பாடம் : 24 தர்மம் செய்தவருக்கு நிச்சயம் நற்பலன் உண்டு; உரியவரின் கைக்கு தர்மம் போய்ச் சேராவிட்டாலும் சரியே!
1856. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், "இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 25 நேர்மையான ஒரு காசாளர் தம் முதலாளியின், அல்லது ஒரு மனைவி தன் கணவனின் நேரடியான அனுமதியின் பேரில்,அல்லது அவரது அனுமதியை குறிப்பால் அறிந்து வீட்டிலுள்ள (பொருளிலிருந்து) எதையும் வீணாக்காமல் தர்மம் செய்தால் அந்தக் காசாளருக்கும் அந்த மனைவிக்கும்கூட நன்மை கிடைக்கும்.
1857. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அந்தக் காரியத்திற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். அவர் முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் அக்காரியத்திற்கு வழங்குகிறார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை முறையோடு தர்மம் செய்தால், (அறவழியில்) செலவழித்தற்காக அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. இவர்களில் யாரும் யாருடைய நற்பலனிலும் சிறிதும் குறைத்துவிடமாட்டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("தனது வீட்டிலுள்ள உணவை" என்பதற்குப் பதிலாக) "அவளுடைய கணவனின் உணவிலிருந்து" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவழித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்துவிடாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 26 ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல்.
1860. "ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அடிமையாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் என் உரிமையாளரின் செல்வத்திலிருந்து எதையேனும் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம். (தர்மம் செய்யலாம்.) உங்கள் இருவருக்கும் சரிபாதி நற்பலன் உண்டு" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1861. "ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) என் உரிமையாளர் என்னிடம் இறைச்சியை (நீளமாக வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளையிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் உரிமையாளர் அறிந்தபோது என்னை அடித்துவிட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உரிமையாளரை அழைத்து, "அவரை ஏன் அடித்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு "நான் சொல்லாமலேயே எனது உணவை மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார்" என்று என் உரிமையாளர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நறபலன் உண்டு"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1862. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவன் உள்ளூரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் (கூடுதலான- நஃபில்) நோன்பு நோற்கவேண்டாம். கணவன் ஊரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் யாரையும் அவனது வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். அவள் தன் கணவனின் உத்தரவு இல்லாமல் அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் அதன் நற்பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.
அத்தியாயம் : 12
பாடம் : 27 தர்மத்தையும் இதர நற்செயல்களையும் சேர்த்துச் செய்தவர்.
1863. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தி(ன் வாசல்களில் ஒவ்வொன்றி)ல் இருந்து "அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்)" என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர், தொழுகைக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். அறப்போராளியாக இருந்தவர், அறப்போருக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். தர்மம் செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் (நோன்பாளிகளுக்கே உரிய) "அர்ரய்யான்" எனும் வாசலில் இருந்து அழைக்கப்படுவார்" என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த வாசல்களில் இருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறுவாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்தத் தலைவாயில்கள் ஒவ்வொன்றிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1864. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்கத்தின் காவலர்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு வாசலின் காவலர்களும் "இன்ன மனிதரே! இங்கே வாரும்!" என்று அழைப்பார்கள்" என்று கூறினார்கள். இதைக்கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1865. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 28 அறவழியில் தாராளமாகச் செலவிடும்படி வந்துள்ள தூண்டலும், எண்ணி எண்ணிச் செலவழிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும்.
1866. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக. (அல்லது "(ஈகை மழை) பொழிவாயாக" அல்லது "அள்ளி வழங்குவாயாக"). எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க்கொண்டிராதே. அப்படிச் செய்தால்,அல்லாஹ்வும் உனக்கு எண்ணி எண்ணியே தருவான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அள்ளி வழங்குவாயாக.(அல்லது "(ஈகை மழை) பொழிவாயாக" அல்லது "செலவழிப்பாயாக"). எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே. (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உனக்கு எண்ணியே தருவான். கஞ்சத்தனமாகப் பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்களைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1867. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னால் இயன்ற அளவு சிறிதளவேனும் தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (முடிந்து) வைத்துக்கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தன் அருள் வளங்களைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்" என்று பதிலளித்தார்கள்.
இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 29 சிறிதளவாயினும் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், அற்பமாகக் கருதி சிறிதளவைத் தர்மம் செய்ய மறுக்கலாகாது என்பதும்.
1868. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 30 இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு.
1869. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்" என்று கூறியவர்.
6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 31 உடல் நலத்தோடும் பணத்தேவையோடும் இருப்பவர் செய்யும் தர்மமே மிகச் சிறந்த தர்மம் ஆகும்.
1870. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 12
1871. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான நன்மையுடைய தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தைமீது அறுதியாக! அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சியவராகவும் நீண்டநாள் வாழவேண்டுமென எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக்கூடியதாகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! (ஏனெனில்,) அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதர் "தர்மத்தில் சிறந்தது எது?" என்று கேட்டார்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
பாடம் : 32 மேல் கைதான் கீழ் கையைவிடச் சிறந்ததாகும். மேல்கை என்பது கொடுக்கக் கூடியதும், கீழ் கை என்பது வாங்கக்கூடியதும் ஆகும்.
1872. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி தர்மம் செய்வது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் இருப்பது ஆகியவற்றைப் பற்றி உபதேசித்தார்கள். அப்போது "மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 12
1873. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே "தர்மத்தில் சிறந்தது" அல்லது "நல்ல தர்மம்" ஆகும். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது தர்மத்தைத்) தொடங்குங்கள்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1874. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு "இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1875. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12