2268. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196 ஆவது) வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது.
நான் (ஹுதைபியா நேரத்தில் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் "அருகில் வா!" என்றார்கள். நான் அருகில் சென்றேன். "இன்னும் நெருங்கி வா!" என்றார்கள். நான் இன்னும் நெருங்கினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், (தலைமுடியை மழித்துவிட்டு) அதற்குப் பரிகாரமாக (மூன்று) நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது (என்னால்) இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2269. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா பயணத்தில்) என் அருகில் (வந்து) நின்றார்கள். அப்போது எனது தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அவ்வாறாயின் நீ உனது தலையை மழித்துக்கொள்"என்றார்கள். இதையடுத்து "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாக அருளப்பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு ஒரு "ஃபரக்" அளவு தர்மம் செய். அல்லது உன்னால் இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!" என்று சொன்னார்கள்.40
அத்தியாயம் : 15
2270. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (உம்ராவிற்குச் சென்றபோது) மக்காவிற்குள் நுழைவதற்கு முன் "இஹ்ராம்" கட்டியவனாக ஹுதைபியாவில் ஒரு பாத்திரத்தின் கீழ் தீ மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (எனது தலையிலிருந்த) பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது என்னைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "உன் தலையிலுள்ள இப்பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ உனது தலையை மழித்துக்கொள். (அதற்குப் பரிகாரமாக) ஒரு "ஃபரக்" உணவை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி. (ஒரு "ஃபரக்" என்பது மூன்று "ஸாஉ"கள் அளவாகும்.) அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2271. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னிடம், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உனது தலையை மழித்துக்கொள். பிறகு ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடு. அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது மூன்று "ஸாஉ" பேரீச்சம் பழத்தை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2272. அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகில் (கூஃபா) பள்ளிவாசலில் அமர்ந்தேன். அவர்களிடம், "..அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும். அல்லது பலியிட வேண்டும" எனும் இந்த (2:196ஆவது) வசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், "இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. எனது தலையில் பிணி ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். எனது தலையிலிருந்த பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "உனக்கு ஓர் ஆடு கிடைக்குமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அப்போதுதான் இந்த (2:196ஆவது) வசனம் அருளப் பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை "ஸாஉ" உணவு வீதம், ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று சொன்னார்கள். ஆகவே, இந்த வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பெற்றது. ஆனால், அதன் சட்டம் உங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2273. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹுதைபியாவின்போது) "இஹ்ராம்" கட்டியவனாக நபி (ஸல்) அவர்களுடன் (உம்ராவிற்காகச்) சென்றேன். அப்போது எனது தலையிலும் தாடியிலும் பேன்கள் நிறைந்து விட்டன. இத்தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (என்னை அழைத்து வருமாறு) என்னிடம் நபியவர்கள் ஆளனுப்பினார்கள்; நாவிதரையும் அழைத்தார்கள். அவர் (வந்து) எனது தலையை மழித்தார். பிறகு "உன்னிடம் ஏதேனும் குர்பானிப் பிராணி உண்டா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான், "எனக்கு அதற்கான வசதி இல்லை" என்றேன். அவ்வாறாயின், மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு ஒரு "ஸாஉ"வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று கூறினார்கள். வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,)அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்" எனும் (2:196ஆவது) வசனத்தைக் குறிப்பாக என் தொடர்பாக அருளினான். பின்னர் முஸ்லிம்கள் அனைவருக்கும் (அதன் சட்டம்) பொதுவானதாக அமைந்தது.
அத்தியாயம் : 15
பாடம் : 11 "இஹ்ராம்" கட்டியவர் குருதி உறிஞ்சி எடுப்பது செல்லும்.
2274. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த நிலையில் (தமக்கேற்பட்டிருந்த ஒற்றைத் தலைவலியின் காரணத்தால்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2275. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 12 "இஹ்ராம்" கட்டியவர் தம் கண்களுக்கு மருந்திடலாம்.
2276. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் "அல்மலல்" எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் "அர்ரவ்ஹா" எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகிவிட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது,இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2277. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தர விட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய் தார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 13 "இஹ்ராம்" கட்டியவர் தம் உடலையும் தலையையும் கழுவலாம்.
2278. அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்வா" எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்" என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது"என்றார்கள்.
இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற்காக அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப்பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். "நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?" என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், "தண்ணீர் ஊற்று" என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூ அய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுசென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, "இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2279. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அப்போது அபூஅய்யூப் (ரலி) அவர்கள் தம் கைகளைப் பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தலை முழுவதற்கும் கொண்டுசென்றார்கள். (அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறிய செய்தி மிஸ்வர் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது) மிஸ்வர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "(இனி) ஒருபோதும் நான் உங்களிடம் வழக்காடமாட்டேன்" என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 14 "இஹ்ராம்" கட்டியவர் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை.
2280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்து, கழுத்து முறிக்கப்பட்டு இறந்து போனார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். அவருடைய இரு ஆடைகளால் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" கூறியவராக அவரை மறுமை நாளில் அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அரஃபா" பெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2282. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 15
2283. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களுடன் வந்தார். அப்போது தமது ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து,கடுமையாகக் கழுத்து முறிக்கப்பட்டு இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளை (பிரேத ஆடையாக) அவருக்கு அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் "தல்பியா" கூறியவராக வருவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2284. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இஹ்ராம்" கட்டிய ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தார்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதில் "ஏனெனில், அவர் மறுமை நாளில் "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்" என்று (சிறிது வித்தியாசத்துடன்) இடம் பெற்றுள்ளது. "அவர் எந்த இடத்தில் விழுந்தார் என்பதைப் பற்றி சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடவில்லை" என்று அதிகப்படியாக ஒரு குறிப்பும் அதில் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2285. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒருவரின் கழுத்தை, அவரது வாகன (ஒட்டக)ம் முறித்து விட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். அவரது முகத்தையும் மறைக்காதீர்கள். ஏனெனில், "தல்பியா"ச் சொல்லிக்கொண்டிருப்பவராக அவர் மறுமை நாளில் எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2286. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளில் அவருக்கு (பிரேத) ஆடை அணிவியுங்கள். அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2287. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. (அதனால் அவர் இறந்து விட்டார்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரது உடலைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டும்படி உத்தரவிட்டார்கள். அவருக்கு எந்த நறுமணமும் பூசக்கூடாது; அவரது தலையை மூடக்கூடாது. ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15