221. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் ஒரு செல்வத்தை அடைவதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச்சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்" என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸிலுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதில், "எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு கிணறு தொடர்பாக தகராறு இருந்தது. ஆகவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், "உம்முடைய இரு சாட்சிகள்; அல்லது (பிரதிவாதியான) அவரது சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன)" என்று கூறினார்கள்" என (சிறிய வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
222. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் (ஒரு பிரமாண வாக்குமூலத்தின்போது சட்டபூர்வமான) உரிமையின்றி ஒரு முஸ்லிமின் செல்வத்(தை அபகரிக்கும் நோக்கத்)திற்காகப் பொய்சத்தியம் செய்கிறாரோ, அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள்.
பிறகு தமது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் "யார் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறார்களோ..." என்று தொடங்கும் (3:77ஆவது) இறைவசனத்தை எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஓதிக்காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
223. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (யமன் நாட்டிலுள்ள) "ஹள்ர மவ்த்" எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் "கிந்தா" எனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்துவிட்டார்" என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், "அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்துவருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், "(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)" என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் "அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லை" என்று சொன்னார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைத் தவிர உமக்கு வேறு வழி கிடையாது" என்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கிந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற்காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
224. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு நிலம் தொடர்பான வழக்கை இருவர் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் இவர், எனது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்" என்று கூறினார் -அவ(ரது பெய)ர் இம்ரஉல் கைஸ் பின் ஆபிஸ் அல்கிந்தீ. ரபீஆ பின் இப்தான் அவருடைய பிரதிவாதி(யின் பெயர்). அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆதாரம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை" என்று பதிலளித்தார். "அப்படியென்றால் (பிரதிவாதியான) இவரது சத்தியம் (தான் வழி)" என்று சொன்னார்கள். உடனே (வாதியான) அவர், "அவ்வாறாயின் (பொய்ச் சத்தியம் செய்து) அவர், அந்த நிலத்தைத் தட்டிக்கொண்டு போய்விடுவாரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உமக்கு இதைத் தவிர வேறு வழி இல்லை" என்று கூறினார்கள். ஆகவே, (பிரதிவாதியான) அந்த மனிதர் சத்தியம் செய்வதற்காக எழுந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அநியாயமாக ஒரு நிலத்தை அபகரித்துக்கொள்பவர் தம்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையிலேயே அவனை (மறுமையில்) சந்திப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(பிரதிவாதியான அந்த மனிதரின் பெயர்) ரபீஆ பின் அய்தான்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 62 முறையின்றி பிறரது செல்வத்தைப் பறிக்க முனைகின்றவனின் உயிர் மதிப்பற்றதாகிவிடும்; அவன் கொல்லப்பட்டுவிட்டால் நரகத்திற்கே செல்வான்; தமது செல்வத்தைக் காக்கப் போராடிய ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார் என்பதற்கான ஆதாரம்.
225. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்...?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!" என்று கூறினார்கள். "(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்...?" என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்" என்றார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்...?" என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
226. உமர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கும் அன்பஸா பின் அபீசுஃப்யான் அவர்களுக்குமிடையே (ஒரு வாய்க்கால் தொடர்பாக) பிரச்சினை ஏற்பட்டு சண்டை மூளும் நிலை ஏற்பட்டது. அப்போது காலித் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுவந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "தமது செல்வத்தை காப்பதற்காக போராடிய போது ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 63 குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான்.
227. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக( பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்.அப்போது மஅகில் (ரலி) அவர்கள் உபைதுல்லாஹ்விடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் (சில நாள்) உயிர்வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து போனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை.
அத்தியாயம் : 1
228. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது (உடல்நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி) அவர்கள், "முன்பு நான் உம்மிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்" என்றார்கள். அப்போது உபைதுல்லாஹ், "இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?" என்று கேட்டார். மஅகில் (ரலி) அவர்கள், "நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை" அல்லது "உம்மிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை" " என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
229. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம். அப்போது (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கப்போகிறேன்..."என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸின் பொருள்பட அறிவித்தார்கள்.
- அபுல்மலீஹ் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிக்க (ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் இறக்கும் தறுவாயில் இல்லாவிட்டால் அதை நான் உமக்கு அறிவித்திருக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்திற்குச் செல்லவே மாட்டார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 64 சிலரது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை அகன்றுவிடுவதும் உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவதும்.
230. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்(துக் காத்)திருக்கிறேன்.
ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனத்தில் ("அமானத்" எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்; (எனது வழியான) "சுன்னா"விலிருந்தும் அறிந்துகொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)
இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்)புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து கைப்பற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் "நம்பகத்தன்மை" எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது,) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரியதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. -பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறு கற்களை எடுத்துத் தமது காலால் அதை உருட்டிக் காட்டினார்கள்.-
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற முனையமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையாளரான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி "அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?" என்று (சிலாகித்து) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது.
(அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடும். கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
231. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் யார் சோதனை (ஃபித்னா) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளார்?" என்று கேட்டார்கள். அப்போது சிலர், "நாங்கள் செவியுற்றுள்ளோம்" என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், "ஒரு மனிதன் தன் குடும்பத்தார் மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதையே நீங்கள் நினைக்கிறீர்கள் போலும்" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "ஆம்" என்றனர். "இத்தகைய சோதனையில் ஆழ்த்தப்படும் போது தொழுகை, நோன்பு, தானதர்மம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமைந்து விடும். (நான் அந்த அர்த்தத்திலுள்ள ஃபித்னா பற்றி உங்களிடம் கேட்கவில்லை.) மாறாக, கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காகத் தோன்றும் என நபியவர்கள் (முன்னறிவிப்பாகக்) கூறிய (அரசியல் குழப்பம் எனும் பொருள் கொண்ட) ஃபித்னாவைப் பற்றிச் செவியுற்றவர் உங்களில் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தனர். ஆகவே, நான், "நான் (செவியுற்றுள்ளேன்)" என்று கூறினேன். "உம் தந்தை அல்லாஹ்வுக்கு அர்ப்பணம்! (உம்மைப் போன்றே அவரும் நல்ல மனிதர்.) நீரா (செவியுற்றீர்)?" என்று கேட்க, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை(ப் பின்வருமாறு) கூறினேன்:
கோரை கோரையாக வைத்துப் பாய் பின்னப்படுவதைப் போன்று மக்கள் உள்ளங்களில் சோதனைகள் பின்னப்படும். எந்த உள்ளம் அந்தச் சோதனைகளில் அமிழ்ந்துவிடுகிறதோ அந்த உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி இடப்படும். எந்த உள்ளம் அவற்றை நிராகரித்து விடுகிறதோ அந்த உள்ளத்தில் ஒரு வெண்புள்ளி இடப்படும். இவ்வாறு சோதனைகள் இரு விதமான உள்ளங்களில் ஏற்படுகின்றன. ஒன்று, வெண்பாறை போன்று தூய்மையானது; வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும்வரை எந்தச் சோதனையும் அதற்கு இடரளிக்காது. மற்றொன்று, சிறிதளவு வெண்மை கலந்த கருமையான உள்ளம். அது தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜாவைப் போன்று நல்லதை அறியவும் செய்யாது; தீமையை நிராகரிக்கவும் செய்யாது. மனஇச்சையில் அமிழ்ந்து கிடப்பது ஒன்றுதான் அதற்குத் தெரிந்ததெல்லாம்.
(அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:)
(மேற்கண்ட ஹதீஸை நான் உமர் (ரலி) அவர்களிடம் அறிவித்துவிட்டு, "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!) உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கும் இடையே மூடிய கதவு ஒன்று உண்டு; அக்கதவு (விரைவில்) உடைக்கப்படக் கூடும்" என்று கூறினேன். உடனே உமர் (ரலி) அவர்கள், "நீர் தந்தையற்றுப் போவீர்! அது உடைக்கப்படுமா? அது (உடைக்கப் படாமல்) திறக்கப்பட்டாலாவது மீண்டும் அது மூடப்பட இடமுண்டே!" என்று கூறினார்கள். நான், "இல்லை. (அது திறக்கப்படாது.) உடைக்கத்தான் படும்" என்று சொன்னேன். மேலும், நான் அவர்களிடம் "அந்தக் கதவு "கொல்லப்படவிருக்கும்" அல்லது "இறந்துபோகவிருக்கும்" ஒரு மனிதர் தாம். இது கட்டுக்கதை அன்று. (உண்மையான செய்திதான்)" என்றும் கூறினேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (அறிவிப்பாளர்) சஅத் பின் தாரிக் (ரஹ்) அவர்களிடம், "அபூமாலிக்கே! (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) "அஸ்வது முர்பாத்தன்" என்பதன் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "கறுப்பில் தூய வெள்ளை" என்று கூறினார்கள். நான் "அல்கூஸு முஜக்கியன்" என்பதன் பொருள் யாது?" என்று கேட்டேன். அதற்கு, "தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட கூஜா" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்று மதீனாவிலிருந்து) ஹுதைஃபா (ரலி) அவர்கள் புறப்பட்டு (கூஃபா) வந்து எங்களுடன் அமர்ந்துகொண்டு (பின்வருமாறு) கூறினார்கள் என்று காணப்படுகிறது:
நான் நேற்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவரிடம் அமர்ந்திருந்தபோது அவர்கள் தம் தோழர்களிடம், "உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும் அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?" என்று கேட்டார்கள். அபூமாலிக் (ரஹ்) அவர்கள் அளித்த அருஞ் சொற்பொருள்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு காணப்படுகிறது:
உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் "(அரசியல்) குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை எமக்கு அறிவிப்பவர் உங்களில் யார்?" என்று கேட்டார்கள். அங்கு ஹுதைஃபா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள் "நான் (கேட்டிருக்கிறேன்)" என்று கூறினார்கள்.
