3260. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் ஒருவரான நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் (சிரியா) நகரில் மக்களுக்கு உரையாற்றும்போது, "அனுமதிக்கப்பெற்றதும் தெளிவானது; தடைசெய்யப் பட்டதும் தெளிவானது..." என்று தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பில் "வேலிக்குள்ளேயே மேயவிட நேரும்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 21 ஒட்டகத்தை விற்பதும், (விற்றவர் குறிப்பிட்ட தூரம்வரை) அதில் பயணம் செய்துகொள்வேன் என நிபந்தனை விதிப்பதும்.
3261. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு பயணத்திலிருந்து திரும்பு கையில்) நன்றாக இயங்காதிருந்த எனது ஒட்டகத்தில் சென்றுகொண்டிருந்தேன். அதற்கு ஓய்வு கொடுக்க நான் எண்ணியிருந்தேன். அப்போது என்னிடம் வந்து சேர்ந்த நபி (ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள்; எனது ஒட்டகத்தை அடித்தார்கள். அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (மிக வேகமாக) ஓடியது. பிறகு நபி (ஸல்) அவர்கள் "இ(ந்த ஒட்டகத்)தை ஓர் "ஊக்கியா"வுக்கு எனக்கு விற்றுவிடு" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். பிறகு (மீண்டும்) "இதை எனக்கு விற்றுவிடு" என்று கேட்டார்கள். நான் ஓர் "ஊக்கியா"வுக்கு அதை விற்றேன்; ஆனால், என் வீட்டாரிடம் போய்ச் சேரும்வரை அதில் பயணம் செய்துகொள்வதற்கு என்னை அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டேன். (அவர்களும் அந்த நிபந்தனையை ஏற்றார்கள்.)
நான் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்தபோது, அந்த ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டுசென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது, எனக்குப் பின்னாலேயே நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் அழைத்து), "உனது ஒட்டகத்தை நான் எடுத்துக்கொள்வதற்காக அதன் விலையை நான் குறைத்து விடுவேன் என நீ எண்ணிக்கொண்டாயா? (என்னிடம் தர வேண்டிய) உனது ஒட்டகத்தையும், உனக்குச் சேர வேண்டிய வெள்ளிக் காசுகளையும் நீயே எடுத்துக்கொள். அது உனக்குரியதுதான்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3262. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். நன்றாக இயங்காதிருந்த, நடக்க முடியாமல் நடந்துகொண்டிருந்த, தண்ணீர் சுமக்கும் எனது ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து நான் சென்றுகொண்டிருந்தபோது (வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். என்னிடம், "உனது ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான் "நோய் கண்டுள்ளது" என்றேன்.
அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்று பின்வாங்கி அதை அதட்டினார்கள்; அதற்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள். உடனே அது (வேகமாக ஓடி) எல்லா ஒட்டகங்களுக்கும் முன்னே சென்றுகொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "உனது ஒட்டகத்தை (இப்போது) எப்படிக் காண்கிறாய்?" என்று கேட்டார்கள். நான் "நல்ல நிலையில் காண்கிறேன். தங்களது (பிரார்த்தனையின்) வளம் அதற்குக் கிடைத்து விட்டது" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அதை எனக்கு விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான் (நபியவர்களுக்கு விலைக்கு விற்க) வெட்கப்பட்டேன். (அத் துடன்) எங்களிடம் அதைத் தவிர தண்ணீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்க வில்லை. பின்னர் நான், "சரி (விற்றுவிடுகிறேன்) என்றேன். ஆயினும், மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்றுவிட்டேன்.
