6952. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا "". فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنْصُرُهُ إِذَا كَانَ مَظْلُومًا، أَفَرَأَيْتَ إِذَا كَانَ ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ قَالَ "" تَحْجُزُهُ أَوْ تَمْنَعُهُ مِنَ الظُّلْمِ، فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ "".
பாடம்: 7 தம் நண்பருக்கு உயிர்ச் சேதமோ உடல் சேதமோ ஏற்படுமென ஒருவர் அஞ்சும்போது, ‘இவர் என் சகோதரர்தான்’ என்று சத்தியம் செய்(து காப்பாற்று)வது அவ்வாறே நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொருவரும் அஞ்சும்போது காப்பாற்றலாம். ஏனெனில், ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிமை அநீதியாள னிடமிருந்து காப்பதும், அவனுக்காகப் போராடுவதும், (தக்க சமயத்தில் காலை வாரிவிடுவதன் மூலம்) அவனுக்குத் துரோகம் இழைக்காமலிருப்பதும் அவசியமாகும்.15 அவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவனைக் காப்பதற்காக ஒருவர் போராடி(யதில் அநீதியாளன் கொல்லப்படுவானா)னால் அவர்மீது பழிவாங்கல் தண்டனை கிடையாது.16 ஒரு முஸ்லிமிடம், “நீ இந்த மதுவை அருந்த வேண்டும்; அல்லது இந்த செத்தப் பிராணியின் மாமிசத்தை நீ புசிக்க வேண்டும்; அல்லது உன்னுடைய அடிமையை நீ விற்க வேண்டும்; அல்லது (இன்னாருக்கு) நீ கடன் கொடுக்க வேண்டியுள்ளது என ஒப்புக்கொள்ள வேண்டும்;. அல்லது (இன்னாருக்கு) நீ கட்டாயம் அன்பளிப்பு வழங்க வேண்டும்; அல்லது நீ செய்த ஒப்பந்தம் ஒன்றை முறித்துக்கொண்டதாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், உன் தந்தையை அல்லது உன் இஸ்லாமியச் சகோதரனை நாங்கள் கொன்றுவிடுவோம்” என்பன போன்ற மிரட்டல் விடப்பட்டால், மேற்சொன்னவற்றை அவர் செய்வது செல்லும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்” என்று கூறியுள்ளார்கள். ஒரு முஸ்லிமிடம், ‘நீ இந்த மதுவை அருந்த வேண்டும்; அல்லது இந்த செத்த பிராணியின் மாமிசத்தை நீ புசிக்க வேண்டும். இல்லையேல், உன் மகனை அல்லது உன் தந்தையை அல்லது மணமுடிக்கத் தகாத (உன்) நெருங்கிய உறவினரை நாங்கள் கொலை செய்துவிடுவோம்’ என்று (அநீதியாளனால் மிரட்டிக்) கூறப்பட்டால் மேற்சொன்னவற்றைச் செய்வதற்கு அவருக்கு அனுமதியில்லை. ஏனெனில், இவர் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டவர் அல்லர் என்று சிலர் கூறுகின்றனர். அதே சமயம், ஒருவரிடம், “இந்த அடிமையை நீ விற்றுவிடு; அல்லது (இன்னாருக்கு) நீ கடன் தர வேண்டியுள்ளதென ஒப்புக்கொள்; அல்லது (இன்னாருக்கு) அன்பளிப்பு வழங்கு. இல்லையேல், உன் தந்தையை அல்லது உன் மகனை நாங்கள் கொன்றுவிடுவோம்” என (அநீதியாளர்களால்) கூறப்பட்டால் (சொன்னபடி) அவ்வாறே செய்வது அவருக்கு அவசியமாகும் என்பதுதான் அனுமானம். ஆயினும், உசித மரபுப்படி இந்த வியாபாரமும் அன்பளிப்பும் இதில் நடந்த எல்லா ஒப்பந்தங்களும் செல்லாமல் போய்விடும் என்றும் கூறுகிறார்கள். இதன் மூலம், முதலில் கூறிய தங்களது கருத்துக்குத் தாங்களே முரண்படுகிறார்கள்.17 அது மட்டுமன்றி, குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஆதாரமின்றி மணமுடிக்கத் தகாத இரத்தபந்த உறவினர்களுக்கும் இதர உறவினர்களுக்கும் இடையே வேறுபாடும் காட்டுகின்றனர்.18 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் துணைவியாரைப் பார்த்து (கொடுங்கோல் மன்னனிடம்), “இவள் என் சகோதரி” என்று கூறினார்கள். இது (‘கொள்கைச் சகோதரி’ என்ற) மார்க்க அடிப்படையில் கூறப்பட்டதாகும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சத்தியம் செய்யும்படி கூறுபவன் அநியாயக்காரனாயிருந்தால் சத்தியம் செய்தவரின் எண்ணத்தைப் பொறுத்தே அது அமையும்; சத்தியம் செய்யும்படி கூறுபவன் அநீதிக்குள்ளானவனாயிருந்தால் அப்போது சத்தியம் செய்யும்படி கூறியவனின் எண்ணத்தைப் பொறுத்தே அது அமையும்.19
6952. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அநீதியாளனாக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்ட வனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநீதியாளனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவனை அநீதியிழைக்கவிடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள்.21

