பாடம் : 6 மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு (காத்திருப்புக் கால) ஜீவனாம்சம் கிடையாது.
2953. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி, தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி, "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டதுதான்)" என்று கூறிவினார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், "அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை" என்று கூறிவிட்டு, உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை "இத்தா" இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு), "அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) "இத்தா" இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றிக்கொள்ளலாம். நீ "இத்தா"வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!" என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் "இத்தா"வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை;அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்" என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்துகொள்" என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அத்தியாயம் : 18
2954. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் என் கணவர் (மூன்றாவதாக) என்னைத் தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"க் காலத்தில்) அவர் எனக்குக் குறைந்த அளவே ஜீவனாம்சம் வழங்கினார். அதை நான் கண்டதும், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இதைப் பற்றி) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்; எனக்கு ஜீவனாம்சம் இருக்குமாயின், எனக்குத் தகுதியான (ஜீவனாம்சத்)தை நான் பெறுவேன். எனக்கு ஜீவனாம்சம் எதுவும் கிடையாதெனில் அவரிடமிருந்து நான் எதையும் பெற்றுக் கொள்ளமாட்டேன்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு ஜீவனாம்சமும் இல்லை; உறைவிடமும் இல்லை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்கள் தலாக் சொல்லப்பட்டு "இத்தா" இருந்தபோது என்ன நடந்தது என்று) கேட்டேன். அதற்கு அவர், "மக்ஸூமி குலத்தைச் சேர்ந்தவரான என் கணவர் என்னைத் தலாக் சொல்லிவிட்டார். எனக்கு ("இத்தா"க் கால) ஜீவனாம்சம் வழங்க மறுத்தார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அதைப் பற்றி) அவர்களிடம் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; நீ இடம்மாறி, (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் சென்று, அவரது இல்லத்தில் (இத்தா முடியும்வரை) இரு! ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். அவர் அருகில் உனது (துப்பட்டா) துணியைக் கழற்றிக்கொள்ளலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 18
2955. அள்ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அல்மக்ஸூமீ என்னை மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார்; பின்னர் யமன் நாட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது என் கணவரின் குடும்பத்தார் என்னிடம், "உனக்கு ஜீவனாம்சம் எதையும் நாங்கள் தர வேண்டியதில்லை" என்று கூறினர். அப்போது (என் கணவருடைய தந்தையின் சகோதரர் புதல்வர்) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) "அபூஹஃப்ஸ் தம் துணைவியை (ஃபாத்திமா பின்த் கைஸை) மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"விலிருக்கும்) அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?" என்று கேட்டனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது; ஆனால் "இத்தா" உண்டு"என்றார்கள். மேலும், எனக்கு ஆளனுப்பி, "உன் விஷயத்தில் என் உத்தரவுக்கு முன் நீயாக முந்தி(க்கொண்டு முடிவெடுத்து)விடாதே" என்று கூறியனுப்பினார்கள். மேலும், என்னை (என் கணவரின் இல்லத்திலிருந்து) இடம்மாறி உம்மு ஷரீக் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு (அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் விதமாக) "உம்மு ஷரீக்கின் வீட்டிற்கு ஆரம்பக் காலத்து முஹாஜிர்கள் (விருந்தாளிகளாக) வருவார்கள். எனவே, நீ கண் பார்வையற்ற (உன் தந்தையின் சகோதரர் புதல்வரான) இப்னு உம்மி மக்தூம் அவர்களின் வீட்டிற்குச் செல்! ஏனெனில், நீ உன் துப்பட்டாவைக் கழற்றினாலும் அவர் உன்னைப் பார்க்க முடியாது" என்று கூறியனுப்பினார்கள். ஆகவே, நான் இப்னு உம்மி மக்தூமிடம் சென்றேன். எனது "இத்தா"க் காலம் முடிந்ததும் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.
