2938. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தபோது, ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும்,அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.
உடனே நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! இ(தை நிறுத்துவ)தற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்" என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது,அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். "இல்லை" என்று உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். உடனே "இது என்ன வாடை?" என்று அவர்களிடம் கேளுங்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்)வாடை வீசுவதைக் கடுமையானதாகக் கருதுவார்கள்.) அப்போது அவர்கள், "எனக்கு ஹஃப்ஸா தேன்(கலந்த) பானம் புகட்டினார்" என்று உங்களிடம் கூறுவார்கள். உடனே நீங்கள் "இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால் தான் வாடை வருகிறது)" என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது, (நான் சொன்ன படி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்தபோதே, உனக்குப் பயந்து நீ என்னிடம் சொன்னபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல முனைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நெருங்கியதும் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால் இது என்ன வாடை?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹஃப்ஸா எனக்குத் தேன் (கலந்த) பானம் புகட்டினார்" என்று சொன்னார்கள். நான், "அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால்தான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)" என்று கூறினேன்.
(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது,அவர்களிடம் நானும் அவ்வாறே கூறினேன். பிறகு அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவரும் அவ்வாறே கூறினார். பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றபோது, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?" என்று கேட்டார். அவர்கள் "அது எனக்குத் தேவையில்லை" என்றார்கள்.
(இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (அதை அருந்தவிடாமல்) நாம் தடுத்து விட்டோமே!" என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், "சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)" என்று சொல்வேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
-இதே ஹதீஸ் மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
பாடம் : 4 ஒருவர் தம் மனைவிக்கு (தம்முடன் சேர்ந்து வாழவும் பிரிந்துவிடவும்) விருப்ப உரிமை அளிப்பதானது, அவரது எண்ணத்தைப் பொறுத்தே தவிர மணவிலக்கு ஆகாது.
2939. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளிக்குமாறு அல்லாஹ்வின் தூதருக்கு (இறைவனால்) கட்டளையிடப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: "(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்" (என்று அதைச் சொல்லிவிட்டு,) "நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்காதவரை அவசரப்பட வேண்டாம்" என்று சொன்னார்கள். என் பெற்றோர் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்பது நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள் "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்பினால், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் விடுவித்துவிடுகிறேன். நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்பினால்,உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார்செய்துள்ளான்" (33:28,29)எனும் வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், "இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் எதற்காக அனுமதி கேட்கவேண்டும்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையுமே விரும்புகிறேன்" என்று சொன்னேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரும் என்னைப் போன்றே நடந்துகொண்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2940. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் "(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்" (33:51) எனும் இறைவசனம் அருளப்பெற்ற பின்னரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் (மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால் அந்நாளை விட்டுக் கொடுக்கும்படி) எங்களிடம் அனுமதி கேட்பார்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் அனுமதி கேட்கும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "(அல்லாஹ்வின் தூதரே!) வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக் கொடுக்கும்படி) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்கமாட்டேன்" என்று சொல்வேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஆதா பின்த் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2941. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)தை நாங்கள் மணவிலக்காகக் கருதவில்லை.
அத்தியாயம் : 18
2942. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் மனைவிக்கு விருப்பஉரிமை அளித்து, அவள் என்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டால், அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு அல்லது ஆயிர(ம் விவாகர) த்திற்கு நான் உரிமை அளித்திருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்பஉரிமை அளித்தார்கள். அதுவென்ன தலாக்காகவா ஆகிவிட்டது?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 18
2943. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்பஉரிமை அளித்தார்கள். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)து மணவிலக்காக இருக்கவில்லை.
அத்தியாயம் : 18
2944. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்பஉரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை(ச் சார்ந்து வாழ்வதை)யே தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2945. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) விருப்பஉரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை(ச் சார்ந்து வாழ்வதை)யே தேர்ந்தெடுத்தோம். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)தை, (மணவிலக்கில்) எதுவாகவும் கருதவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2946. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர், தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்க, பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப்போகிறேன்" என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்து விட்டேன் என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். "இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னிடம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்" என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா?" என்று அவர்களிருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்" என்று கூறினர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்" என்று தொடங்கி, "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்" என்று முடியும் (33:28,29)இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.
இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்"என்று சொல்லிவிட்டு, "நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்"என்றார்கள்.