அத்தியாயம் : 89

6953. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَخْطُبُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ وَإِنَّمَا لاِمْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ هَاجَرَ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ "".
பாடம்: 1 தந்திரங்களைக் கைவிடல்2 ஒரு மனிதர் சத்தியம் முதலிய வற்றில் எதை எண்ணுகிறாரோ அதுதான் அவருக்குக் கிட்டும்.
6953. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே! எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப் படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.

எவர் தாம் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்திற்காக, அல்லது தாம் மணக்க விரும்பும் பெண்ணுக்காக ஹிஜ்ரத் செய்கிறாரோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றும்போது அறிவித்தார்கள்.3

அத்தியாயம் : 90
6954. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ "".
பாடம்: 2 தொழுகை விஷயத்தில் தந்திரம் செய்தல்
6954. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குச் சிறுதுடக்கு ஏற்பட் டால் நீங்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாத வரை உங்கள் தொழு கையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4

அத்தியாயம் : 90
6955. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ كَتَبَ لَهُ فَرِيضَةَ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَلاَ يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلاَ يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ "".
பாடம்: 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, ஒன்றுசேர்ந்திருப்பவற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதோ கூடாது.5
6955. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஸகாத்தைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (கடிதம்) எழுதியபோது, “ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதும் ஒன்றுசேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது” என்று குறிப்பிட்டார்கள்.6


அத்தியாயம் : 90
6956. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَائِرَ الرَّأْسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصَّلاَةِ فَقَالَ "" الصَّلَوَاتِ الْخَمْسَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ شَيْئًا "". فَقَالَ أَخْبِرْنِي بِمَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الصِّيَامِ قَالَ "" شَهْرَ رَمَضَانَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ شَيْئًا "". قَالَ أَخْبِرْنِي بِمَا فَرَضَ اللَّهُ عَلَىَّ مِنَ الزَّكَاةِ قَالَ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَرَائِعَ الإِسْلاَمِ. قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لاَ أَتَطَوَّعُ شَيْئًا وَلاَ أَنْقُصُ مِمَّا فَرَضَ اللَّهُ عَلَىَّ شَيْئًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفْلَحَ إِنْ صَدَقَ "". أَوْ "" دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ "". وَقَالَ بَعْضُ النَّاسِ فِي عِشْرِينَ وَمِائَةِ بَعِيرٍ حِقَّتَانِ. فَإِنْ أَهْلَكَهَا مُتَعَمِّدًا، أَوْ وَهَبَهَا أَوِ احْتَالَ فِيهَا فِرَارًا مِنَ الزَّكَاةِ، فَلاَ شَىْءَ عَلَيْهِ.
பாடம்: 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, ஒன்றுசேர்ந்திருப்பவற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதோ கூடாது.5
6956. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நஜ்த் பகுதியைச் சேர்ந்த) கிராம வாசி ஒருவர் தலைவிரிகோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நாளொன்றுக்கு) ஐவேளை தொழுகை கள் (உன்மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் தொழுது கொண்டால் தவிர” என்று சொன்னார்கள். அவர், “அல்லாஹ் என்மீது கடமையாக் கியுள்ள நோன்பு பற்றிக் கூறுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “ரமளான் மாதம் (முழுவதும் நீ நோன்பு நோற்பது உன்மீது கடமையாகும்); நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் நோன்பு நோற்றால் தவிர” என்று சொன்னார்கள்.

தொடர்ந்து அவர், “அல்லாஹ் என்மீது கடமையாக்கியுள்ள ஸகாத் பற்றிக் கூறுங்கள்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஸகாத் உள்பட) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர், “உங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன்மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதையும் கூடுதலாகச் செய்யமாட்டேன். அல்லாஹ் என்மீது கடமையாக்கி யுள்ளவற்றில் எதையும் நான் குறைக்கவு மாட்டேன்” என்று கூறி(விட்டுத் திரும்பிச் செல்லலா)னார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இவர் (தாம் கூறியபடி) உண்மையாக நடந்துகொண்டால் ‘வெற்றி யடைவார்’ அல்லது ‘இவர் (கூறியபடி) உண்மையாக நடந்து கொண்டால் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று கூறினார்கள்.7

அறிஞர்களில் சிலர் கூறுகிறார்கள்:

நூற்று இருபது ஒட்டகங்கள் இருந்தால் மூன்று வயதுடைய இரு ஒட்டகங் கள் ஸகாத்தாக வழங்க வேண்டும். இந்நிலையில் ஒருவர் ஸகாத் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக அந்த (120) ஒட்டகங்களையும் (ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஓரிரு நாட்கள் இருக்கையில்) வேண்டுமென்றே அறுத்துவிட்டாலோ, அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, வேறு தந்திரங்களைக் கையாண்டாலோ அவர்மீது (ஸகாத்) கடமையாகாது.8


அத்தியாயம் : 90
6957. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ، يَفِرُّ مِنْهُ صَاحِبُهُ فَيَطْلُبُهُ وَيَقُولُ أَنَا كَنْزُكَ. قَالَ وَاللَّهِ لَنْ يَزَالَ يَطْلُبُهُ حَتَّى يَبْسُطَ يَدَهُ فَيُلْقِمَهَا فَاهُ ".
பாடம்: 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, ஒன்றுசேர்ந்திருப்பவற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதோ கூடாது.5
6957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஸகாத் கொடுக்காமல் பூட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்ட) உங்கள் கருவூலம் மறுமை நாளில் கொடிய விஷமுள்ள பாம்பாக மாறும். அதைக் கண்டு அதன் உரிமையாளரான நீங்கள் வெருண்டோடுவீர்கள். ஆனால், அது உங்களைத் துரத்திக்கொண்டே வந்து “நான்தான் உனது கருவூலம்” என்று சொல்லும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருவர் தமது கையை விரித்து அதன் வாய்க்குள் நுழைக்கும்வரை அது அவரைத் துரத்திக்கொண்டே வரும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9


அத்தியாயம் : 90
6958. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَا رَبُّ النَّعَمِ لَمْ يُعْطِ حَقَّهَا، تُسَلَّطُ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ، تَخْبِطُ وَجْهَهُ بِأَخْفَافِهَا ". وَقَالَ بَعْضُ النَّاسِ فِي رَجُلٍ لَهُ إِبِلٌ، فَخَافَ أَنْ تَجِبَ عَلَيْهِ الصَّدَقَةُ، فَبَاعَهَا بِإِبِلٍ مِثْلِهَا، أَوْ بِغَنَمٍ، أَوْ بِبَقَرٍ، أَوْ بِدَرَاهِمَ، فِرَارًا مِنَ الصَّدَقَةِ بِيَوْمٍ، احْتِيَالاً فَلاَ بَأْسَ عَلَيْهِ، وَهْوَ يَقُولُ إِنْ زَكَّى إِبِلَهُ قَبْلَ أَنْ يَحُولَ الْحَوْلُ بِيَوْمٍ أَوْ بِسَنَةٍ، جَازَتْ عَنْهُ.
பாடம்: 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, ஒன்றுசேர்ந்திருப்பவற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதோ கூடாது.5
6958. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்கான கடமையை (ஸகாத்தை) நிறைவேற்றவில்லையானால் மறுமை நாளில் அவை அவர்மீது ஏவிவிடப்படும். அவை தம் கால்குளம்புகளால் அவரது முகத்தில் மிதிக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

சிலர் கூறுகிறார்கள்: ஒருவரிடம் ஒட்டகங்கள் இருந்தன. அவற்றுக்குத் தாம் ஸகாத் கொடுக்க வேண்டி வந்துவிடும் என்று அஞ்சிய அவர், (ஓராண்டு பூர்த்தியாவதற்கு) ஒருநாள் முன்பாக அந்த ஒட்டகங்களை அதே அளவு ஒட்டகங்களுக்கு, அல்லது ஆடுகளுக்கு, அல்லது மாடுகளுக்கு, அல்லது திர்ஹங்களுக்குப் பதிலாக விற்றுவிட்டார். தந்திரமாக ஸகாத்தைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு அவர் செய்தால் அவர்மீது (ஸகாத்) எதுவும் கடமையாகாது.

(ஏனெனில், பழையதை விற்றுப் புதிதாக வாங்கப்பட்ட பொருள் கைக்கு வந்து ஓராண்டு கழிந்தபின்பே அதற்கு ஸகாத் கடமையாகும்.) இவ்வாறு கூறும் இவர்கள், “ஓராண்டு பூர்த்தியாவதற்கு ஒருநாள் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பே தம் ஒட்டகங்களுக்கான ஸகாத்தை அவர் கொடுத்தால் அது செல்லும்” என்றும் கூறுகிறார்கள்”.11


