1785. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியில் ஐந்து "ஊக்கியா"க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. பேரீச்சம் பழத்தில் ஐந்து "வஸ்க்" குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 12
பாடம் : 1 பத்திலொரு பாகம், அல்லது அதில் பாதி கடமையாகும் ஸகாத்.
1786. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நதிகளாலும் மழையாலும் முளைத்தவற்றில் பத்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும். ஒட்டகத்தின் மூலம் நீர் பாய்ச்சி முளைத்தவற்றில் ஐந்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 2 ஒரு முஸ்லிம் தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
1787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1788. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1789. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைக்காக (உரிமையாளன்மீது) ஸகாத் (கடமை) இல்லை; நோன்புப் பெருநாள் தர்மத்தைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 3 (ஓராண்டு முழுமை அடைவதற்கு முன்பே) ஸகாத் வழங்குவதும் ஸகாத் வழங்க மறுப்பதும்.
1790. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிப்பதற்காக உமர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது "இப்னு ஜமீல்,காலித் பின் அல்வலீத் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆகியோர் (ஸகாத் வழங்க) மறுத்துவிட்டனர்" என்று கூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ் அவரைச் செல்வ(ந்த)ராக ஆக்கிய பிறகே அவர் (ஸகாத் வழங்க) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நீங்கள் காலிதுக்கு அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசஉடைகளையும் போர்த்தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அப்பாஸ் அவர்களைப் பொறுத்தவரையில் அவரது ஸகாத்தையும் அதைப்போன்ற இன்னொரு மடங்கையும் வழங்குவது என்மீது பொறுப்பாகும். உமரே! ஒருவருடைய தந்தையின் சகோதரர் அவருடைய தந்தையைப் போன்றவர் ஆவார் என்பது உமக்குத் தெரியாதா?" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 4 நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றை வழங்குவது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
1791. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நிர்ணயித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1792. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகியோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1793. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். பிறகு மக்கள் (தோல் நீக்கப்பட்ட) மணிக்கோதுமையில் அரை "ஸாஉ"வை அதற்குச் சமமாக ஆக்கினர்.
அத்தியாயம் : 12
1794. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு "ஸாஉ" பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளையிட்டார்கள்.
மக்கள் ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத கோதுமைக்குச் சமமாக இரண்டு "முத்"து (அரை "ஸாஉ") தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1795. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
அத்தியாயம் : 12
1796. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" வழங்கிவந்தோம்.
அத்தியாயம் : 12
1797. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன்.
அத்தியாயம் : 12
1798. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ" ஆகிய மூன்று இனங்களிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் வரும்வரையில் இவ்வாறே வழங்கிவந்தோம். பிறகு முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையிலிருந்து இரு "முத்"து, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திற்கு ஈடானதாகும் என்று கருதினார்கள்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே வழங்கிக் கொண்டிருப்பேன்.
அத்தியாயம் : 12
1799. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம்.
அத்தியாயம் : 12
1800. இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 5 பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்கிடுமாறு வந்துள்ள கட்டளை.
1801. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 12
1802. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 6 ஸகாத் வழங்க மறுப்பது குற்றம்.
1803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த,கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்;இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:
குதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச்சுமையாகும்.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு "அந்தப் பசும்புல் வெளியில்" அல்லது "அந்தத் தோட்டத்தில்" அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச்சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1804. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால்" என்று இடம்பெற்றுள்ளது. "அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை" என்று இடம்பெறவிவ்லை.
மேலும், இந்த அறிவிப்பில் "அந்த ஒட்டகங்களின் பால்குடி மறந்த குட்டிகள்கூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. "அவருடைய இரு விலாப்புறங்களிலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்" எனவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12