அத்தியாயம் : 18
பாடம் : 5 "ஈலா"ச் செய்வது, மனைவியரிடமிருந்து விலகியிருப்பது, அவர்களுக்கு விருப்ப உரிமை அளிப்பது மற்றும் "அவருக்கெதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினால்" (66:4) எனும் இறைவசனத் தொடர்.
2947. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மாத காலம் தம் துணைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்து) தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கு மக்கள் (கவலையோடு) சிறு கற்களைத் தரையில் எறிந்து கொண்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்" என்று கூறிக்கொண்டிருந்தனர். - இது பர்தா பற்றிய சட்டம் அருளப்பெறுவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும்.- "அன்று என்ன நடந்தது என்பதை நான் அறிந்தே தீருவேன்" என்று (எனக்குள்) நான் கூறிக்கொண்டேன்.
பிறகு நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உங்களது தகுதி உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? (முதலில்) நீங்கள் உங்களது பெட்டகத்தை (வீட்டை)க் கவனியுங்கள் (உங்கள் புதல்வி ஹஃப்ஸாவிற்கு அறிவுரை கூறுங்கள்)" என்று கூறினார்கள். ஆகவே, நான் (என் புதல்வி)ஹஃப்ஸா பின்த் உமரிடம் சென்று, "ஹஃப்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ இவ்வாறு செய்தால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நேசிக்கமாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால், உன்னை அவர்கள் மணவிலக்குச் செய்திருப்பார்கள்" என்று கூறினேன்.
இதைக் கேட்டு ஹஃப்ஸா கடுமையாக அழுதார். நான் ஹஃப்ஸாவிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இப்போது) எங்கே இருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, "மாடியிலுள்ள அவர்களது தனி அறையில் அவர்கள் இருக்கிறார்கள்" என்றார்கள்.
உடனே நான் அங்கு சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடியறையின் வாசற்படியில், செதுக்கப்பட்ட மரக்கட்டையின் மீது கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் பயன்படுத்திய பேரீச்ச மரக்கட்டையாகும்.
நான் (அவரைக்) கூப்பிட்டு, "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்" என்றேன். அப்போது ரபாஹ் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த) அந்த அறையை உற்றுப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்ல வில்லை. பின்னர் (மீண்டும்) நான், "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்" என்றேன்.
ரபாஹ் அந்த அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி, "ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸா வுக்(குப் பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகளின் கழுத்தை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டால் கூட நிச்சயமாக அவரது கழுத்தை வெட்டி விடுவேன்" என்று உரத்த குரலில் சொன்னேன்.
அப்போது ரபாஹ் என்னை ஏறிவரச் சொல்லி சைகை செய்தார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு "ஸாஉ" அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.
(இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனிஅறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காண வில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!" என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (திருப்திதான்)" என்றேன்.
அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் (நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஏனெனில்,) தங்களுடன் (தங்களுக்கு உதவி புரிவதற்கு) அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களுடன் இருக்கின்றோம்" என்று சொன்னேன்.
நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் -நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன்- நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. அப்போது "உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்" (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், "அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்" (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன. அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களும் (என் புதல்வி) ஹஃப்ஸாவுமே நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரை மிகைத்தவர்களாக இருந்தனர்.
ஆகவே, நான், "அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் துணைவியரான) இவர்களை நீங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) முஸ்லிம்கள் சிறு கற்களைத் தரையில் எறிந்துகொண்டு (ஆழ்ந்த கவலையுடன்) இருந்தனர்; "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்" என்று கூறிக்கொண்டுமிருந்தனர். நான் இங்கிருந்து இறங்கிச்சென்று, "தாங்கள் தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை என அவர்களிடம் தெரிவித்துவிடவா?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நீங்கள் விரும்பினால் (அவ்வாறு செய்யுங்கள்)" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்திலிருந்து கோபம் விலகும் வரையிலும், பற்கள் தெரியுமளவிற்கு அவர்கள் சிரிக்கும்வரையிலும் அவர்களிடம் நான் பேசிக்கொண்டேயிருந்தேன். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அழகான பற்கள் உடையவராக இருந்தார்கள்.- பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மாடியறையிலிருந்து) இறங்கினார்கள். நானும் இறங்கினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்ச மரக்கட்டையைத் தமது கரத்தால் பற்றாமலேயே தரையில் நடப்பதைப் போன்று (சாதாரணமாக) நடந்தார்கள். (ஆனால்,) நான் அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டே இறங்கினேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த அறையில் இருபத்தொன்பது நாட்கள் மட்டுமே தங்கியுள்ளீர்கள் (ஆனால், ஒரு மாதம் மனைவியரிடமிருந்து விலகியிருக்கப்போவதாக சத்தியம் செய்திருந்தீர்களே?)!"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள்.
