பாடம் : 1 மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது கைகளை உயர்த்தல்.
1630. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மழைவேண்டிப்) பிரார்த்தித்தபோது, அவர்களுடைய அக்குள்களின் வெண்மை காணப்படும் அளவிற்குத் தம் கைகளை உயர்த்தினார்கள்.
அத்தியாயம் : 9
1631. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவிற்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "தமது அக்குளின் வெண்மை" அல்லது "அக்குள்களின் வெண்மை” தென்படும் அளவிற்கு (உயர்த்தினார்கள்)" என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 9
1632. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது, தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 9
பாடம் : 2 மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.
1633. அனஸ் பின் மாலிக் (ரலி) அவ்ர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் "தாருல் களா" திசையிலிருக்கும் வாசல் வழியாகப் பள்ளிவாசலுக்குள் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றவாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். வந்த மனிதர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, "அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழிவிப்பான்" என்று கூறினார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தி, "இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது நாங்கள் வானத்தில் மேகக் கூட்டங்களையோ திரள்களையோ காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "சல்உ" மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை (என்பதை நாங்கள் தெளிவாகக் காண முடிந்தது). அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு பரவியது; பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வாரம்வரை நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை.
அடுத்த வெள்ளியன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதேவாசல் வழியாக (பள்ளிவாசலுக்குள்) வந்தார். (வந்தவர்) நின்றவாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, "அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால்) எங்கள் (கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன (போக்கு வரத்து தடைப்பட்டுவிட்டது). எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, "இறைவா, எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா, சிறு குன்றுகள், அகன்ற மலைகள், ஓடைகள்,விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எனக்குத் தெரியவில்லை" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 9
1634. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு முறை) பஞ்சம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு மேடைமீது (நின்று) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, ஒரு கிராமாவாசி எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே, செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர்" என்று கூறினார். (மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.)
இந்த அறிவிப்பில் கீழ்க்காணும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்தப் பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தார்களோ அந்தப் பகுதி விலகிச்சென்றது. மதீனா (நகரைச் சுற்றிலும் மேகங்கள் ஒதுங்கியதால் நடுவில் மதீனா நகரம்) ஒரு பாதாளம் போன்று எனக்குத் தெரிந்தது. "கனாத்" ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் அந்த அடைமழை குறித்துப் பேசாமல் இருக்கவில்லை.
அத்தியாயம் : 9
1635. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து உரத்த குரலில், "அல்லாஹ்வின் தூதரே, மழை பொய்த்துவிட்டது; (பச்சை) மரங்கள் (காய்ந்து) சிவந்துவிட்டன; கால்நடைகள் மாண்டுவிட்டன" என்று கூறினர். (மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கீழ்க்காணும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததும் மதீனாவைச் சூழ்ந்திருந்த மேகம் விலகி) மதீனா தெளிவடைந்தது. அதன் சுற்றுப்புறங்களில் மழை பொழியலாயிற்று. மதீனாவில் ஒரு துளி மழைகூடப் பெய்யவில்லை. அப்போது நான் மதீனாவைப் பார்த்தேன். அது கிரீடத்திற்கு நடுவில் இருப்பதைப் போன்றிருந்தது.
அத்தியாயம் : 9
1636. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வரும் தகவல் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்ததும்) அல்லாஹ் மேகங்களை ஒன்றிணையச் செய்தான். (மழை கொட்டியது.) நாங்கள் (மழை விடட்டும் என) எதிர்பார்த்துக் காத்திருந்தோம். (எங்களில்) தைரியமிக்க மனிதர்கூட வீட்டுக்குச் செல்லத் தயங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 9
1637. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளியன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபோது ஒரு கிராமவாசி வந்தார்" என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
"(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழையை நிறுத்துமாறு பிரார்த்தித்ததும்) சுருட்டப்படுகின்ற சால்வையைப் போன்று மேகம் கலைந்து சென்றதை நான் கண்டேன்" என்று இந்த அறிவிப்பில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 9
1638. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்?"என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 9
பாடம் : 3 கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போது இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதும் மழை பெய்யும் போது மகிழ்ச்சி அடைவதும்.
1639. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்; மகிழ்ச்சி வந்துவிடும்.
நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, "அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்" என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது "(இது இறைவனின்) அருள்" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 9
1640. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ‘ஆத்" சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 9
1641. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரேயடியாகத் தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரித்ததை ஒருபோதும் நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும். (ஒரு நாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒரு விதமான கலக்கம் தங்களது முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா, அதில் (இறைவனின்) வேதனை இருக்கலாம் என்பதால், என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ("ஆத்" எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றால் வேதனை செய்யப்பட்டனர். அந்தச் சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்" என்றே கூறினர்" என பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 9
பாடம் : 4 ("ஸபா" எனும்) கீழைக் காற்று மற்றும் ("தபூர்" எனும்) மேலைக் காற்று பற்றிய குறிப்பு.
1642. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ("ஸபா" எனும்) கீழைக்காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; "ஆத்" சமூகத்தார் ("தபூர்" எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 9

பாடம் : 1 சூரிய கிரகணத் தொழுகை.