பின்னர், "அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளை" என்று சொல்லி (ஊருக்கு விரைவாகச் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, நான் மக்களைவிட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்துவிட்டேன். அப்போது என் தாய் மாமன் (ஜத்து பின் கைஸ் அவர்கள் என்னைச்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை என்ன செய்தேன் என்பதை அவரிடம் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் கடிந்துகொண்டார்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி) மதீனாவுக்கு விரைவாக செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், "நீ யாரை மணந்து கொண்டாய்? கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?" என்று கேட்டார்கள். நான், "கன்னி கழிந்த பெண்ணைத்தான் மணந்துகொண்டேன்" என்றேன். "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே?"என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) "இறந்துவிட்டார்கள்" அல்லது "கொல்லப்பட்டு விட்டார்கள்". ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ,அவர்களைப் பராமரிக்கவோ முன்வராத, அவர்களைப் போன்றே (அனுபவமற்ற இளவயதுப் பெண்) ஒருத்தியை மணந்து, அவர்களிடம் அழைத்துச் செல்ல நான் விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் (வாழ்ந்து பக்குவப்பட்ட) கன்னி கழிந்த ஒரு பெண்ணையே நான் மணந்துகொண்டேன்" என்று விடையளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, காலையில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் (அன்பளிப்பாக).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3263. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வந்துகொண்டிருந்தோம். அப்போது எனது ஒட்டகத்திற்கு நோய் ஏற்பட்டுவிட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. பின்வரும் தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது இந்த ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடு" என்று கேட்டார்கள். நான், "இல்லை; அது உங்களுக்கே உரியது (விலை வேண்டாம்)" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அதை எனக்கு விலைக்கு விற்றுவிடு" என்றார்கள். நான், "இல்லை (விலை வேண்டாம்) இது உங்களுக்கு உரியது, அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அவர்கள், "இல்லை, அதை நீ எனக்கு விற்றுவிடு" என்றார்கள். "அவ்வாறாயின் நான் ஒருவருக்கு ஓர் "ஊக்கியா" தங்கம் கடனாகக் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் கடனுக்குப் பகரமாக இதை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இதை வாங்கிக்கொண்டேன். (உன் கோரிக்கைப்படி) மதீனா வரை இதன் மீது அமர்ந்துகொண்டு வந்துசேர்" என்றார்கள்.
நான் மதீனாவுக்கு வந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்கு ஓர் "ஊக்கியா" தங்கத்தையும் இன்னும் கூடுதலாகவும் கொடுங்கள்" என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் என்னிடம் ஓர் "ஊக்கியா" தங்கமும் கொடுத்தார்கள். மேலும், கூடுதலாக ஒரு "கீராத்"தும் கொடுத்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடுதலாகத் தந்த (கீராத்தான)து என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது" என்று நான் கூறிக்கொண்டேன். அந்த ஒரு "கீராத்" எனது பணப்பையிலேயே இருந்துவந்தது. பின்னர் "ஹர்ரா"ப் போர்நாளில் சிரியாவாசிகள் அதை எடுத்துக்கொண்டு விட்டார்கள்.
அத்தியாயம் : 22
3264. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எனது ஒட்டகம் பின்தங்கிவிட்டது..."என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தைக் குத்தினார்கள். பிறகு என்னிடம், அல்லாஹ்வின் பெயரால் இதில் ஏறிச்செல் என்றார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், "எனக்கு அதிகமாகக் கொடுத்துக்கொண்டே "அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3265. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) எனது ஒட்டகம் நன்றாக இயங்காதிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். பிறகு எனது ஒட்டகத்தைக் குத்தினார்கள். அது குதித்தோடலாயிற்று. பின்னர் நபி (ஸல்) அவர்கள் சொல்வதைக் கேட்பதற்காக அதன் கடிவாளத்தைப் பிடித்து அதன் வேகத்தை மட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்த போது, "அதை எனக்கு விற்றுவிடு" என்றார்கள். நான் அதை ஐந்து "ஊக்கியா"க்களுக்கு அவர்களுக்கு விற்றுவிட்டேன்.
அப்போது "மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின்பேரில்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் "மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணம் செய்துகொள்ளலாம்" என்றார்கள். நான் மதீனா வந்து சேர்ந்தபோது, அந்த ஒட்டகத்தை அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டுசென்றேன். (அதன் விலையையும்) கூடுதலாக ஓர் "ஊக்கியா"வும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பின்னர் அந்த ஒட்டகத்தையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 22
3266. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் -("அறப்போர் வீரனாக" என்றும் கூறினார்கள் என்றே எண்ணுகிறேன்)- கலந்துகொண்டேன். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், பின்வருமாறு கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிர்! (ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது. விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3267. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) இரண்டு "ஊக்கியா"க்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகிலுள்ள) "ஸிரார்"எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறு(த்து சமை)க்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள்.
மதீனாவுக்கு வந்தபோது, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (பின்னர்) ஒட்டகத்தின் விலையை எனக்குக் கொடுத்தார்கள். சற்று தாராளமாகவே நிறுத்தார்கள்.
