261. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து,அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, "இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு" என்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று "முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்" என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.
அத்தியாயம் : 1
262. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகச் சிறிது முன் பின்னாகவும் கூடுதல் குறைவுடனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹதீஸ் பின்வருமாறு துவங்குகிறது: ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (விண்ணுலகப் பயணத்திற்காக) கஅபா பள்ளிவாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) மூன்று பேர் வந்தார்கள்...
அத்தியாயம் : 1
263. அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை "ஸம்ஸம்" நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.
பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க் கொண்டு விண்ணில் ஏறினார். முதல் வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானத்தின் காவலரிடம் ஜிப்ரீல், "திறப்பீராக!" என்று கூறினார். அதற்கு அக்காவலர் "யார் அது?" எனக் கேட்டார். அவர் "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?" என்று அக்காவலர் கேட்டார். அவர், "என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று அவர் கேட்க, ஜிப்ரீல் "ஆம்" என்று பதிலளித்தார். (முதல் வானத்தின் கதவை அதன்) காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே, வருக! நல்ல மகனே, வருக!" என்று அந்த மனிதர் கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "யார் இவர் ஜிப்ரீலே?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்கள். இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் வழித்தோன்றல்கள்; வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது சிரிக்கிறார். இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது அழுகிறார்" என்று பதிலளித்தார்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வானில் ஏறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் "திறப்பீராக!" என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்த பின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈசா (அலை), மூசா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் எங்கெங்கே தங்கியிருந்தார்கள் என்பது பற்றி (என்னிடம்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாகக் கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு (அவரைக்) கடந்து சென்றபோது, நான் "இவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "இவர்தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள்" என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் நான் மூசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்." என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.
நான் (ஜிப்ரீலிடம்), "இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல், "இவர்தாம் மூசா" என்று பதிலளித்தார். பிறகு நான் ஈசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், "இவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), "இவர்தாம் மர்யமின் மைந்தர் ஈசா" என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். அவர்கள், "நல்ல இறைத்தூதரும் நல்ல மகனுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், "இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), "இவர்தாம் இப்ராஹீம்" என்று பதிலளித்தார்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல் அன்சாரி (ரலி) ஆகியோர் அறிவித்துவந்துள்ளதாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத் -ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்ம் (ரஹ்), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்போது அல்லாஹ் என் சமுதாயத்தார்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், "உங்கள் சமுதாயத்தார்மீது உங்கள் இறைவன் என்ன கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள். நான், அவர்கள்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்" என்று பதிலளித்தேன். "அவ்வாறாயின் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று குறைக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து (அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான் என்று) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்.) ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்" என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (இறுதியில்), "இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது" என்று கூறிவிட்டான்.
நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச்சென்றேன். அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!" என்றார்கள். நான், "என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று சொன்னேன்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலக எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) "சித்ரத்துல் முன்தஹா"வுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பல வண்ணங்கள் அதைப் போர்த்திக்கொண்டிருந்தன. அவையென்ன என்று எனக்குத் தெரியாது. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
