படும்போது, பாதைக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவு.
3295. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாதை விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், ஏழு முழங்கள் அகலமுள்ள நிலத்தைப் பொதுவழியாக ஆக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22

பாடம் : ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்.
3296. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்.ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23