அத்தியாயம் : 22
3268. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒரு தொகையைக் குறிப்பிட்டு என்னிடமிருந்து அ(ந்த ஒட்டகத்)தை வாங்கிக்கொண்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இரண்டு "ஊக்கியா"க்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து எனும் (ஐயப்பாட்டுடனான) குறிப்பு இல்லை. மேலும் அதில், "ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அறுக்கப்பட்டது. பின்னர் அதன் இறைச்சியைப் பங்கிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நான்கு தீனார்களுக்காக உனது ஒட்டகத்தை நான் வாங்கிக்கொண்டேன்; நீ மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணிக்கலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 22 ஒருவர் தாம் கடனாகப் பெற்றதை விடச் சிறந்ததைத் திருப்பிச் செலுத்துவதும், "வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" எனும் நபி மொழியும்.
3270. அபூராஃபிஉ அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் இளம் வயது ஆண் ஒட்டகம் ஒன்றைக் கடன் வாங்கியிருந்தார்கள். தர்ம ஒட்டகங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த போது, (அவற்றிலிருந்து விலைக்கு வாங்கி) அம்மனிதருக்குரிய இளம் வயது ஒட்டகத்தைக் கொடுத்துவிடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். நான் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அவற்றில் ஆறுவயது முழுமையடைந்த (கடைவாய்ப் பற்கள் முளைத்து விட்ட) ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அ(ந்த ஒட்டகத்)தையே அவருக்குக் கொடுத்து விடுங்கள் (ஏனெனில்,) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3271. மேற்கண்ட ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாயிருந்த அபூராஃபிஉ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம்வயது ஆண் ஒட்டகம் ஒன்றை, அதைப் போன்றதைத் திருப்பித் தருவதாகக் கூறி கடன் வாங்கியிருந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. எனினும் அதில், "ஏனெனில், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே அல்லாஹ்வின் அடியார்களில் சிறந்தவர் ஆவார்" என்று (சிறிது மாற்றத்துடன்) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3272. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. (அதைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டுவந்தபோது) அவர் கடுஞ்சொற்களை பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரை விட்டுவிடுங்கள்.) கடன்காரருக்கு (இவ்வாறு) பேச உரிமை உண்டு" என்று கூறிவிட்டு, "அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றை வாங்கி வாருங்கள்" என்றார்கள். மக்கள் (சென்றுவிட்டு வந்து) அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நாங்கள் காணவில்லை" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அழகியமுறையில் திருப்பிச் செலுத்துபவரே "உங்களில் சிறந்தவர்களில் உள்ளவர்" அல்லது "உங்களில் சிறந்தவர்" ஆவார்"என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3273. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகமொன்றை கடன் வாங்கினார்கள். அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தினார்கள். மேலும், "அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3274. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (கடனாகக்) கொடுத்திருந்த ஒட்டகத்தைக் கேட்டு ஒரு மனிதர் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தை அவருக்குக் கொடுங்கள்" என்றும் "அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 23 ஓர் உயிரினத்தை அதே இன உயிரினத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்பது செல்லும்.
3275. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்ல உறுதிமொழி அளித்தார். அவர் ஓர் அடிமை என்பது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவருடைய உரிமையாளர் நபி (ஸல்) அவர்களைத் தேடிவந்(து, அது பற்றி முறையீடு செய்)தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அவரை எனக்கு விற்றுவிடு"என்று கூறி விட்டு, இரு கறுப்பு அடிமைகளைக் கொடுத்து அவரை வாங்கிக் கொண்டார்கள். பின்னர் "ஒருவர் அடிமையா?" என்று கேட்காத வரை (தம்மிடம் உறுதிமொழி அளிக்க வருபவர்) எவரிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி பெறவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 24 அடைமானமும், அது உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் என்பதும்.
3276. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள். அதற்காகத் தமது (இரும்புக்) கவசத்தை அவரிடம் அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3277. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள். (அதற்காக) இரும்புக் கவசத்தை அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3278. சுலைமான் பின் மிஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகத்தில் (சலம்) அடைமானம் பற்றிப் பேசினோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள்; அதற்காகத் தமது இரும்புக் கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என நமக்கு அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - அதில், "இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
பாடம் : 25 முன்பண வணிகம் (சலம்).
3279. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஓராண்டு அல்லது ஈராண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி,பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர். நபி(ஸல்) அவர்கள், "ஒருவர் (இவ்வாறு) பின்னால் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட எடைக்காகவும் அளவுக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22