1663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அல்லாஹ் தன் அடியார்களை அவற்றின் மூலம் அச்சுறுத்(தி நல்வழிப்படுத்)துகிறான். மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது அகற்றப்படும்வரை தொழுது, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
1664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக, அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். ஆகவே, கிரகணத்தை நீங்கள் கண்டால் எழுந்து தொழுங்கள்.
இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10
1665. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் (ரஹ்) மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் "இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது" என்று கூறினர்" என (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1666. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் யுக முடிவு நாள் வந்துவிட்டதோ என அஞ்சி(யதைப் போன்று) பதற்றமடைந்தவர்களாக எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அங்கு நின்று தொழுதார்கள். நிலை,குனிதல், சிரவணக்கம் ஆகியவற்றை நீண்ட நேரம் செய்(து தொழு)தார்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறு எந்தத் தொழுகையிலும் செய்வதை நான் கண்டதில்லை. பிறகு, "அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும், அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் விரைந்து ஈடுபடுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
"(சூரிய கிரகணம் ஏற்பட்டது" என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள "ஃகசஃபத்திஷ் ஷம்சு" எனும் சொல்) முஹம்மத் பின் அல்அலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கசஃபத்திஷ் ஷம்சு" என்று ஆளப்பட்டுள்ளது. ("தன் அடியார்களை எச்சரிக்கவே செய்கிறான்" என்பதன் மூலச்சொல் "யுகவ்விஃபு பிஹா இபாதஹு” என்பதற்கு மாறாக) "யுகவ்விஃபு இபாதஹு” என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1667. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடனிருந்த காலத்தில் (ஒரு நாள்) நான் என் அம்புகளை எறிந்துகொண்டிருந்தேன். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நான் அம்புகளை விட்டெறிந்துவிட்டு "இன்று சூரிய கிரகணம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்படப்போவதை நான் காண்பேன்" எனக் கூறிக்கொண்டவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அப்போது அவர்கள் தம் கைகளை உயர்த்தியபடி பிரார்த்திப்பதிலும் "தக்பீர்” சொல்(லி இறைவனைப் பெருமைப் படுத்து)வதிலும் அல்லாஹ்வைப் புகழ்வதிலும் "லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என ஏகத்துவ உறுதி மொழி) கூறுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். கிரகணம் விலகி சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருக்க இரு அத்தியாயங்கள் ஓதி இரண்டு ரக்அத்கள் தொழு(து முடித்)தார்கள்.
அத்தியாயம் : 10
1668. நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் (ஒரு நாள்) நான் மதீனாவில் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவற்றை நான் எறிந்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக, சூரிய கிரகணம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்படப்போவதை நான் காண்பேன்” எனக் கூறிக்கொண்டு, அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் கைகளை உயர்த்தி நின்றபடி தொழுதுகொண்டிருந்தார்கள். இறைவனைத் துதிப்பதிலும் அவனைப் புகழ்வதிலும் ஏகத்துவ உறுதிமொழி கூறுவதிலும் அவனைப் பெருமைப்படுத்துவதிலும் பிரார்த்திப்பதிலும் கிரகணம் விலகும்வரை ஈடுபடலானார்கள். கிரகணம் விலகவும், அவர்கள் இரு அத்தியாயங்கள் ஓதி இரு ரக்அத்கள் தொழுது முடிக்கவும் சரியாக இருந்தது.
அத்தியாயம் : 10
1669. மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நான் என் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 10
1670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்புக்காகவோ பிறப்புக்காகவோ கிரகணம் காண்பதில்லை. உண்மையில் அவை இரண்டும் இறைவனின் சான்றுகளில் உள்ளவை ஆகும். ஆகவே, கிரகணங்களை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
1671. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதருடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் கிரகணம் விலகும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 10

பாடம் : 1 இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவூட்டுதல்.
