பாடம் : 93 "உஹுத்”” மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்.
2690. அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "தபூக்" போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். பிறகு நாங்கள் (போரை முடித்துக்கொண்டு மதீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள) "வாதில் குரா" எனும் இடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் விரைந்து மதீனா செல்லப் போகிறேன். எனவே, உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைந்து வரலாம். விரும்பியவர் (இங்கேயே) தங்கியிருக்கலாம்" என்று சொன்னார்கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது, "இது "தாபா" (தூய நகரம்) ஆகும்; இது உஹுத் மலை; இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உஹுத்" மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் மலையைக் கூர்ந்து நோக்கி, "உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 94 மக்கா மற்றும் மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு.
2692. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2694. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர! ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவார்கள். அவர்கள் எழுப்பிய பள்ளிவாசல், (இறைத் தூதர் எழுப்பிய) பள்ளிவாசல்களில் இறுதியானதாகும்.
(இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் அபூஅப்தில்லாஹ் அல்அஃகர்ரு (ரஹ்) ஆகியோர் கூறினர்:
(பொதுவாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே (ஹதீஸ்களை) அறிவிப்பார்கள் என்பதில் நாங்கள் ஐயம் கொள்ளவில்லை. அதுவே இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தவறியதற்குக் காரணமாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறந்த பிறகு நாங்கள் இந்த ஹதீஸ் குறித்து விவாதித்தோம். அதைப் பற்றி நாம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் பேசாமலிருந்தது குறித்து எங்களை நாங்களே நொந்து கொண்டோம். அதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தால், அதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்திருப்பார்களே என்று கூறினோம். இந்நிலையில் எங்களிடம் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். அவர்களிடம் நாங்கள் இந்த ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் கேட்கத் தவறிய அந்த விஷயத்தையும் தெரிவித்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் இறைத்தூதர்களில் இறுதியானவன் ஆவேன்; எனது பள்ளிவாசல் (இறைத்தூதர்கள் எழுப்பிய பள்ளிவாசல்களில்) இறுதிப் பள்ளிவாசல் ஆகும் என்று கூறினார்கள் என்றே அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2695. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழுவதன் சிறப்புக் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை;ஆயினும், அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் "ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட" அல்லது "ஆயிரம் தொழுகைகள் தொழுவதைப் போன்று" சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர!
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2696. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2697. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்ட போது, "அல்லாஹ் எனக்கு நிவாரணமளித்தால் நிச்சயம் நான் புறப்பட்டுச் சென்று (ஜெரூசலத்திலுள்ள) "பைத்துல் மக்திஸ்" பள்ளிவாசலில் தொழுவேன்" என்று கூறினார். அவருக்கு உடல் நலம் ஏற்பட்டது. பின்னர் அவர் பயணம் செல்ல ஆயத்தமாகி நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களிடம் சென்று சலாம் சொன்னார்; அ(வர்களிடம் தமது பயணத்திற்கான காரணத்)தைத் தெரிவித்தார். அப்போது மைமூனா (ரலி) அவர்கள் "நீ அமர்ந்து, (பயணத்திற்காக) நீ தயார் செய்து வைத்தவற்றை (இங்கேயே) சாப்பிடு. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று தொழு. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த மஸ்ஜிதுந் நபவீ ஆலயத்)தில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும்; கஅபா (அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹராம்") பள்ளிவாசலைத் தவிர" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 95 மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளப்படாது.
2698. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2699. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்" என (நேர்மறை வாசகத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2700. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஅபா (அமைந்துள்ள) பள்ளிவாசல், எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (ஜெரூலத்திலுள்ள) ஈலியா (அல்அக்ஸா) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளப்ப(ட வேண்)டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 96 "இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல்" என்பது, மதீனாவிலுள்ள "மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் ஆகும்.
2701. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் நான், "இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என 9:108ஆவது வசனத்தில் கூறப்பெற்றுள்ளது) குறித்து தங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் எவ்வாறு செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் சயீத் (ரஹ்) அவர்கள், "என் தந்தை (அபூ சயீத் அல்குத்ரீ - ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (மஸ்ஜிதுந் நபவீ மற்றும் மஸ்ஜிதுல் குபா இவ்விரு பள்ளிவாசல்களில் இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளது) எது?" என்று கேட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி, அதைப் பூமியில் எறிந்தார்கள். பிறகு இதோ உங்களது இந்தப் பள்ளிவாசல்தான் என்று (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலைக் குறிப்பிட்டுச்) சொன்னார்கள்" என்றார்கள். நான் (அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் (ரஹ்) அவர்களிடம்) "தங்கள் தந்தையிடமிருந்து நானும் இவ்வாறே செவியுற்றேன் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 97 "குபா"ப் பள்ளிவாசலின் சிறப்பும் அதில் தொழுவது மற்றும் அதைத் தரிசிப்பதன் சிறப்பும்.
2702. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள்.
அத்தியாயம் : 15
2703. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"ப் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்" எனும் குறிப்பு அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2704. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2705. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள்.
அத்தியாயம் : 15
2706. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2707. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் "குபா"விற்குச் செல்வார்கள். "நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு செல்வதை நான் பார்த்தேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
2708. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் "குபா"விற்குச் செல்வார்கள். அங்கு வாகனத்திலும் நடந்தும் செல்வார்கள்" என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் செய்துவந்தார்கள்.
அத்தியாயம் : 15
2709. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒவ்வொரு சனிக்கிழமையும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15