அத்தியாயம் : 1
264. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் சமூகத்தைச் சேர்ந்த மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபா அருகில் (பாதி) உறக்கத்திலும் (பாதி) விழிப்பிலும் இருந்தபோது, (வானவர்) ஒருவர் (வந்து), "இரண்டு பேருக்கு (ஹம்ஸா மற்றும் ஜஅஃபர்-ரலி) நடுவில் படுத்திருக்கும் மூன்றாவது மனிதரைத்தாம் (நாம் அழைத்துச் செல்லவேண்டும்)" என்று கூறுவதைக் கேட்டேன். பிறகு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் ஒரு தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் "ஸம்ஸம்" நீர் இருந்தது. பிறகு எனது நெஞ்சு இங்கிருந்து இதுவரையில் பிளக்கப்பட்டது.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் என்னுடன் இருந்த ஒருவரிடம் (-அனஸ் (ரலி) அவர்களின் நண்பர் ஜாரூத் (ரஹ்) அவர்களிடம்), ஹதீஸின் அறிவிப்பாளரான அனஸ் (ரலி) அவர்கள் "இங்கிருந்து இதுவரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "(நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து) அடிவயிறுவரை" என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.-
பிறகு எனது இருதயம் வெளியிலெடுக்கப்பட்டு, ஸம்ஸம் நீரால் அது கழுவப்பட்டது. பிறகு பழையபடி அது இருந்த இடத்தில் வைக்கப்பட்டது. பிறகு இறைநம்பிக்கையாலும் நுண்ணறிவாலும் அது நிரப்பப்பட்டது. பிறகு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த "புராக்" எனப்படும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும். பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு) முதல் வானத்திற்குச் சென்றோம். அதன் கதவைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். "உம்முடன் (வந்திருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "முஹம்மத் (ஸல்)" என்று பதிலளித்தார்கள். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். அப்போது (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகக் கதவைத் திறந்து "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துக்) கூறினார். நாங்கள் (அந்த வானிலிருந்த) ஆதம் (அலை) அவர்களிடம் சென்றோம். -ஹதீஸை இறுதிவரை குறிப்பிடுகிறார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் வானத்தில் ஈசா (அலை), யஹ்யா (அலை) ஆகியோரைத் தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்டார்கள். மூன்றாம் வானத்தில் யூசுஃப் (அலை) அவர்களையும், நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும், ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் சந்தித்ததாக குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்:
பிறகு நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், "நல்ல சகோதரரும் நல்ல நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்கின்றவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப்பெற்ற இந்த இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம் செல்வார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்றேன்.
(ஏழாம் வானத்தின் எல்லையிலிருந்த இலந்தை மரமான சித்ரத்துல் முன்தஹாவை நான் கண்டேன்.) நான்கு நதிகளையும் கண்டேன். அந்த மரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து வெளிநோக்கி இரண்டு நதிகளும், உள்நோக்கி இரண்டு நதிகளும் (ஊற்றெடுத்துப்) பாய்ந்து கொண்டிருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "ஜிப்ரீலே! இந்நதிகள் எவை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உள்ளே இருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (சல்சபீல், கவ்ஸர் ஆகிய)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு, "அல்பைத்துல் மஅமூர்" (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்) எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்டது. நான், "ஜிப்ரீல்! இது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இதுதான் "அல்பைத்துல் மஅமூர்" ஆகும். இதில் (இறைவனை வணங்குவதற்காக) ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்" என்று சொன்னார்கள். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன; அவற்றில் ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் இருந்தது. அவ்விரு பாத்திரங்களையும் என்னிடம் எடுத்துக் காட்டப் (பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்)பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, "இயற்கை நெறியையே நீங்கள் பெற்றுள்ளீர்கள்; இறைவன், உங்கள் மூலம் இயற்கை நலனையே நாடியுள்ளான். உங்கள் சமுதாயத்தாரும் அந்த இயற்கை நெறியிலேயே உள்ளனர்"என்று கூறப்பட்டது.
பிறகு என்மீது நாளொன்றுக்கு ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளை இறுதிவரை குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 1
265. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "...பிறகு என்னிடம் நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பெற்ற தங்கத் தாம்பூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பிறகு எனது (நெஞ்சு) காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
266. நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் புதல்வரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட நாள் குறித்து நினைவுகூர்ந்தார்கள்.
