3237. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தங்க நாணயத்தைத் தங்க நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்; வெள்ளி நாணயத்தை வெள்ளி நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3238. அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் கூட்டாளி ஒருவர், (தங்கத்திற்கு) வெள்ளியை ஹஜ் பருவம்வரை கடனாகச் சொல்லி (நாணயமாற்று முறையில்)விற்றார். பின்னர் என்னிடம் வந்து அதைப் பற்றித் தெரிவித்தார். நான், "இது தகாத செயலாகும்" என்றேன். அவர், "அவ்வாறாயின் நான் கடைத் தெருவில் அதை விற்றபோது என்னிடம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையே?"என்று கேட்டார். ஆகவே, நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன்.
அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, நாங்கள் இந்த வியாபாரம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "உடனுக்குடன் (நாணயமாற்று) ஏற்பட்டால் அதனால் குற்றமில்லை; கடனாக (தங்கத்தை வெள்ளிக்கோ, வெள்ளியைத் தங்கத்திற்கோ) மாற்றினால்தான் அது வட்டியாகும்" என்று கூறினார்கள். நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் போ(ய் இதைப் பற்றி வினா எழுப்பு)வீராக! ஏனெனில், அவர் என்னைவிட பெரிய வணிகர் ஆவார்" என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டபோது, பராஉ (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே அவர்களும் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3239. அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அவர்கள், "நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேளும். அவர் (என்னைவிட) நன்கு அறிந்தவர்" என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், "நீர் பராஉ (ரலி) அவர்களிடமே கேளும். அவரே (என்னை விட) நன்கு அறிந்தவர்" என்றார்கள். பின்னர் இருவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினர்.
அத்தியாயம் : 22
3240. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) விற்கக் கூடாது எனத் தடை விதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும், வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும் அனுமதித்தார்கள்.
இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களிடம் ஒரு மனிதர், "உடனுக்குடன் (மாற்றிக்கொண்டால்தானே)!" என்று கேட்டார். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் "அவ்வாறே நான் செவியுற்றேன்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "..... எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 22
பாடம் : 17 பொன்னும் மணியும் உள்ள மாலையை விற்பது.
3241. ஃபளாலா பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் இருந்தபோது, அவர்களிடம் கழுத்து மாலை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் பொன்னும் மணியும் இருந்தன. அது போர்ச் செல்வங்களுடன் விற்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மாலையில் இருந்த பொன்னைத் தனியே கழற்றி எடுத்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு மக்களிடம் "எடைக்கு எடை தங்கத்தைத் தங்கத்திற்கு விற்கலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3242. ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கைபர்போர் நாளில் பன்னிரண்டு "தீனாரு"க்கு ஒரு கழுத்து மாலையை வாங்கினேன். அதில் பொன்னும் மணிகளும் இருந்தன. உடனே அவற்றை நான் தனித்தனியே பிரித்தெடுத்தேன். அவை பன்னிரண்டு தீனாரைவிடக் கூடுதல் மதிப்புடையவையாக இருப்பதைக் கண்டேன். ஆகவே, இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, தனியே பிரித்தெடுக்கப்படாத வரை (பொன்னும் மணியும் உள்ள ஆபரணங்கள்) விற்கப்படக் கூடாது"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3243. ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கைபர்போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (பொன்னும் மணியும் சேர்க்கப்பட்டிருந்த) தங்க "ஊக்கியா"வை இரண்டு மூன்று பொற்காசு (தீனார்)களுக்கு யூதர்களிடம் விற்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எடைக்கு எடை சரியாகவே தவிர (வேறு முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3244. ஹனஷ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர்ச் செல்வத்தின் பங்காக) மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, முத்து ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.
அப்போது அவர்கள், மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து, அதைத் தராசின் ஒரு தட்டிலும், உனது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. பிறகு சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 18 சரிக்குச் சரியாக உணவுப் பொருளை விற்றல்.
3245. புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு "ஸாஉ" தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தம் அடிமையிடம் கொடுத்து, "இதை விற்றுவிட்டு அந்தக் காசைக் கொண்டு தொலி நீக்கப்படாத கோதுமை வாங்கி வா" என்று அனுப்பினார்கள். அந்த அடிமை சென்று, அதைக் கொடுத்து ஒரு "ஸாஉ" கோதுமையும் சற்று கூடுதலாகவும் பெற்றுவந்தார். அவர் மஅமர் (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார்.