1643. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (மக்களுடன்) தொழுதார்கள். அதில் நன்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவை நன்கு நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி நன்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முதல் நிலையைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நன்கு நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முதல் ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பிறகு எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாகவே இருந்தது. பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி, நிலையில் நின்றார்கள். அந்த நிலையிலும் நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள்.
பின்னர் (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. கிரகணம் ஏற்படுவதை நீங்கள் கண்டால் "தக்பீர்" (அல்லாஹு அக்பர்) கூறுங்கள்; அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்; தானதர்மம் செய்யுங்கள். முஹம்மதின் சமுதாயத்தாரே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபட்டாலும் (அதைக் கண்டு) கடுமையாக ரோஷம் கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். நான் (சொல்ல வேண்டியதைச்) சொல்லிவிட்டேன் அல்லவா?
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1644. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவாழ்த்துக்குப் பின்! சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும்" என்று கூறியதாகவும், பிறகு இரு கைகளையும் உயர்த்தி "இறைவா, (சொல்ல வேண்டியதைச்) சொல்லிவிட்டேனா?" என்று கேட்டதாகவும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1645. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று (தொழுகையில்) நின்று "தக்பீர்" கூறினார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிலையில்) நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். பிறகு "தக்பீர்" கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி "சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ். ரப்பனா வ ல(க்)கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறினார்கள். பிறகு நின்ற வண்ணம் நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். இ(ப்போது அவர்கள் ஓதிய)து முந்தைய ஓதலைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு "தக்பீர்" கூறி, நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். ரப்பனா வ ல(க்)கல் ஹம்து" எனக் கூறி (நிலையில் நின்று)விட்டு, பிறகு சஜ்தாச் செய்தார்கள். (அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் சஜ்தாச் செய்தார்கள்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.)
பிறகு முந்தைய ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். அவர்கள் (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் பூர்த்தி செய்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன் சூரிய வெளிச்சம் வந்து விட்டிருந்தது. பிறகு எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே, அவற்றை நீங்கள் கண்டால் தொழுகைக்கு விரையுங்கள்" என்றும், "உங்களைவிட்டு அவற்றை அல்லாஹ் அகற்றும்வரை தொழுங்கள்" என்றும் கூறினார்கள்.
மேலும் "நான் இந்த இடத்தில் (தொழுகையில் நின்றிருந்தபோது) உங்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள அனைத்தையும் கண்டேன். (தொழுகையிலிருந்தபோது) நான் முன்னே செல்வதைப் போன்று நீங்கள் கண்டீர்களே, அப்போது சொர்க்கத்தின் பழக்குலை ஒன்றைப் பறிக்க நான் நாடினேன். பின்னர் நான் பின்வாங்குவதைக் கண்டீர்களே, அப்போது நான் நரகத்தைக் கண்டேன். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்து (உக்கிரமாக எரிந்து)கொண்டிருந்தது. மேலும், நரகத்தில் (அம்ர்) இப்னு லுஹை என்பாரைக் கண்டேன். அவர்தாம் முதன்முதலில் கடவுள் சிலைக்காக ஒட்டகத்தை (சாயிபா) நேர்ந்து விட்டவர் ஆவார்" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பு "தொழுகைக்கு விரையுங்கள்" என்பதோடு முடிந்துவிடுகிறது; அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் அவரது அறிவிப்பில் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 10
1646. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாத்து ஜாமிஆ" (தொழுகை நடைபெறுகிறது) என்று அறிவிக்கச் செய்தார்கள். மக்கள் கூடியதும் முன்னே சென்று "தக்பீர்" கூறி, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்(து தொழுவித்)தார்கள்.
அத்தியாயம் : 10
1647. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கிரகணம் ஏற்பட்டபோது) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதை அறிவித்துவந்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 10
1648. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது நம்பிக்கைக்குரிய ஒருவர் - அதாவது ஆயிஷா (ரலி) அவர்கள்- கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, அவர்கள் (தொழுகையில்) நீண்ட நேரம் (கால்கடுக்க) நின்றார்கள். நிலையில் நிற்பார்கள்; பிறகு ருகூஉச் செய்வார்கள்; மீண்டும் நிலையில் நிற்பார்கள்; பிறகு ருகூஉச் செய்வார்கள்; பிறகு நிலையில் நிற்பார்கள்; ருகூஉச் செய்வார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் மூன்று ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள். சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்யும்போது "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தும்போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி எழுந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். (தொழுகை முடிந்த) பிறகு "சூரியனும் சந்திரனும் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் காண்பதில்லை. மாறாக, அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும். அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்(தி நல்வழிப்படுத்)துகிறான். கிரகணத்தை நீங்கள் கண்டால் (இருள் விலகி) வெளிச்சம் வரும்வரை இறையை நினைவு கூருங்கள்"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 10
1649. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகையில் ரக்அத்துக்கு மூன்று ருகூஉகள் வீதம்) ஆறு ருகூஉகளும் (ரக்அத்துக்கு இரண்டு சஜ்தாக்கள் வீதம்) நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10