அப்போது "மூசா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; (யமனியர்களான) "ஷனூஆ" குலத்து மனிதர்களைப் போன்று உயரமானவர்கள்" என்று கூறினார்கள். மேலும், "ஈசா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்" என்றும் சொன்னார்கள். நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களைப் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூசா (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) "ஷனூஆ" குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள்முடியுடைவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த, மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. "நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்". (32:23)
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட (32:23ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் கத்தாதா (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி நீங்கள் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
268. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்ரக்" பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார்கள்.அப்போது, "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தார்கள். "மூசா (அலை) அவர்கள் உரத்த குரலில் "தல்பியா" சொல்லிக்கொண்டு இந்த மலைக் குன்றிலிருந்து இறங்கிவந்து கொண்டிருப்பதை (இப்போதும்) நான் காண்பதைப் போன்று உள்ளது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ஹர்ஷா மலைக் குன்றுக்குச் சென்றார்கள். "இது எந்த மலைக் குன்று?" என்று கேட்டார்கள். மக்கள், "(இது) ஹர்ஷா மலைக் குன்று" என்று பதிலளித்தனர். அதற்கு "யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் கம்பளி நீளங்கி அணிந்தவர்களாகக் கட்டுடல் கொண்ட சிவப்பு ஒட்டகமொன்றின் மீது "தல்பியா" சொல்லிக் கொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நாரினாலானது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
269. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், "மூசா (அலை) அவர்கள் தம் இருவிரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றுகொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது" என்று கூறினார்கள். -அப்போது மூசா (அலை) அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிப்பாளர் தாவூத் (ரஹ்) அவர்களது நினைவிலில்லை.-
பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்துசேர்ந்தோம். அப்போது "இது எந்த மலைக் குன்று?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஹர்ஷா" அல்லது "லிஃப்த்" என்று பதிலளித்தனர். அப்போது, "யூனுஸ் (அலை) அவர்கள் சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது கம்பளி நீளங்கி அணிந்தவர்களாக தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்துசெல்வதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நார் (கொண்டு பின்னப்பட்டது) ஆகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
270. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், "அவனுடைய இரு கண்களுக்குமிடையே "காஃபிர்" (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்" என்று சொன்னார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், "(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எத்தகைய உருவ அமைப்பில் இருந்தார்கள் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்கள் எத்தகையவர் என்றால், அவர்கள் மாநிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) தல்பியா கூறியபடி இந்த (அல்அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
271. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்கள் எனக்குக் காட்டப்பட்டனர். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) “ஷனூஆ” குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று உயரமான மனிதராக இருந்தார்கள். மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். இப்ராஹிம் (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் உங்கள் தோழருக்கு (எனக்கு) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என் தோழர்) தஹ்யா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹூ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தஹ்யா பின் கலீஃபா அவர்களுக்கு”’’ என்று (தந்தை பெயரும் இணைத்து) கூறப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
272. அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (விண்ணுலகப்) பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறியபடி, “நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்.(அப்போது கூறினார்கள்:) மூசா (அலை) அவரகள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போன்று ஒல்லியாக, தலைமுடி தொங்கலாக (வாரி) விட்டிருப்பராக இருந்தார்கள்.
(தொடர்ந்து நபி (ஸல் அவர்கள்) நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்; சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் கொண்டவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்று அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தேன். நான்தான் அவர்களுடைய வழித் தோன்றல்களிலேயே சாயலில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கின்றேன். (அந்த பயணத்தில்) என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. “நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து பருகினேன். அப்போது, “நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டுவிட்டீர்கள்” அல்லது “நீங்கள் இயற்கை மரபை பெற்றுக்கொண்டீர்கள்”. நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று என்னிடம் சொல்லப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 75 மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா-அலை), "தஜ்ஜால்" எனும் மஸீஹ் ஆகியோரைப் பற்றிய குறிப்பு.
273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இரவில் (இறையில்லம்) கஅபாவின் அருகே(கனவில்) நான் என்னைக் கண்டேன், அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்தவர்களிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது, அதை அவர் வாரிவிட்டிருந்தார், அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் “இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி’ அல்லது “இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி” இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார். நான், “இவர் யார்? என்று கேட்டேன். “இவர் தாம் மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளிக்கப்பட்டது. பின்னர் அங்கே கடும் சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான்,அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது, நான், ”இவர் யார்?” என்று கேட்டேன். “இவன் தான் அல்மஸீஹுத் தஜ்ஜால்” என்று பதிலளிக்கப்பட்டது.
இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
274. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களிடையே “தஜ்ஜால்” எனும் மஸீஹை நினைவுகூர்ந்தார்கள்.அப்போது “அல்லாஹ்,ஒற்றைக் கண்ணன் அல்லன், ஆனால் “தஜ்ஜால்” எனும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு நான் கஅபாவின் அருகே கனவில் என்னைக் கண்டேன், நீ கண்ட மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவருடைய தோள்களுக்கிடையே தொங்கிக்கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக இருந்தார். அவரது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது, இரு மனிதர்களின் தோள்கள்மீது அவர் தம் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், ”இவர் யார்?” என்று கேட்டேன்.“மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் நிறைய சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தனுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவனாக இருந்தான். நான், ”இவன் யார்?” என்று கேட்டேன். “இவன் “தஜ்ஜால்” எனும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) இறையில்லம் கஅபா அருகில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலை முடியுடைய ஒரு மனிதரைக் கண்டேன். அவர் இரு மனிதர்கள் மீது தம் இரு கைகளை வைத்துக்கொண்டிருந்தார்; “அவருடைய தலையிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது” அல்லது அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது”. நான் “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “மர்யமின் மைந்தர் ஈசா’ அல்லது “மர்யமின் மைந்தர் மஸீஹ்’ என்று பதிலளித்தார்கள். இவற்றில் எதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியாது,அவருக்குப் பின்னால் சிவப்பு நிறைமுடைய, சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனை நான் பார்த்தேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவனாக இருந்தான். நான், “இவன் யார்?” என்று கேட்டேன்.”(இவன்) “தஜ்ஜால்’’’’””” எனும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
(நான் இரவின் சிறு பகுதியில் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மகதிஸ் (ஜெருசலேம்) வரை சென்று வந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர், அப்போது நான் (கஅபாவில்) “ஹிஜ்ர்” எனும் (வளைந்த பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களைக் குறைஷியருக்கு விவரிக்கலானேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி நான் (தவாஃப்) வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அங்கு மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட ஒருவர் இரண்டு மனிதர்களுக்கிடையே இருந்தார். “அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது’ அல்லது ”அவருடைய தலையிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.” நான், “இவர் யார்?” என்று கேட்டேன். “இவர்தாம் மர்யமின் மைந்தர்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்ற போது சிவப்பான, உடல் பருத்த, சுருள்முடி கொண்ட, (ஒரு) கண் குருடான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருந்தது.நான், “இவன் யார்?” என்று கேட்டேன். “தஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள், மக்களிலேயே அவனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவர் இப்னு கத்தன் தாம்.- இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அத்தியாயம் : 1
278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் (கஅபாவிலோ ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன். நான் (இரவின் ஒரு சிறு பகுதியில் மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் – ஜெருசலேம் வரை) பயணம் மேற்கொண்டது பற்றி என்னிடம் குறைஷியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பைத்துல் மக்திஸிலுள்ள சில பொருட்களைப் பற்றி என்னிடம் அவர்கள் கேட்டனர். ஆனால், அவை என் நினைவிலிருக்கவில்லை. அப்போது நான் மிகவும் வருந்தினேன். முன்பு எப்போதும் அந்த அளவுக்கு நான் வருந்தியதேயில்லை. உடனே அல்லாஹ் பைத்துல் மக்திஸை எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் (சரியான) தகவல் தெரிவித்தேன்.
(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூசா (அலை) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட உடல் உள்ள மனிதராக இருந்தார்கள்.அங்கு மர்யமின் மைந்தர் ஈசா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான்)தான்.
அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன்.தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ இவர்தாம் நகரத்தின் காவலர் மாலிக்.அவருக்கு சலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பிய போது அவர் முந்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லிட்டார்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 76 (வான்) எல்லையிலுள்ள இலந்தை மரம் (சித்ரத்துல் முன்தஹா) பற்றிய குறிப்பு.
279. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூஹர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக)இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா” வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அ(ந்த மரத்தில் வேர்பகுதியான)து ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்தப்படுகின்றன.அதற்கு மேலேயிருந்து கிழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
“சித்ரத்துல் முன்தஹா எனும் அம்மரத்தை ஏதோ (பிரமாண்டமான) ஒன்று சூழ்ந்து கொண்டிருக்கிறது” எனும் (53:16 ஆவது) வசனம் தங்கத்தாலான விட்டில் பூச்சிகளையே குறிக்கிறது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்று(கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத்தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசன்ங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
280. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸிர்ரு பின் ஹீபைஷ் (ரஹ்) அவர்களிடம் “(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது” எனும் (53:9வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன்.அதற்கு அவர்கள்,“(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை, அறுநூறு இறக்கைகள் இருக்க, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்’ (என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்) என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1