அதற்கு மஅமர் (ரலி) அவர்கள், "ஏன் அவ்வாறு செய்தாய்? நீ சென்று அதைத் திருப்பிக் கொடுத்துவிடு. சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் உணவுப் பொருளை) வாங்காதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரிக்குச் சரியாகவே உணவுப் பொருளை உணவுப் பொருளுக்கு (விற்கப்படும்)" என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
மேலும் மஅமர் (ரலி) அவர்கள், "அன்றைய நாளில் தொலி நீக்கப்படாத கோதுமையே எங்கள் உணவாக இருந்தது"என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் "இது (தொலி நீக்கப்படாத கோதுமை), அதைப் போன்று (தொலி நீக்கப்பட்ட கோது மையைப் போன்று ஒரே இனமாக) இல்லையே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது ஒன்றுக்கொன்று ஒப்பானதாக இருக்குமோ என நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3246. அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்து அனுப்பிவைத்தார்கள். அவர் (சென்றுவிட்டு கைபரிலிருந்து) உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபரின் பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு "ஸாஉ"களைக் கொடுத்து விட்டு, (இந்த உயர்ரகப் பேரீச்சம் பழத்தில்) ஒரு "ஸாஉ" வாங்குவோம்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். (உணவுப் பொருளை) சரிக்குச் சமமாகவே வாங்குங்கள். அல்லது (உங்களிடமுள்ள) இந்த (மட்டமான) பேரீச்சம் பழத்தை விற்றுவிட்டு, அந்தத் தொகைக்கு அ(ந்த உயர்ரகப் பேரீச்சம் பழத்)தை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3247. அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்(து அனுப்பிவைத்)தார்கள். அவர் (சென்றுவிட்டு) உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்து ஒரு "ஸாஉ" இந்த (உயர் ரகப் பேரீச்சம்) பழம் வாங்குகிறோம்; அல்லது மட்டரகப் பேரீச்சம் பழங்களில் மூன்று "ஸாஉ"கள் கொடுத்து, (இந்த உயர்ரகப் பேரீச்சம் பழங்களில்) இரண்டு "ஸாஉ"கள் வாங்குகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்! மட்டரகமான பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்த வெள்ளிக் காசுகளுக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3248. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிலால் (ரலி) அவர்கள் ("பர்னீ" எனப்படும்) உயர்ரகப் பேரீச்சம் பழங்களுடன் வந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "என்னிடம் மட்ட ரகப் பேரீச்சம் பழங்கள் இருந்தன; நபி (ஸல்) அவர்களின் உணவுக்காக அதில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்து இ(ந்த உயர் ரகப் பேரீச்சம் பழத்)தில் ஒரு "ஸாஉ" வாங்கினேன்" என்றார்.
அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆ! இது வட்டியேதான்! இவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் இந்த (உயர் ரக)ப் பேரீச்சம் பழத்தை வாங்க விரும்பினால் உங்களிடமுள்ள அ(ந்த மட்டரகப் பேரீச்சம் பழத்)தைத் தனியாக விற்றுவிட்டு, பிறகு அந்தத் தொகையின் மூலம் (உயர் ரகப் பேரீச்சம் பழத்தை) வாங்கிக்கொள்ளுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் சஹ்ல் அத்தமீமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்த நேரத்தில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
3249. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அவர்கள், "இது என்ன?நம் பேரீச்சம் பழங்களுக்கு வேறுபடுகிறதே!" என்று கேட்டார்கள். அதற்கு (பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்த) அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நம் பேரீச்சம் பழங்களில் இரண்டு "ஸாஉ"கள் கொடுத்துவிட்டு, இ(ந்த உயர் ரகப் பேரீச்சம் பழத்)தில் ஒரு "ஸாஉ" வாங்கினோம்" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுதான் வட்டியாகும். இதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; பிறகு நமது பேரீச்சம் பழத்தை (தனியே) விற்றுவிட்டு, (அந்தத் தொகையின் மூலம்) நமக்காக இந்த (உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை வாங்குங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3250. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மட்டரகப் பேரீச்சம் பழங்கள் எங்களுக்கு வழங்கப்படும். அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். அவற்றில் இரண்டு "ஸாஉ"களுக்கு ஒரு "ஸாஉ" (உயர் ரகப் பேரீச்சம்பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்து வந்தோம். இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "ஒரு "ஸாஉ"க்கு இரண்டு "ஸாஉ"கள் பேரீச்சம் பழங்கள் கூடாது; ஒரு ஸாஉக்கு இரண்டு "ஸாஉ"கள் தொலி நீக்கப்பட்ட கோதுமையும் கூடாது; இரண்டு வெள்ளி திர்ஹங்களுக்கு ஒரு வெள்ளி திர்ஹமும் கூடாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3251. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் பற்றி வினவினேன். அப்போது அவர்கள் "உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "அவ்வாறாயின் குற்றமில்லை" என்றார்கள்.
