1492. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனூ ஃகிஃபார் குலத்தாரின் நீர்நிலை அருகே இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஒரேயொரு ஓதல் முறைப்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்" என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். (பல்வேறு மொழிவழக்குகள் கொண்ட) என் சமுதாயத்தார் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்"என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி) நபியவர்களிடம் வந்து, "குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் இரண்டு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்" என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் "நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். என் சமுதாயத்தார் இ(வ்வாறு ஓதல் முறையை இரு முறைகளுக்குள் அடக்குவ)தற்குச் சக்தி பெறமாட்டார்கள்" என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்றாவது முறை (இறைவனிடம் சென்று விட்டுத் திரும்பி)வந்து, "உங்கள் சமுதாயத்தார் குர்ஆனை மூன்று ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்" என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். இ(வ்வாறு ஓதல் முறையை மூன்று முறைகளுக்குள் அடக்குவ)தற்கு என் சமுதாயத்தார் சக்தி பெறமாட்டார்கள்" என்று கூறினார்கள். பிறகு நான்காவது முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி)வந்து, "குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அவர்கள் (இந்த ஏழு முறைகளில்) எந்த முறைப்படி ஓதினாலும் அவர்கள் சரியாகவே ஓதினார்கள்" என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1493. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நஹீக் பின் சினான் எனப்படும் ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "அபூஅப்திர் ரஹ்மான்,குர்ஆனில் (47ஆவது அத்தியாயத்திலுள்ள) இந்த எழுத்தை எப்படி ஓதுகிறீர்?: "மிம்மாயின் ஃகைரி ஆசினின்" என்று அலிஃபுடன் ஓதுகின்றீரா, அல்லாது "மிம்மாயின் ஃகைரி யாசினின்" என்று "யா"வுடன் ஓதுகின்றீரா?" எனக் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இதைத் தவிர குர்ஆன் முழுவதையும் சரியாக மனனமிட்டு விட்டாயோ?" என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் முஃபஸ்ஸல் எனும் (ஹுஜுராத் முதல் அந்நாஸ் (49-114) வரையிலான) அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஓதுகின்றேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ? மக்களில் சிலர் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களது தொண்டைக் குழியைக் கடந்து செல்லாது. அது மட்டும் அவர்களது உள்ளத்திற்குள் சென்று பதிந்துவிட்டால் நிச்சயம் பயன் தரும். தொழுகையில் மிகச் சிறந்த நிலை ருகூஉவும் சஜ்தாவுமாகும். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்" என்று கூறினார்கள். (இதைக் கூறிய) பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தமது இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து அல்கமா (ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள். (சிறிது நேரம் கழித்து) அல்கமா (ரஹ்) அவர்கள் வெளியே வந்து "அந்த (சரிநிகர்) அத்தியாயங்கள் (எவை என்பது) பற்றி எனக்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பனூ பஜீலா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்தார்" என்றே இடம்பெற்றுள்ளது. "நஹீக் பின் சினான் எனப்படும் ஒரு மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1494. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபூவாயில் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது:
பிறகு அல்கமா (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தினுள்ளே) செல்லப் போனார்கள். அப்போது நாங்கள், "நீங்கள் அவர்களிடம் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ரக்அத்தில் ஓதிவந்த அந்த சரிநிகர் அத்தியாயங்கள் (எவை என்பது) குறித்துக் கேளுங்கள்!" என்றோம். அல்கமா (ரஹ்) அவர்கள் உள்ளே சென்று,இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவினார்கள். பின்னர் எங்களிடம் வந்து, "(அவை:) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் தொகுத்துவைத்துள்ள குர்ஆன் பிரதியின்படி (ஆரம்ப) இருபது முஃபஸ்ஸல் அத்தியாயங்களாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1495. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் பத்து ரக்அத்களில் இருபது அத்தியாயங்களாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிவேன்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1496. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) காலையில் வைகறை (சுப்ஹு)த் தொழுகைக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். வாசலில் (நின்று) சலாம் சொன்னோம். அவர்கள் எங்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஆனால், நாங்கள் சிறிது நேரம் வாசலிலேயே (தயங்கியவாறு) நின்றுகொண்டிருந்தோம். அப்போது பணிப் பெண் வெளியே வந்து, "நீங்கள் உள்ளே வரக் கூடாதா?" என்று கேட்டாள். நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்;
)எங்களைக் கண்டதும்) "உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட பின்பும் ஏன் நீங்கள் உள்ளே வரவில்லை?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "(அப்படியொன்றும்) இல்லை; (தங்கள்) வீட்டாரில் எவரேனும் உறங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் எண்ணினோம்" என்று சொன்னோம். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இப்னு உம்மி அப்தின் குடும்பத்தார் (தொழுகையில்) அலட்சியமாக இருப்பார்கள் என எண்ணிக்கொண்டீர்களா?" என்று கூறி விட்டு (மீண்டும்) இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகியிருக்கலாம் என எண்ணிய அவர்கள் (தம் பணிப்பெண்ணிடம்) "பெண்ணே! சூரியன் உதயமாகிவிட்டதா, பார்?" என்றார்கள். அந்தப் பெண் பார்த்தபோது சூரியன் உதயமாகியிருக்கவில்லை. எனவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மீண்டும் இறைவனைத் துதிப்பதில் ஈடுபடலானார்கள். பின்னர் சூரியன் உதயமாகி விட்டதாக எண்ணியபோது (மறுபடியும்) "பெண்ணே, சூரியன் உதயமாகிவிட்டதா, பார்!" என்றார்கள். அவள் பார்த்தபோது சூரியன் உதயமாகிவிட்டிருந்தது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "இன்றைய நாளை நமக்கு மீட்டுத்தந்த இறைவனுக்கே புகழ் யாவும்; அவன் நம்மை நம் பாவங்களால் அழித்துவிடவில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "நேற்றிரவு நான் "முஃபஸ்ஸல்" அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக (குர்ஆனை) ஓதினீரோ? நாங்கள் ஒரே அளவிலமைந்த அத்தியாயங்களை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதும்போது) செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவிலமைந்த "முஃபஸ்ஸல்" அத்தியாயங்கள் பதினெட்டையும் "ஹாமீம்" (எனத் தொடங்கும் அத்தியாயங்களின்) குடும்பத்தில் இரண்டு அத்தியாயங்களையும் நான் மனனமிட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1497. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ பஜீலா குடும்பத்தைச் சேர்ந்த நஹீக் பின் சினான் என்று கூறப்படும் ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து "நான் ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் அனைத்தையும் ஓதுகிறேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்கள் வீதம் ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்து வைத்துள்ளேன்" என்று கூறினார்கள்.
- அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து "நான் இன்றிரவு ஒரே ரக்அத்தில் முஃபஸ்ஸல் அத்தியாயங்கள் முழுவதையும் ஓதி முடித்தேன்" என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு அத்தியாயங்களாகச் சேர்த்து ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன்" எனக் கூறிவிட்டு, முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 50 சில ஓதும் முறைகள் பற்றிய குறிப்பு.
1498. அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் பள்ளிவாசலில் குர்ஆன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் "நீங்கள் இந்த (54:32ஆவது) வசனத்தை எப்படி ஓதுகிறீர்கள்? ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என "தால்" எனும் எழுத்துடன் ஓத வேண்டுமா? அல்லது (ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என) "ஃதால்" எனும் எழுத்துடன் ஓத வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு "தால்" (எனும் எழுத்து) கொண்டே (ஓத வேண்டும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முத்தகிர்" என "தால்" (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அஸ்வத் (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1499. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (54:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) "ஃபஹல் மின்(ம்) முத்தகிர்" என்றே ஓதினார்கள்.
இதை அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1500. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மாணவர்களான) நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தோம். (நாங்கள் வந்துள்ள செய்தியறிந்து) எங்களிடம் அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து, "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி ஓதத் தெரிந்தவர் எவரேனும் உங்களிடையே உண்டா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்; நான் (இருக்கிறேன்)" என்று பதிலளித்தேன். அபுத் தர்தா (ரலி) அவர்கள், "வல்லைலி இஃதா யஃக்ஷா" எனும் இந்த (92:3ஆவது) வசனத்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்?" என்று வினவினார்கள். நான் "வல்லைலி இஃதா யஃக்ஷா வத்தகரி வல் உன்ஸா" என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) "வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா" என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், இவர்களை நான் பின்பற்றமாட்டேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1501. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதேன். பின்னர் எழுந்து ஒரு சபைக்குச் சென்று அதில் அமர்ந்தேன். அப்போது ஒருவர் (அபுத்தர்தா-ரலி) வந்து என் அருகே அமர்ந்தார். அவரிடம் (அக்கால) மக்களின் எளிமையையும் தோற்றத்தையும் கண்டேன். அவர் (என்னிடம்), "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதுகின்ற முறையை நீங்கள் மனனமிட்டுள்ளீர்களா?" என்று வினவினார்.
அத்தியாயம் : 6
1502. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் "நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்க, "இராக்கியர்" என்று நான் பதிலளித்தேன். "இராக்கியரில் நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று அன்னார் வினவ, "கூஃபாவாசி" என நான் விடையளித்தேன். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிய முறையில் நீங்கள் ஓதுவீர்களா?" என அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அப்படியானால், "வல்லைலி இதா யஃக்ஷா" எனும் (92ஆவது) அத்தியாயத்தை ஓதிக் காட்டுங்கள்" என்றார்கள். நான் "வல்லைலி இதா யஃக்ஷா" என ஓதத் தொடங்கி "வத்தகரி வல்உன்ஸா" என ஓதினேன். உடனே அபுத்தர்தா (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் செவியேற்றேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்கமா (ரஹ்) அவர்கள் "நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6
பாடம் : 51 தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நேரங்கள்.
1503. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பின்னாலிருந்து சூரியன் மறையும் வரைத் தொழ வேண்டாம் எனவும்,சுப்ஹுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகும் வரைத் தொழ வேண்டாம் எனவும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 6
1504. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகும் வரையும் அஸ்ருக்குப் பின்னாலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழ வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் பலர் கூறக்கேட்டுள்ளேன். அவர்களில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் ஒருவர். அன்னார் எனக்கு மிகவும் விருப்பமானவர்களாவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1505. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சயீத் மற்றும் ஹிஷாம் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("சூரியன் உதயமாகும் வரை" என்பதைச் சுட்ட "ஹத்தா தத்லுஅஷ் ஷம்சு" எனும் சொற்றொடருக்கு பதிலாக) "ஹத்தா தஷ்ருகஷ் ஷம்சு" எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1506. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் மறையும்வரை எந்தத் தொழுகையும் இல்லை. ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் உதிக்கும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1507. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையும் சூரியன் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழ வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1508. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
)சரியாகச்) சூரியன் உதிக்கும் நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ நீங்கள் தொழுவதற்காகத் தேர்வு செய்யாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும் போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரைத் தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரைத் தொழுகையைத் தாமதப்பபடுத்துங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1510. அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முகம்மஸ்" எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு "இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால்,அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத் தொழுகையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பின்னாலிருந்து (சூரியன் மறைந்து) நட்சத்திரம் தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள "ஷாஹித்" எனும் சொல்லுக்கு "நட்சத்திரம்" என்று பொருள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1511. உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.
1.சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை,
2.ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை.
3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை.
அத்தியாயம் : 6