3038. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும்போது, அதே பொருளைத் தாமும் விலை பேச வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3039. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் விலைபேசும் அதே பொருளைத் தாமும் விலை பேசுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3040. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங்கலாகாது. ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிட வேண்டாம். கிராமத்திலிருந்து சரக்குகளைக் கொண்டுவருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்ய வேண்டாம். அவ்வாறு ஒருவர் அவற்றை வாங்கிப் பால் கறந்து திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம். திருப்தியடையாவிட்டால் அவற்றை ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம். இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3041. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங்குவதற்கும், கிராமத்திலிருந்து (சரக்குகளைக் கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுப்பதற்கும், ஒரு பெண் தன் சகக்கிழத்தியை மணவிலக்குச் செய்யுமாறு (தன் கணவரிடம்) கோருவதற்கும்,வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதற்கும், கால்நடைகளின் (பாலைக் கறக்காமல் கூடுதல் விலைக்கு விற்பதற்காக) மடி கனக்கச் செய்வதற்கும், தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும் அதே பொருளை மற்றவர் விலை பேசுவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஃகுன்தர் மற்றும் வஹ்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(மேற்கண்டவற்றுக்கு) தடை விதிக்கப்பட்டது"என இடம்பெற்றுள்ளது. அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 21
3042. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதற்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 5 வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரியை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து அப்பொருட்களை) வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
3043. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வியாபாரப் பொருட்கள் சந்தைக்கு வந்து சேருவதற்கு முன் வழியிலேயே வியாபாரிகளைச் சந்தித்துச் சரக்குகளை வாங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே "சந்தைக்கு வந்து சேர்வதற்கு முன்" எனும் குறிப்பு காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3044. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21
3045. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளைச் சந்தித்து சரக்குகள் வாங்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 21
3046. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வியாபாரிகளைச் சந்தித்து, சரக்குகளை வாங்காதீர்கள். அவ்வாறு எவரேனும் அவர்களைச் சந்தித்து, சரக்குகளை விலைக்கு வாங்கிய பின் அந்தச் சரக்குகளின் உரிமையாளர் சந்தைக்கு வந்தால், அவருக்கு (அந்த பேரத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை உண்டு.
அத்தியாயம் : 21
பாடம் : 6 கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
3047. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கவேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3048. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடை மறித்து வாங்குவதற்கும், கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுப்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாது என்பதன் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இடைத் தரகராக ஆகக் கூடாது (என்பதுதான் அதன் பொருள்)" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3049. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்க வேண்டாம். மக்களில் சிலருக்குச் சிலர் மூலம் அல்லாஹ் வாழ்வாதாரம் அளிக்கும் நிலையில் மக்களை விட்டுவிடுங்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா அத்தமீமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்களில் சிலருக்குச் சிலர் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் நிலையில்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3050. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாதென நாங்கள் தடைவிதிக்கப் பெற்றிருந்தோம்; இவருக்கு அவர் சகோதரராய் இருந்தாலும் சரி; தந்தையாக இருந்தாலும் சரி.
அத்தியாயம் : 21
3051. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாதென நாங்கள் தடை விதிக்கப் பெற்றோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 7 மடி கனக்கச் செய்யப்பட்ட (ஒட்டகம், ஆடு ஆகிய)வற்றை விற்பனை செய்வது பற்றிய சட்டம்.
3052. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை விலைக்கு வாங்கியவர், அதை ஓட்டிச் சென்று பால் கற(ந்து பார்)க்கட்டும்! அதன் பால் (அளவு) திருப்தியளித்தால், அதை அவர் தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்! திருப்தியளிக்காவிட்டால், ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதை (வாங்கியவரிடமே) திருப்பிக் கொடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர் மூன்று நாட்கள் விருப்ப உரிமை பெறுவார். அவர் நாடினால், அதைத் தம்மிடமே வைத்துக்கொள்ளலாம்; நாடினால் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம். ஆனால், ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3054. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்பதானால், ஒரு "ஸாஉ" உணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக் கூட இருக்கலாம்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3055. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர் (பின்வரும்) இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க உரிமை பெறுவார். நாடினால் அதைத் தம்மிடம் அவர் வைத்துக் கொள்ளலாம். நாடினால் அந்த ஆட்டை ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம். கோதுமையைத்தான் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3056. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆட்டை வாங்கியவருக்கு விருப்ப உரிமை உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3057. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மடி கனக்கச் செய்யப்பட்ட ஒட்டகத்தையோ அல்லது ஆட்டையோ வாங்கிய பின் பால்கறந்து பார்க்கும்போது, (பின்வரும்) இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க உரிமை பெறுவார். ஒன்று அதைத் தம்மிடம் வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்.
அத்தியாயம் : 21