பிறகு அபூசயீத் (ரலி) அவர்களிடம் நான் இதைத் தெரிவித்தேன்; "நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் குறித்துக் கேட்டேன். அவர்கள் "உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவ்வாறாயின் குற்றமில்லை" என்று அவர்கள் கூறினார்கள்" என்றேன். அபூசயீத் (ரலி) அவர்கள், "அவ்வாறா சொன்னார்கள். நாம் அவருக்குக் கடிதம் எழுதுகிறோம். இனி அவ்வாறு உங்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டார்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியர்களில் ஒருவர், ஒருவகைப் பேரீச்சம் பழத்தைக் கொண்டுவந்தார். அந்தப் பழங்களை அந்நியமாகக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது நமது மண்ணில் விளையும் பேரீச்சம் பழங்கள் இல்லை போலிருக்கிறதே?" என்று கேட்டார்கள். அவர், "இந்த ஆண்டு நமது மண்ணில் அல்லது நமது பேரீச்சம் பழங்களில் சில (மட்டரகமான பழங்கள்) இருந்தன. எனவே, அவற்றையும் அவற்றுடன் இன்னும் சிறிதளவு கூடுதல் பழத்தையும் கொடுத்து, இ(வ்வகைப் பேரீச்சம் பழத்)தைப் பெற்றேன்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கூடுதலாகக் கொடுத்துவிட்டாய்; வட்டியாக்கிவிட்டாய். இதை நமக்கு அருகில் கொண்டுவர வேண்டாம். உம்முடைய பேரீச்சம் பழங்களில் ஒன்று உமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதை விற்றுவிட்டு, பின்னர் (அந்தத் தொகையை வைத்து) நீ விரும்புகின்ற (பேரீச்சம் பழ இனத்)தை வாங்கிக்கொள்"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3252. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டேன். அவ்விருவரும் அதைக் குற்றமாகக் கருத வில்லை. பின்னர் நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, நாணயமாற்று பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "கூடுதலாக வருபவை வட்டியாகும்" என்றார்கள். (இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய) இருவரும் (வேறு விதமாக) கூறியிருந்ததால், நான் அபூசயீத் (ரலி) அவர்களது கருத்தை ஆட்சேபித்தேன்.
அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் உம்மிடம் அறிவிக்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் பேரீச்ச மரத்தோட்டக்காரர் ஒரு "ஸாஉ" உயர் ரகப் பேரீச்சம் பழத்துடன் வந்தார். நபி (ஸல்) அவர்களது பேரீச்சம் பழம் இந்த (மட்டரக) இனத்தைச் சேர்ந்ததாக இருந்தது.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோட்டக்காரரிடம், "இது எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் (நம்மிடமிருந்த மட்டரகப் பேரீச்சம் பழங்களில்) இரண்டு "ஸாஉ"களுடன் சென்று, அதற்குப் பதிலாக இந்த (உயர்ரகப் பேரீச்சம் பழத்தின்) ஒரு "ஸாஉ"வை வாங்கி வந்தேன். கடைத்தெருவில் இந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு; இந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்; நீ வட்டி வியாபாரம் செய்துவிட்டாய். இ(வ்வாறு உயர் ரகப் பேரீச்சம் பழத்)தை நீ விரும்பினால், உமது பேரீச்சம் பழத்தை (வேறு) ஏதேனும் ஒரு பொருளுக்காக விற்றுவிட்டு, பிறகு அந்தப் பொருளுக்குப் பதிலாக நீ விரும்பும் எந்தப் பேரீச்சம் பழத்தை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்" என்றார்கள்.
அபூசயீத் (ரலி) அவர்கள் "பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கு (ஏற்றத்தாழ்வுடன் விற்பது) வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா, அல்லது வெள்ளியை வெள்ளிக்கு (ஏற்றத் தாழ்வுடன்) விற்பது வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா?" என்று கேட்டார்கள். பின்னர் நான் இப்னு உமர் (ரலி) அவர்களிம் சென்றபோது, அவ்வாறு விற்க வேண்டாம் என அவர்கள் என்னைத் தடுத்தார்கள். பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லவில்லை; (ஆயினும்,) அபுஸ்ஸஹ்பா (ரஹ்) அவர்கள், "நான் மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள் அதை வெறுக்கத் தக்கதாகக் கருதினார்கள்" என்று என்னிடம் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3253. அபூசாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் "தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்குச் சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ, கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்" என்று கூறியதை நான் செவியுற்றேன். அவர்களிடம் நான் "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வேறு விதமாகக் கூறுகிறார்களே?" என்று கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் "நான் இப்னு அப்பாஸ் அவர்களைச் சந்தித்தபோது, நீங்கள் கூறிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை; இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, "வட்டி என்பது கடனுக்கு (நாணயமாற்று செய்யும்போது)தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களே என்னிடம் கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வட்டி என்பதே கடனில்தான்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உடனுக்குடன் நிகழ்ந்த (நாணயமாற்று வணிகத்)தில் வட்டி கிடையாது.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3256. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, "நாணயமாற்று விஷயத்தில் தாங்கள் சொல்லிவருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா? அல்லது இறைவேதத்தில் கண்டதைக் கூறுகிறார்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அவ்வாறு நான் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதாகவும் எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அறிக; வட்டி என்பதே கடனில்தான்" என்று கூறினார்கள் என உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள்தாம் என்னிடம் சொன்னார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 22