1672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" ("அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:
அத்தியாயம் : 11
1673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 2 துன்பம் நேரும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
1674. உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், "அல்லா ஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதைவிடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் "அபூசலமாவைவிட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்துவந்த குடும்பம் (அவருடைய குடும்பம்தான்)" என்று கூறினேன். ஆயினும், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றுக்கேற்ப) இன்னாலில்லாஹி... என்று நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரலி) அவர்களை அனுப்பி, தமக்காக என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நானோ முன்கோபக்காரி ஆவேன்" என்று கூறிவிட்டேன். (எனது பதிலைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருடைய மகள் (அவரது துணையின்றியே) தன்னிறைவுடன் இருக்க நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். அவரது முன்கோபத்தைப் போக்கவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1675. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஓர் அடியார் தமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா" என்று கூறினால், அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (இன்னா லில்லாஹி... என்று) நான் கூறினேன். அல்லாஹ் அபூசலமாவைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.
அத்தியாயம் : 11
1676. மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூசலமாவைவிடச் சிறந்தவர் எவர் இருக்க முடியும்?" என்று கூறினேன். பிறகு அல்லாஹ் என் உள்ளத்தில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி கூறும்) உறுதியை அளித்தபோது, நான் அவ்வாறே சொன்னேன். அல்லாஹ்வின் தூதரையே மணந்துகொண்டேன்.
அத்தியாயம் : 11
பாடம் : 3 நோயாளியிடமும் இறப்பிற்கு நெருக்கத்தில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை.
1677. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்" கூறுகின்றனர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்துவிட்டார்" என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக" என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன்.
அவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 4 உயிர் பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும் இறந்தவருக்காகப் பிரார்த்திப்பதும்.
1678. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, "உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது" என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்" கூறுகின்றனர்" என்று கூறினார்கள். மேலும், "இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 11
1679. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் விட்டுச் சென்றவர்களில் அவருக்குப் பகரமாக அவரைவிடச் சிறந்தவரை ஏற்படுத்துவாயாக" என்றும் ("இறைவா,அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!" என்பதைக் குறிக்க) "இஃப்சஹ் லஹு" எனும் சொற்றொடரை ஆளாமல் "அவ்சிஃ லஹு" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. "பிரார்த்தனையில் ஏழாவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிய மற்றொன்றை நான் மறந்து விட்டேன்" என அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் அல்ஹஃத்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 11
பாடம் : 5 இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல்.
1680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலைகுத்தி நிற்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "ஆம் (கவனித்திருக்கிறோம்)" என்று விடையளித்தனர். "உயிர் பிரிந்து செல்லும்போது, அதைப் பார்வை பின்தொடர்வது தான் அது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
பாடம் : 6 இறந்தவருக்காக அழுவது.
1681. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது, நான் "(என் கணவர்) ஒரு வெளியூர்காரர்; அந்நிய மண்ணில் (இறந்துபோயிருக்கிறார்). அவருக்காக நான் (ஒப்பாரி வைத்து) நன்கு அழுவேன். அதுபற்றி (ஊரெல்லாம்) பேசப்பட வேண்டும்" என்று கூறிக்கொண்டு அழத் தயாரானேன். அப்போது (மதீனாவையொட்டிய "அவாலீ" எனப்படும்) மேட்டுப் பகுதியிலிருந்து ஒரு பெண் எனக்கு ஒத்தாசை செய்யும் நோக்கில் வந்து கொண்டிருந்தாள். அவளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிர்கொண்டு "அல்லாஹ் ஓர் இல்லத்திலிருந்து (அந்த இல்லத்தார் இறைநம்பிக்கைகொண்டதன் மூலம்) ஷைத்தானை வெளியேற்றிய பின் அவனை நீ உள்ளே அனுமதிக்க விரும்புகிறாயா?" என்று இரண்டுமுறை கேட்டார்கள். எனவே, நான் அழுகையை நிறுத்திக்கொண்டேன்; (அதன் பின் அவருக்காக) நான் அழவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 11
1682. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ரலி) "தமது குழந்தை" அல்லது "தம் மகன்" இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், "என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!" என்று கூறியனுப்பினார்கள். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து "தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறுகிறார்" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.
(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இருப்பினும், ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது மேற்கண்ட அறிவிப்பே (ஹதீஸ்- 1682) நிறைவானதும் விரிவானதுமாகும்.
அத்தியாயம் : 11