அத்தியாயம் : 18
2956. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் "இந்த ஹதீஸை நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களது வாயிலிருந்து (நேரடியாக) செவியுற்று எழுதிவைத்துக்கொண்டேன்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் "நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது நான் என் கணவரின் குடும்பத்தாரிடம் ஆளனுப்பி எனது ஜீவனாம்சத்தைக் கோரினேன்" என்று ஹதீஸ் தொடருகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உனது (மறுமணம்) விஷயத்தில் நம்மைவிட்டு (நீயாக முடிவெடுத்து)விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2957. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:
நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை (இரு தலாக் சொல்லி திரும்ப அழைத்துக்கொண்டு) இறுதி(யாக எஞ்சியிருந்த) மூன்றாவது தலாக் சொல்லிவிட்டார்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, என் (கணவரின்) இல்லத்திலிருந்து வெளியேறி (வேறு இடத்தில் "இத்தா" இருந்து)கொள்வது தொடர்பாகத் தீர்ப்புக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கண் தெரியாதவரான இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்திற்கு இடமாறிக்கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸை அறிவிப்பவரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(மூன்று) தலாக் சொல்லப்பட்டுவிட்ட ஒரு பெண், தனது இல்லத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான இந்த ஹதீஸை மர்வான் பின் அல்ஹகம் நம்ப மறுத்தார்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (செய்யலாம் என்று) கூறிவந்ததை நிராகரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ஆயிஷா (ரலி) அவர்கள்,ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு கூறிவந்ததை நிராகரித்தார்கள் என்கிற உர்வா (ரஹ்) அவர்களின் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2958. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்குச் சென்றிருந்தார்கள். அப்போது அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் தம் மனைவியின் தலாக்கில் எஞ்சியிருந்த ஒரு தலாக்கையும் சொல்லியனுப்பினார். தம் மனைவிக்கு ஜீவனாம்சத்தைக் கொடுக்க ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களையும் அய்யாஷ் பின் அபீரபீஆ (ரலி) அவர்களையும் பணித்தார். அவர்கள் இருவரும் அவருடைய மனைவியிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ கர்ப்பமுற்றவளாக இருந்தால்தான் உனக்கு ஜீவனாம்சம் கிடைக்கும்" என்று கூறிவிட்டனர்.
உடனே அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்கள் இருவரும் கூறியதைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உனக்கு ஜீவனாம்சம் இல்லை" என்று கூறினார்கள். அப்போது அவர் (தம் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறிக்கொள்ள அனுமதி கோரினார். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கே (தங்குவேன்)?" என்று கேட்டார். அதற்கு, "இப்னு உம்மி மக்தூமின் வீட்டிற்குச் செல்" என்றார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். (எனவே) அப்பெண் அவர் அருகில் உடைமாற்றினாலும் அவரால் பார்க்க முடியாத நிலையில் இருந்தார். (இப்னு உம்மி மக்தூமின் வீட்டில்) அப்பெண்ணின் "இத்தா"க் காலம் முடிந்ததும் அவரை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்துவைத்தார்கள்.
பின்னர் (மதீனாவின் அப்போதைய ஆட்சியராயிருந்த) மர்வான் அப்பெண்ணிடம் கபீஸா பின் துவைப் (ரஹ்) அவர்களை அனுப்பி அந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டார். அவர் மர்வானுக்கு அந்த ஹதீஸைத் தெரிவித்தார். அதற்கு மர்வான், "ஒரேயொரு பெண்ணிடமிருந்துதான் நாம் இந்த ஹதீஸைக் கேள்விப்படுகிறோம். மக்கள் எந்த நடைமுறையை வலுவாகக் கடைப்பிடித்துவருவதை நாம் காண்கிறோமோ அதையே நாம் (தொடர்ந்து) செயல்படுத்துவோம்" என்று கூறினார். "எனக்கும் உங்களுக்குமிடையே குர்ஆன் உள்ளது. (அதில்) அல்லாஹ், "அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்" (65:1) என்று கூறியுள்ளான்" என மர்வான் கூறிய தகவல், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, "இது திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமையுடைய கணவர்களுக்கு உரியதாகும். மூன்று தலாக்கிற்குப் பிறகு (திரும்ப அழைத்தல் போன்ற) என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது? அவள் கர்ப்பமுற்றவளாக இல்லாவிடில் அவளுக்கு ஜீவனாம்சம் இல்லை என நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? பிறகு (ஜீவனாம்சம் பெறாத) அந்தப் பெண்ணை எந்த அடிப்படையில் தடுத்து வைத்துக்கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2959. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைக் குறித்துக் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "என்னை என் கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"க் கால) ஜீவனாம்சம் மற்றும் உறைவிடம் விஷயத்தில் அவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வழக்கு தொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உறைவிடமோ ஜீவனாம்சமோ வழங்கச் செய்யவில்லை. என்னை (என் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்தில் "இத்தா" மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2960. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். எங்களுக்கு அவர்கள் (மதீனாவின்) "ருதப் இப்னு தாப்" (எனும் வகை) பேரீச்சம் பழத்தை விருந்தாகக் கொடுத்தார்கள். ஒரு வகை தானிய மாவுக் கஞ்சியை எங்களுக்கு அருந்தக் கொடுத்தார்கள். அவர்களிடம் நான் "மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் எங்கு "இத்தா" இருப்பாள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், என் குடும்பத்தாரிடமே நான் "இத்தா" இருக்க எனக்கு அனுமதியளித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
2961. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் குறித்து நபி (ஸல்) அவர்கள், "அவளுக்கு உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2962. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது வேறு இடத்திற்கு இடம்மாறிச் செல்ல நான் விரும்பினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அதற்காக அனுமதி கோரினேன்.) நபி (ஸல்) அவர்கள் "நீ இடம்பெயர்ந்து, உன் தந்தையின் சகோதரர் புதல்வர் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அங்கு "இத்தா" இரு" என்று கூறி னார்கள்.