பின்னர் நான் பள்ளிவாசலின் தலைவாயிலில் நின்றுகொண்டு உரத்த குரலில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை" என்று கூறினேன். அப்போது, "பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை அவர்கள் (உடனே) பரப்பிவிடுகின்றனர். அதை இறைத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டுசென்றிருந்தால் அதை ஆய்வு செய்வோர் அறிந்துகொண்டிருப்பர்" (4:83) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது. நானே அச்செய்தியை ஆய்வு செய்தவனாக இருந்தேன்.
ஆக, மனைவியருக்கு விருப்ப உரிமை அளிப்பது தொடர்பான (33:28ஆவது) வசனத்தை, வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் அருளினான்.
அத்தியாயம் : 18
2948. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓராண்டு காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் மீதிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் துணிவு வரவில்லை.
(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக "அராக்" (மிஸ்வாக்) மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு வரும்வரை நான் (அவர்களை எதிர்பார்த்தபடி) அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன்.
அப்போது அவர்களிடம் நான், "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் (நபியவர்களைச் சஞ்சலப்படுத்தும் வகையில்) ஒருவருக்கொருவர் (கூடிப் பேசி) உதவி புரிந்தவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஹஃப்ஸாவும் ஆயிஷா (ரலி) அவர்களும்தாம்" என்று பதிலளித்தார்கள்.
உடனே நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஓராண்டு காலமாக இது குறித்து உங்களிடம் நான் கேட்க வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால், உங்கள்மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் துணிவு வரவில்லை" என்று சொன்னேன். அதற்கு "(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால், என்னிடம் அது குறித்துக் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அதை நான் அறிந்திருந்தால், உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்" என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும்,அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய)வற்றின் பங்குகளை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது).
இந்நிலையில் (ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி, "நீங்கள் இப்படி இப்படிச் செய்யலாமே!" என்று என்னிடம் (ஆலோசனை) கூறினார். அவரிடம் நான், "உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?" என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், "கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொல்கின்ற) உங்களைப் பார்த்து நான் வியப்படைகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமாக இருந்தார்கள்" என்று சொன்னார்.
உடனே நான் எழுந்து, எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, அப்படியே அங்கிருந்து புறப்பட்டு ஹஃப்ஸாவிடம் சென்றேன். "என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் முழுக்கக் கோபத்துடன் இருந்தார்களாமே (அது உண்மையா)?" என்று ஹஃப்சாவிடம் கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, "அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரான) நாங்கள் அவர்களுடன் விவாதிப்பதுண்டு" என்றார். அதற்கு நான், "அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதரின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கிறேன் என்பதை அறிவாயாக! அருமை மகளே! தம்முடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்துவிடாதே!" என்று (அறிவுரை) சொன்னேன்.
பிறகு நான் நேராக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியான) உம்மு சலமாவிடம் (அவருக்கு அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் என் (தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா என்னிடம், "கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டுவந்த நீங்கள், இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்களே!" என்று கூறினார். உம்மு சலமா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி (கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே, நான் அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.
அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாத போது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.
(அந்தக் கால கட்டத்தில் சிரியா நாட்டு) "ஃகஸ்ஸான்" வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா)மீது படையெடுக்கத் திட்டமிட்டிருப்பதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைக் குறித்த அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது.
இந்நிலையில் (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் வந்து (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். "திறங்கள்; திறங்கள்"என்றார். (கதவைத் திறந்த) உடன் நான், "ஃகஸ்ஸானிய (மன்ன)ன் வந்துவிட்டானா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகிவிட்டார்கள்" என்றார்.
உடனே நான், "ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!" என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து)கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் தமக்குரிய மாடியறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாகவே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்புநிறப் பணியாளர் ஒருவர் (ரபாஹ்), ஏணியின் முதற்படியில் இருந்தார். அவரிடம் நான், "இதோ உமர் (வந்துள்ளார் என அல்லாஹ்வின் தூதரிடம் கூறி அனுமதி கேள்)" என்றேன்.
