3193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் விற்ற காசு அசுத்தமானதாகும்; விபசாரியின் வருமானம் அசுத்தமானதாகும்; குருதி உறிஞ்சி எடுப்பவரின் சம்பாத்தியம் அசுத்தமானதாகும்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3194. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 10 நாய்களைக் கொன்றுவிடுமாறு வந்துள்ள கட்டளையும், பின்னர் அது மாற்றப்பட்ட விவரமும், வேட்டைக்காகவோ விவசாயப் பண்ணை அல்லது கால்நடைப் பாதுகாப்புக் காகவோ அல்லாமல் வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பது கூடாது என்ற விவரமும்.
3195. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 22
3196. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்காக மதீனாவின் பல பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
அத்தியாயம் : 22
3197. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும் கொன்றோம். கிராமவாசிப் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் நாயையும் நாங்கள் கொன்றோம்.
அத்தியாயம் : 22
3198. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேட்டை நாயையும் ஆடுகள் மற்றும் கால்நடைகளைக் காவல் காக்கும் காவல் நாயையும் தவிர மற்ற நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்" என்றார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், "விவசாயப் பண்ணைகளைப் பாதுகாக்கும் நாய்களையும் தவிர" என்று கூறிவருகிறார்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பண்ணை நிலம் இருக்கிறது (எனவே, அதைப் பற்றி அவர் நன்கறிவார்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3199. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து,கிராமத்திலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், "கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3200. அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். பின்பு, "அவர்களுக்கும் நாய்களுக்கும் எனன நேர்ந்தது (அவற்றைக் கொல்கிறார்களே)?" என்று கூறினார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் ஆடுகளைக் காவல்காக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 22
3201. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்கள், யஹ்யா பின் சயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், "ஆடுகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் வேட்டை நாய்களுக்கும் விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால் நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3203. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "விளைநிலங்களைப் பாதுகாக்கும் நாயைத் தவிர" என்றும் கூறினார்கள்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3206. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "விளைநிலங்களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர" என்று கூறிவந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் விளைநிலங்கள் உடையவராய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 22
3207. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3208. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; விளைநிலங்கள், ஆடுகள் ஆகியவற்றைக் காவல் காக்கும் நாய்களையும் வேட்டை நாய்களையும் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3209. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய (நற்செயல்களின்) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; வேட்டை நாயினாலோ அல்லது கால்நடைகளைக் காவல்காக்கும் நாயினாலோ (விளை) நிலங்களைப் பாதுகாக்கும் நாயினாலோ அல்ல.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(விளை)நிலங்களைப் பாதுகாக்கும் நாயினாலோ" என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
3210. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்து விடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும், வேட்டை நாயையும், விவசாயப் பண்ணைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று எடுத்துரைக்கப்பட்டபோது அவர்கள், "அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவர்கள் விளைநிலங்கள் உடையவராக இருந்தார்கள். (எனவே, அதைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்)" என்றுரைத்தார்கள்.
அத்தியாயம் : 22
3211. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மைகளி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; விளைநிலங்களையும் கால்நடைகளையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வேட்டை நாய், ஆடுகளைக் காவல்காக்கும் நாய் அல்லாமல் வேறு நாய்களை வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு "கீராத்" (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22