அத்தியாயம் : 18
2963. அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களுடன் (கூஃபாவின்) பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை" என அறிவித்தார்கள் (என்பதுதான் அந்த ஹதீஸ்). (அங்கிருந்த) அஸ்வத் (ரஹ்) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: "உமக்குக் கேடுதான்! இது போன்ற செய்திகளை அறிவிக்கிறீரே? உமர் (ரலி) அவர்கள், "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நம் நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம். ஃபாத்திமா பின்த் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா, அல்லது மறந்துவிட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்" (65:1) என்று கூறியுள்ளான்"என்றார்கள்.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2964. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர் மூலம்) உறைவிடமும் ஏற்படுத்தவில்லை; ஜீவனாம்சமும் ஏற்படுத்தவில்லை. என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உன் "இத்தா"க் காலத்தை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக" என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் தெரிவித்தேன். என்னை முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் பெண் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆவியாவோ, ஓர் ஏழை;அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர். மாறாக, உசாமா பின் ஸைதே (உனக்குப் பொருத்த மானவர்)" என்றார்கள். உடனே நான் "உசாமா; (பெரிய) உசாமா" என கையால் சைகை செய்(து அதிருப்தி தெரிவித்)தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும் அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுவதும் உனக்கு நல்லது" என்றார்கள். பின்னர் உசாமாவையே நான் மணந்துகொண்டேன். நான் பெருமிதம் அடைந்தேன்.
அத்தியாயம் : 18
2965. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து "ஸாஉ" பேரீச்சம் பழமும் ஐந்து "ஸாஉ" தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், "எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் "இத்தா" இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ் அவர்கள், "இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)" என்று சொல்லிவிட்டார். உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?" என்று கேட்டார்கள். நான் "மூன்று (தலாக்)" என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் இல்லை. நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் "இத்தா" இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது (துப்பட்டா) துணியை அவர் அருகில் கழற்றிவைக்கலாம். உன் "இத்தா"க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி" என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், "முஆவியா வசதி குறைந்தவர்; ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர் என்பதைப் போன்று.) மாறாக, நீ உசாமா பின் ஸைதைப் பிடித்துக்கொள்" என்றார்கள்.
அத்தியாயம் : 18
2966. அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களது நிகழ்ச்சி குறித்து) கேட்டோம். அவர், "நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப்பட்டார்" என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இறுதியில் "எனவே, நான் (அபூஸைத்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப் படுத்தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப் படுத்தினான்" என ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2967. அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், "என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 18
2968. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்கு (என் கணவர் மூலம் "இத்தா"க் காலத்தில்) உறைவிடத்தையோ ஜீவனாம்சத்தையோ ஏற்படுத்தவில்லை.
அத்தியாயம் : 18
2969. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை (மூன்று) தலாக் சொல்லி, தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் அவர்களை (அவருடைய குடும்பத்தாரை) இது குறித்துக் கண்டித்தேன். அதற்கு அவர்கள், "ஃபாத்திமா பின்த் கைஸ் ("இத்தா"க் காலத்தில் தமது கணவரின் இல்லத்திலிருந்து) வெளியேறினாரே?" என்று கூறினார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்த ஹதீஸைக் கூறுவதால் ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 18
2970. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் "இத்தா" மேற்கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என அஞ்சுகிறேன்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடமாறி ("இத்தா" மேற்)கொண்டேன்.
அத்தியாயம் : 18
2971. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இதைக் கூறுவதால் -அதாவது (மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு) உறைவிடமும் இல்லை;ஜீவனாம்சமும் இல்லை என்று கூறிவருவதால்- ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.23
- உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய புதல்வியான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் செய்தது தவறு" என்றார்கள். நான், "ஃபாத்திமா பின்த் கைஸ், (தான், மற்றோர் இடத்தில் "இத்தா" இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இந்தச் செய்தியைக் கூறிவருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
பாடம் : 7 முற்றாக மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்ட பெண்ணும் கணவன் இறந்துபோன பெண்ணும் "இத்தா"விலிருக்கும்போது தம் தேவைக்காக வெளியே செல்லலாம்.
2972. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா"வில் இருந்தபோது) தமது பேரீச்சமரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக்கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்சமரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக்கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18