எனக்கு அனுமதி கிடைத்தபோது (அந்த அறைக்குச் சென்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.
அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களது தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பெற்ற தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேல இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களது தலைமாட்டில் பதனிடப்படா தோல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம் பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு நான் அழுது விட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறீர்கள்?" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மற்றும் இத்தாலி மன்னர்களான) குஸ்ருவும் சீசரும் இருக்கும் நிலையே வேறு! (தாராளமான உலகச்செல்வங்களுடன் உல்லாசமாக வாழ்கின்றனர்.) தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே?" என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் திருப்திப்படவில்லையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 18
2949. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் உமர் (ரலி) அவர்களுடன் (ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டு மதீனா நோக்கி) வந்தேன். நாஙகள் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் இருந்தபோது" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. மேலும், அதில் "அவ்விரு பெண்களைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு "ஹஃப்ஸாவும் உம்மு சலமாவுமே அவ்விருவரும்" என உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் "நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரின்) அறைகளுக்குச் சென்றேன். ஒவ்வொரு வீட்டிலும் அழுகைச் சப்தம் கேட்டது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை ஒரு மாத காலம்வரை நெருங்கமாட்டேன்" எனச் சத்தியம் (ஈலா) செய்திருந்தார்கள்; இருபத்தொன்பதாவது நாளானதும் (அந்த அறையிலிருந்து) இறங்கித் தம் துணைவியரிடம் சென்றார்கள்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2950. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார் என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நீண்ட நாட்களாக) எண்ணியிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலத்தைக் கடத்தி விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஹஜ்ஜுக்காக) அவர்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. (திரும்பிவரும் வழியில்) நாங்கள் "மர்ருழ் ழஹ்ரான்" எனுமிடத்தில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். அப்போது "(அங்கத் தூய்மை செய்வதற்காக) நீர்குவளையை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். அதை எடுத்துக்கொண்டு அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துத் திரும்பியதும் அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். அப்போது நான் (கேட்க நினைத்திருந்த விஷயத்தை) நினைவுகூர்ந்தேன். உடனே நான், "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சஞ்சலப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட) அவ்விரு துணைவியர் யார்?"என்று கேட்டேன். நான் கேட்டு முடிப்பதற்குள், "ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் (அவ்விருவரும்)" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2951. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), "நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அதுவே நல்லது). உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன" (66:4) என்று கூறியிருந்தான்.
(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) அவர்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் நீர்குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைக் குறித்து, "நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அதுவே நல்லது). உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து விட்டிருக்கின்றன" (66:4) என்று அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். ஹஃப்ஸாவும் ஆயிஷா (ரலி) அவர்களும்தாம் அந்த இருவர்"என்று விடையளித்தார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்மிடம் தம் புதல்வி தொடர்பான ஒரு வசனத்தைக் குறித்துக் கேட்டதை உமர் (ரலி) அவர்கள் விரும்பவில்லை. ஆகவேதான், "உங்களைக் கண்டு வியப்படைகிறேன்" என்றார்கள். ஆயினும், அதற்குரிய பதிலை உமர் (ரலி) அவர்கள் மறைக்கவில்லை.)
பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:
குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்காவில் இருந்தபோது) பெண்களை மிகைத்தவர்களாகவே இருந்துவந்தோம். (எங்களை எதிர்த்துப் பேசாத அளவிற்கு அவர்களை அடக்கிவைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, அங்கு ஒரு சமுதாயத்தைக் கண்டோம். அங்கு ஆண்களைப் பெண்கள் மிகைக்கக்கூடியவர்களாக இருந்தனர். இதை எங்களுடைய பெண்களும் அப்பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
எனது வீடு (மதீனாவின்) மேட்டுப் பகுதி கிராமங்களில் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரிடையே இருந்தது. (ஒரு நாள்) நான் என் மனைவிமீது கோபப்பட்டேன். அவர் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், "நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (நபிகளாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவதில்லை" என்று கூறினார்.
உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா "ஆம்" என்று பதிலளித்தார். நான் "உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா "ஆம்" என்றார். நான், "அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமடைந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்துவிடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார். (எனவே,)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீ எதிர்த்துப் பேசாதே! அவர்களிடம் (அதிகமாக உன் தேவைகள்) எதையும் கேட்டுக்கொண்டிராதே! உனக்கு (அவசியத் தேவையெனத்) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் நடந்துகொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல நடந்துகொள்ளத் துணிந்து)விடாதே!" என்று நான் (என் மகளுக்கு அறிவுரை) கூறினேன்.
