198. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 57 தூயவனான அல்லாஹ், அவரவர் ஆற்றலுக்கு ஏற்பவே சுமைகளைத் தருகின்றான்.
199. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் நாடியவர்களை மன்னிப்பான்; அவன் நாடியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான்" எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று "செவியுற்றோம்; மாறு செய்தோம்" என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம்.(அவ்வாறு கூறிவிடாதீர்கள். மாறாக,) "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றே கூறுங்கள்" என்றார்கள். அவ்வாறே மக்கள், "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது" என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு (இறைவனுக்குப்) பணிந்தது (உள்ளமும்தான்).
அதைத் தொடர்ந்து அல்லாஹ், "(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்று சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். "எங்கள் அதிபதியே! நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றும் அவர்கள் வேண்டுகிறார்கள்" எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான்.
ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், ("உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்" எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்: எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பை அல்லாஹ் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை தண்டித்து விடாதே! (2:286). "ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)" என்றான் அல்லாஹ்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்திவிடாதே!" அப்போதும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் சக்திக்கு மீறிய (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே!" அதற்கும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்; மறுக்கின்ற கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" அதற்கும் "சரி! ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
200. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்" எனும் இந்த (2:284ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று அப்போது ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், "செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்; எங்களை ஒப்படைத்தோம்" (சமிஃனா, வ அதஃனா, வ சல்லம்னா) என்று கூறுங்கள்" என்றார்கள்.
உடனே (மக்களும் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், "அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பைச் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே!) "எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!" (என்று பிரார்த்தியுங்கள்)" எனும் (2:286ஆவது) வசனத் தொடரை அல்லாஹ் அருளினான். (அவ்வாறே மக்கள் பிரார்த்தித்ததும்) அல்லாஹ் "(உங்கள் பிரார்த்தனையை ஏற்று) அவ்வாறே செய்தேன்" என்றான்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்தாதிருப்பாயாக!" "அவ்வாறே செய்தேன்" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்" அதற்கும் அல்லாஹ் "அவ்வாறே செய்தேன்" என்றான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 58 உள்ளத்தில் தோன்றும் கெட்ட எண்ணங்களும் ஆசைகளும் (செயல் வடிவம் பெற்று) உறுதியாகாவிட்டால் அவற்றை அல்லாஹ் மன்னிக்கிறான்.
201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (வெளிப்படுத்திப்) பேசாமல், அல்லது அதன்படி செயல்படாமல் இருக்கும்வரை அல்லாஹ் மன்னிக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ், என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாமல், அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாமல் இருக்கும்வரை மன்னிக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 59 ஓர் அடியார் நன்மை செய்ய வேண்டும் என எண்ணினாலே அது (நன்மையாகப்) பதிவு செய்யப்படும்; தீமை செய்ய வேண்டும் என எண்ணுவதால் (மட்டும் தீமையாக) அது பதிவு செய்யப்படுவதில்லை.
203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் (நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் வானவர்களிடம்) கூறினான்: என் அடியான் ஒரு தீமை செய்ய எண்ணிவிட்டாலே அதை நீங்கள் பதிவு செய்துவிடாதீர்கள். தான் எண்ணியபடி அவன் (அந்தத் தீமையை) செயல்படுத்திவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை ஒரு நன்மையாகவே பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அந்த நன்மையை அவன் செய்து முடித்துவிட்டால் அதைப் பத்து நன்மைகளாகப் பதிவு செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
205. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து (நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றுதான் (பின்வரும்) இந்த ஹதீஸும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தாலே, அவன் அதைச் செய்து முடிக்காவிட்டாலும் ஒரு நன்மையாகவே அதை நான் பதிவு செய்வேன். அதை அவன் செய்து முடித்து விட்டாலோ, அதைப் போன்ற பத்து நன்மைகளாக அதை நான் பதிவு செய்வேன். (அதே நேரத்தில்) அவன் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதைச் செய்யாமல் இருக்கும்வரை நான் மன்னிப்பேன். அவ்வாறு தீமை செய்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு குற்றமாகவே அதை நான் பதிவு செய்வேன்.
தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள், "இறைவா! உன்னுடைய இந்த அடியான் ஒரு தீமையைச் செய்ய விரும்புகின்றானே?" என்று -அந்த அடியானைப் பற்றி அல்லாஹ் நன்கு தெரிந்திருந்தும்- கேட்கின்றனர். அதற்கு அல்லாஹ் அவனைக் கண்காணித்துவாருங்கள்! அவ்வாறு அந்தத் தீமையை அவன் செய்து முடித்துவிட்டால் செய்ததற்கொப்ப ஒரு குற்றமாகவே அதை நீங்கள் பதிவு செய்யுங்கள். எண்ணியபடி அவன் அந்தத் தீமையைச் செய்யாமல் இருந்துவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். ஏனெனில், என் (மீதிருந்த அச்சத்தி)னால்தான் அதை அவன் கைவிட்டான்" என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகுபடுத்திக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் அதைப் போன்று பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை (நன்மை) பதிவு செய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அதற்கொப்ப ஒரு தீமையே (அவர் இறைவனைச் சந்திக்கும்வரை) பதிவு செய்யப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
206. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என(மனத்தில்) எண்ணிவிட்டாலே (அதைச் செய்யா விட்டாலும்) அது ஒரு நன்மையாகவே பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணி, எண்ணிய படி அதை அவர் செய்து முடித்துவிட்டால் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும். (அதே நேரத்தில்) ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் அது (ஒரு குற்றமாகப்) பதியப்படுவதில்லை. எண்ணியபடியே அவர் செய்து முடித்தால் அது (ஒரேயொரு குற்றமாக மட்டுமே) பதிவு செய்யப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
207. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அவற்றை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே (அதைச் செயல்படுத்தாவிட்டாலும்) அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழுமையான நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
அத்தியாயம் : 1
208. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஒருவர் தாம் எண்ணியபடி ஒரு தீமையைச் செய்து விட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே அல்லாஹ் எழுதுகிறான்.) அல்லது அதையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (இத்துணை விசாலமான இறையன்புக்குப் பிறகும் ஒருவர் பாவத்தில் மூழ்கி அழிகின்றார் என்றால்,) அல்லாஹ்வின் திட்டப்படி அழியக்கூடியவர் தாம் (அவ்வாறு) அழிந்துபோவார்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 60 இறைநம்பிக்கை தொடர்பாக ஏற்படும் மனக்குழப்பமும் அந்தக் குழப்பத்தை உணர்கின்றவர் சொல்ல வேண்டியதும்.
209. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
210. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
211. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "மனக் குழப்பம்" குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று பதிலளித்தார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் (இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?" என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, "அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்" (ஆமன்த்து பில்லாஹ்) என்று சொல்லட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
213. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, வானத்தைப் படைத்தவர் யார்? பூமியைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான். அவர் "அல்லாஹ்" என்று பதிலளிப்பார். (பிறகு அல்லாஹ்வைப் படைத்தவர் யார் என்றும் கேட்பான்) என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும், "(இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் "நான் அல்லாஹ்வையும்) அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறுங்கள்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, "இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?" என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரிடம் ஷைத்தான் வந்து, "இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான் எனத் தொடங்கி மற்றவை மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
215. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் உங்களிடம் கல்வியறிவு தொடர்பான கேள்விகளைக் கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், "இதோ! அல்லாஹ்தான் நம்மைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்று கேட்பார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரின் கையைப் பிடித்துக் கொண்டு, "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே கூறினர். "(மேற்கண்டவாறு) என்னிடம் இருவர் கேட்டுவிட்டனர். இதோ! இவர்தாம் மூன்றாமவர்" அல்லது "(அவ்வாறு ஏற்கெனவே) என்னிடம் ஒருவர் கேட்டுவிட்டார். இதோ! இவர்தாம் இரண்டாமவர்"" என்று கூறினார்கள்.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. ஆயினும், அதன் இறுதியில் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே கூறினர்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உம்மிடம் மக்கள் கேள்வி கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், "இதோ! இவன்தான் (நம்மைப் படைத்த) அல்லாஹ். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்று கேட்பார்கள்" என்று கூறினார்கள்.
ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கையில் என்னிடம் கிராமவாசிகளில் சிலர் வந்து, "அபூஹுரைரா! இதோ! இவன்தான் அல்லாஹ். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்று கேட்டார்கள். உடனே நான் எனது கையில் சில சிறு கற்களை எடுத்து அவர்கள்மீது வீசியெறிந்தேன். பிறகு, "எழுந்து செல்லுங்கள்! எழுந்து செல்லுங்கள்! என் உற்ற தோழர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) உண்மையே உரைத்தார்கள்" என்றேன்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
216. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மக்கள் உங்களிடம் ஒவ்வொன்றைப் பற்றியும் வினா தொடுப்பார்கள். இறுதியில் "அல்லாஹ்தான் ஒவ்வொன்றையும் படைத்தான். அவனைப் படைத்தவர் யார்?" என்றும் கேட்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
217. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் (என்னிடம் பின்வருமாறு) கூறினான்: உம்முடைய சமுதாயத்தார் (உம்மிடம்), "இது என்ன (இதைப் படைத்தவர் யார்)? இது என்ன (இதைப் படைத்தவர் யார்)?" என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் "இதோ! அல்லாஹ்தான் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?" என்றும் கேட்பார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இது அல்லாஹ் கூறியதாக இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1