ஹதீஸின் இறுதியில் "இது கட்டுக்கதை அன்று; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதுதான்" என ஹுதைஃபா (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 65 இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது; குறைந்த எண்ணிக்கையினரிடையே தான் அது திரும்பிச்செல்லும். அது (இறுதியில் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ ஆகிய) இரு பள்ளிவாசல்களிடையே அபயம் பெறும்.
232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 66 இறுதிக் காலத்தில் இறைநம்பிக்கை (இல்லாமற்) போய்விடுவது.
234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 67 (எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்று) அஞ்சுகின்றவர் தமது இறை நம்பிக்கையை இரகசியமாக வைத்துக்கொள்வது.
235. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் அறுநூறு முதல் எழுநூறு பேர்வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குத் தெரியாது. நீங்கள் (எதிரிகளால்) சோதிக்கப்படலாம்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சோதிக்கப் பட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒரு கட்டத்தில்) எங்களில் சிலர் இரகசியமாகவே தவிரத் தொழ முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 68 தமது இறைநம்பிக்கை குறித்து அஞ்சுகின்ற பலவீனமான ஒருவரின் உள்ளத்தைத் தேற்றுவதும், உறுதியான ஆதாரமின்றி ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்வதற்கு வந்துள்ள தடையும்.
236. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருள்களைப்) பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்கு நீங்கள் கொடுங்கள். அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)" என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். நான் முன்பு கூறியதைப் போன்றே மூன்று முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியதைப் போன்றே "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்)" என்று மூன்று முறை என்னிடம் கூறினார்கள். பிறகு, "நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், அவரைவிட மற்றொருவர் என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றம் ஏதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகத்தில் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
237. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு குழுவினருக்கு (தர்மப் பொருள்களை) வழங்கினார்கள். அவர்களிடையே நானும் அமர்ந்திருந்தேன். அப்போது, அக்குழுவினரில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறை நம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் மிகைத்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்று (மீண்டும்) கூறினேன். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்!)" என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்றேன். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்!) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றமேதும் இழைத்து, அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அக்குழுவினரில் ஒருவருக்கு ஏதும் கொடுக்காததால்) நான் எழுந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?" என்று இரகசியமாகக் கேட்டேன்" என்று (சஅத் பின் அபீக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (மூன்று முறை கேட்டு பதிலுரைத்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கழுத்திற்கும் புஜத்திற்கும் மத்தியில் அடித்து, "சஅதே! (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா? நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 69 (இறைச்)சான்றுகள் வெளிப்படுவதன் மூலம் (இறைநம்பிக்கை மீது) மன அமைதி அதிகரிப்பது.
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர் களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களைவிடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (அவர்கள் சந்தேகப்பட்டு அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், "என் இறைவா! மரித்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிப்பாய் என்று எனக்குக் காட்டுவாயாக!" என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்" என்று பதிலளித்தார்கள். (2:260)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறும்) கூறினார்கள்:
அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அன்னார் வல்லமை மிக்க ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாய் இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தங்கியிருந்த அளவிற்கு நீண்ட காலம் நான் சிறையில் தங்கியிருக்க நேரிட்டு (பிறகு அவர்களை விடுதலை செய்ய அழைப்பாளர் ஒருவர் வந்ததைப் போன்று என்னிடம் வந்து) இருந்தால், நான் அந்த அழைப்பாளரின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பிறகு நபி (ஸல்) அவர்கள் இந்த (2:260ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நபி (ஸல்) அவர்கள் இந்த (2:260ஆவது) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 70 முஹம்மத் (ஸல்) அவர்கள் (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களது மார்க்கத்தின் மூலம் மற்ற (முந்தைய) மார்க்கங்கள் காலாவதியாகிவிட்டன என்றும் நம்புவது கட்டாயமாகும்.
239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டியநிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, இறைத்தூதர்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள இறைத்தூதராக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1