எனக்கு அன்சாரிகளில் அண்டை வீட்டார் ஒருவர் இருந்தார். நாங்கள் இருவரும் (மேட்டுப் பாங்கான எங்கள் கிராமத்திலிருந்து) முறை வைத்துக்கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை என்னிடம் வந்து தெரிவிப்பார். அதைப் போன்றே நானும் செய்வேன்.
அந்தக் கால கட்டத்தில் நாங்கள் (சிரியா நாட்டில் வாழும்) "ஃகஸ்ஸான்" குலத்தார் எங்கள் (மதீனா) மீது போர் தொடுப்பதற்காக (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். (இவ்வாறிருக்க ஒரு நாள்) என் நண்பர் (தமது முறை நாளில் எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) இஷா நேரத்தில் என்னிடம் வந்தார்; என் வீட்டுக் கதவை (பலமாகத்) தட்டி, என்னை அழைத்தார். நான் வெளியே வந்தபோது "(இன்று) மிகப்பெரிய சம்பவமொன்று நடந்துவிட்டது" என்று கூறினார். நான், "என்ன அது? ஃகஸ்ஸானியர் (படையெடுத்து) வந்துவிட்டனரா?" என்று கேட்டேன். "இல்லை; அதைவிடப் பெரிய, அதைவிடக் கடுமையான சம்பவம் நடந்துவிட்டது; நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்" என்று சொன்னார்.
உடனே நான் "(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டார். (கூடிய விரைவில்) இப்படி நடக்கத்தான்போகிறது என்று நான் எண்ணியிருந்தேன்" என்று கூறிவிட்டு, சுப்ஹுத் தொழுகை தொழுததும் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி என் மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். அவரிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்து விட்டார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர் "எனக்குத் தெரியாது; அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார்கள்" என்று கூறினார். உடனே நான் (அங்கு இருந்த) நபியவர்களின் கறுப்புநிறப் பணியாளரிடம் (ரபாஹ்) சென்று, "உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்" என்றேன்.அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் வந்து, "அவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்" என்று கூறினார்.
உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சென்று அமர்ந்துவிட்டேன். அங்கு ஒரு கூட்டத்தார் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு துக்கம் தாளாமல் (மீண்டும்) அந்தப் பணியாளரிடம் நான் வந்து, "உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்" என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டுப் பிறகு என்னிடம் வந்து "நான் நபியவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்" என்று கூறினார். எனவே, நான் திரும்பினேன். அப்போது அந்தப் பணியாளர் என்னை அழைத்து, "உள்ளே செல்லுங்கள்! உங்களுக்கு நபியவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்" என்று கூறினார். உடனே நான் (அந்த அறைக்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அங்கு அவர்கள் நெய்யப்பட்ட பாய் ஒன்றில் சாய்ந்து படுத்திருந்தார்கள். அவர்களது விலாப் பகுதியில் அந்தப் பாய் அடையாளம் பதித்திருந்தது.
பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைத் தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். நபியவர்கள் என்னை நோக்கி தமது தலையை உயர்த்தி "இல்லை (மண விலக்குச் செய்யவில்லை)" என்று கூறினார்கள். உடனே நான், "அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று சொன்னேன்.
பிறகு (அவர்களது கோபத்தைத் தணிக்கப் பின்வருமாறு கூறினேன்:) "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் பெண்களை அடக்கிவைத்திருந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்த போது, ஆண்கள்மீது பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரை (அன்சாரிகளை)க் கண்டோம். எங்கள் பெண்களும் அப்பெண்களைப் பார்த்து (ஆண்களை எதிர்த்துப் பேசும் பழக்கத்தைக்) கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு நாள் என் மனைவிமீது கோபம் கொண்டேன். அவர் அப்போது என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் எதிர்த்துப் பேசிய(தை நான் விரும்பவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், "நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை வெறுக்கிறீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியரும்கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத் தானே செய்கின்றனர். அவர்களில் ஒருவர் நபியவர்களுடன் கோபித்துக்கொண்டு அன்றைய தினத்தில் இரவுவரை பேசுவதில்லை" என்று கூறினார். நான் "அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமடைந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். அவர்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்து விடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார் என்று சொன்னேன்" என்று கூறினேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.
பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, "உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமான வராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துவிடாதே!" என்று கூறியதைச் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! (தங்களுடன் அமர்ந்து தங்களது) வெறுமையைப் போக்கட்டுமா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்றார்கள். உடனே நான் அமர்ந்துகொண்டேன். பிறகு எனது தலையை உயர்த்தி அந்த அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை;மூன்றே மூன்று தோல்களைத் தவிர! அப்போது நான் "தங்கள் சமுதாயத்தாருக்கு (உலகச் செல்வங்களை)த் தாராளமாக வழங்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏனெனில், பாரசீகர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர்களாக இருந்தும்- உலகச் செல்வங்களை அல்லாஹ் தாராளமாக வழங்கியுள்ளானே?" என்று கூறினேன்.
உடனே (தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, "உங்களுக்கு இன்னும் (இத்தகைய) சந்தேகம் உண்டா, கத்தாபின் புதல்வரே? அவர்கள், தமக்குரிய இன்பங்களை இவ்வுலக வாழ்விலேயே (மறுமைக்கு) முன்னதாகவே வழங்கப்பட்டுவிட்ட மக்கள் ஆவர்" என்று கூறினார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டுக் கேட்டுவிட்ட) எனக்காக பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்"என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியர்மீது ஏற்பட்ட கடும் கோபத்தின் காரணமாக "(என் மனைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்ல மாட்டேன்" எனச் சத்தியம் செய்திருந்தார்கள். இறுதியில் (66:1ஆவது வசனத்தை இறக்கி) நபியவர்களை அல்லாஹ் கண்டித்தான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2952. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இருபத்தொன்பது இரவுகள் கழிந்த பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக என்னிடமே வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப்போவதில்லை என்று நீங்கள் சத்தியம் ("ஈலா") செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பதாவது நாளே வந்துவிட்டீர்களே! நாட்களை நான் எண்ணிக் கணக்கிட்டு வருகின்றேன்!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள்தாம்" என்று பதில் கூறினார்கள்.
பிறகு என்னிடம், "ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப் பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!" என்று கூறிவிட்டு, "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்" என்று தொடங்கி "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக அல்லாஹ் மகத்தான நன்மையை தயார் செய்துள்ளான்" என்று முடியும் (33:28,29) வசனங்களை எனக்கு அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! என் பெற்றோர் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து விடுமாறு எனக்கு ஆலோசனை கூறமாட்டார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "(உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே விரும்புகிறேன்" என்று சொன்னேன். மேலும், நான் "உங்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன் என்ற தகவலை,உங்களுடைய மற்ற மனைவியரிடம் தெரிவித்துவிடாதீர்கள்" என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் என்னை எடுத்துரைப்பவனாகவே அனுப்பியுள்ளான்; அவன் என்னைக் கடினப்போக்கு உள்ளவனாக அனுப்பவில்லை" என்று கூறினார்கள். இவ்வாறு அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(66:4ஆவது) வசனத்தின் மூலத்தில் உள்ள "ஃபகத் ஸஃகத் குலூபுகுமா" என்பதற்கு "உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிக்கின்றன" என்று பொருளாகும்.
அத்தியாயம் : 18
பாடம் : 6 மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு (காத்திருப்புக் கால) ஜீவனாம்சம் கிடையாது.
2953. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி, தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி, "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டதுதான்)" என்று கூறிவினார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், "அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை" என்று கூறிவிட்டு, உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை "இத்தா" இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு), "அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) "இத்தா" இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றிக்கொள்ளலாம். நீ "இத்தா"வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!" என்று கூறினார்கள்.
அவ்வாறே நான் "இத்தா"வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை;அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்" என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்துகொள்" என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அத்தியாயம் : 18
2954. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் என் கணவர் (மூன்றாவதாக) என்னைத் தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"க் காலத்தில்) அவர் எனக்குக் குறைந்த அளவே ஜீவனாம்சம் வழங்கினார். அதை நான் கண்டதும், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இதைப் பற்றி) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்; எனக்கு ஜீவனாம்சம் இருக்குமாயின், எனக்குத் தகுதியான (ஜீவனாம்சத்)தை நான் பெறுவேன். எனக்கு ஜீவனாம்சம் எதுவும் கிடையாதெனில் அவரிடமிருந்து நான் எதையும் பெற்றுக் கொள்ளமாட்டேன்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு ஜீவனாம்சமும் இல்லை; உறைவிடமும் இல்லை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்கள் தலாக் சொல்லப்பட்டு "இத்தா" இருந்தபோது என்ன நடந்தது என்று) கேட்டேன். அதற்கு அவர், "மக்ஸூமி குலத்தைச் சேர்ந்தவரான என் கணவர் என்னைத் தலாக் சொல்லிவிட்டார். எனக்கு ("இத்தா"க் கால) ஜீவனாம்சம் வழங்க மறுத்தார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அதைப் பற்றி) அவர்களிடம் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; நீ இடம்மாறி, (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் சென்று, அவரது இல்லத்தில் (இத்தா முடியும்வரை) இரு! ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். அவர் அருகில் உனது (துப்பட்டா) துணியைக் கழற்றிக்கொள்ளலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 18
2955. அள்ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அல்மக்ஸூமீ என்னை மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார்; பின்னர் யமன் நாட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது என் கணவரின் குடும்பத்தார் என்னிடம், "உனக்கு ஜீவனாம்சம் எதையும் நாங்கள் தர வேண்டியதில்லை" என்று கூறினர். அப்போது (என் கணவருடைய தந்தையின் சகோதரர் புதல்வர்) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) "அபூஹஃப்ஸ் தம் துணைவியை (ஃபாத்திமா பின்த் கைஸை) மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார். ("இத்தா"விலிருக்கும்) அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?" என்று கேட்டனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது; ஆனால் "இத்தா" உண்டு"என்றார்கள். மேலும், எனக்கு ஆளனுப்பி, "உன் விஷயத்தில் என் உத்தரவுக்கு முன் நீயாக முந்தி(க்கொண்டு முடிவெடுத்து)விடாதே" என்று கூறியனுப்பினார்கள். மேலும், என்னை (என் கணவரின் இல்லத்திலிருந்து) இடம்மாறி உம்மு ஷரீக் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு (அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் விதமாக) "உம்மு ஷரீக்கின் வீட்டிற்கு ஆரம்பக் காலத்து முஹாஜிர்கள் (விருந்தாளிகளாக) வருவார்கள். எனவே, நீ கண் பார்வையற்ற (உன் தந்தையின் சகோதரர் புதல்வரான) இப்னு உம்மி மக்தூம் அவர்களின் வீட்டிற்குச் செல்! ஏனெனில், நீ உன் துப்பட்டாவைக் கழற்றினாலும் அவர் உன்னைப் பார்க்க முடியாது" என்று கூறியனுப்பினார்கள். ஆகவே, நான் இப்னு உம்மி மக்தூமிடம் சென்றேன். எனது "இத்தா"க் காலம் முடிந்ததும் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.
அத்தியாயம் : 18
2956. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் "இந்த ஹதீஸை நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களது வாயிலிருந்து (நேரடியாக) செவியுற்று எழுதிவைத்துக்கொண்டேன்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் "நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது நான் என் கணவரின் குடும்பத்தாரிடம் ஆளனுப்பி எனது ஜீவனாம்சத்தைக் கோரினேன்" என்று ஹதீஸ் தொடருகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உனது (மறுமணம்) விஷயத்தில் நம்மைவிட்டு (நீயாக முடிவெடுத்து)விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2957. ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:
நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை (இரு தலாக் சொல்லி திரும்ப அழைத்துக்கொண்டு) இறுதி(யாக எஞ்சியிருந்த) மூன்றாவது தலாக் சொல்லிவிட்டார்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, என் (கணவரின்) இல்லத்திலிருந்து வெளியேறி (வேறு இடத்தில் "இத்தா" இருந்து)கொள்வது தொடர்பாகத் தீர்ப்புக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கண் தெரியாதவரான இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்திற்கு இடமாறிக்கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸை அறிவிப்பவரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(மூன்று) தலாக் சொல்லப்பட்டுவிட்ட ஒரு பெண், தனது இல்லத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான இந்த ஹதீஸை மர்வான் பின் அல்ஹகம் நம்ப மறுத்தார்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (செய்யலாம் என்று) கூறிவந்ததை நிராகரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ஆயிஷா (ரலி) அவர்கள்,ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு கூறிவந்ததை நிராகரித்தார்கள் என்கிற உர்வா (ரஹ்) அவர்களின் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18