அத்தியாயம் : 90
6959. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ الأَنْصَارِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْضِهِ عَنْهَا "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِذَا بَلَغَتِ الإِبِلُ عِشْرِينَ، فَفِيهَا أَرْبَعُ شِيَاهٍ، فَإِنْ وَهَبَهَا قَبْلَ الْحَوْلِ أَوْ بَاعَهَا، فِرَارًا وَاحْتِيَالاً لإِسْقَاطِ الزَّكَاةِ، فَلاَ شَىْءَ عَلَيْهِ، وَكَذَلِكَ إِنْ أَتْلَفَهَا فَمَاتَ، فَلاَ شَىْءَ فِي مَالِهِ.
பாடம்: 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி, ஒன்றுசேர்ந்திருப்பவற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்றுசேர்ப்பதோ கூடாது.5
6959. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயாரின் நேர்த்திக் கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்காக நீங்கள் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்றார்கள்.12

“(ஒருவருக்குரிய) ஒட்டகங்களின் எண்ணிக்கை இருபதாகிவிட்டால் அதற்காக நான்கு ஆடுகள் (அவர் ஸகாத்) கொடுக்க வேண்டும். ஆனால், அவர் ஸகாத்தை இல்லாமல் செய்வதற்காகத் தந்திரமாகத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் ஓராண்டு முழுமையடைவதற்கு முன்பே அந்த ஒட்டகங்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டாலோ, விற்றுவிட்டாலோ அவர்மீது (ஸகாத்) ஏதும் கடமையாகாது. அவ்வாறே அவற்றை(ச் செலவு) அழித்துவிட்டு அவர் இறந்துபோனாலும் அவரது (இந்தச்) சொத்தில் (ஸகாத்) ஏதும் கடமையாகாது” என்று சிலர் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 90
6960. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ. قُلْتُ لِنَافِعٍ مَا الشِّغَارُ قَالَ يَنْكِحُ ابْنَةَ الرَّجُلِ وَيُنْكِحُهُ ابْنَتَهُ بِغَيْرِ صَدَاقٍ، وَيَنْكِحُ أُخْتَ الرَّجُلِ وَيُنْكِحُهُ أُخْتَهُ بِغَيْرِ صَدَاقٍ. وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ احْتَالَ حَتَّى تَزَوَّجَ عَلَى الشِّغَارِ، فَهْوَ جَائِزٌ، وَالشَّرْطُ بَاطِلٌ. وَقَالَ فِي الْمُتْعَةِ النِّكَاحُ فَاسِدٌ، وَالشَّرْطُ بَاطِلٌ. وَقَالَ بَعْضُهُمُ الْمُتْعَةُ وَالشِّغَارُ جَائِزٌ، وَالشَّرْطُ بَاطِلٌ.
பாடம்: 4 திருமண விஷயத்தில் தந்திரம் செய்தல்
6960. உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார் கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது நான் நாஃபிஉ அவர்களிடம், “ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?” என்று கேட்டேன்.

அவர்கள், “ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்துகொண்டு (அதற்குப் பதிலாக) அவருக்குத் தம் சகோதரியை மணமுடித்துவைப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.13

சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் தந்திரம் செய்து ‘ஷிஃகார்’ முறைப்படித் திருமணம் செய்துகொண்டால் அத்திருமணம் செல்லும்; ஆனால், (அதில் விதிக்கப்பட்ட) முன்நிபந்தனை செல்லாது. அதே நேரத்தில், தவணைமுறைத் திருமணம் (அல்முத்ஆ) செல்லாது; (அதில் விதிக்கப்படும்) முன்நிபந்தனையும் செல்லாது.

வேறுசிலரோ, “தவணைமுறைத் திருமணமும் ‘ஷிஃகார்’ முறைத் திருமணமும் செல்லும்; ஆனால், (அவற்றில் விதிக்கப்படும்) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறுகின்றனர்.


அத்தியாயம் : 90
6961. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنِ الْحَسَنِ، وَعَبْدِ اللَّهِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ قِيلَ لَهُ إِنَّ ابْنَ عَبَّاسٍ لاَ يَرَى بِمُتْعَةِ النِّسَاءِ بَأْسًا. فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا يَوْمَ خَيْبَرَ، وَعَنْ لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ. وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ احْتَالَ حَتَّى تَمَتَّعَ، فَالنِّكَاحُ فَاسِدٌ. وَقَالَ بَعْضُهُمُ النِّكَاحُ جَائِزٌ وَالشَّرْطُ بَاطِلٌ.
பாடம்: 4 திருமண விஷயத்தில் தந்திரம் செய்தல்
6961. முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தவணைமுறைத் திருமணம் (நிகா ஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது தவணைமுறைத் திருமணத்திற்கும் நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கும் தடை விதித் தார்கள்” என்று கூறினார்கள்.14

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

“ஒரு மனிதர் தந்திரமாகத் தவணை முறைத் திருமணம் செய்தால் அத்திரு மணம் செல்லாது” என்று சிலர் கூறினர்.

வேறுசிலரோ, “அந்தத் திருமணம் செல்லும்; ஆனால் (அதில் விதிக்கப் பட்ட) முன்நிபந்தனை செல்லாது” என்று கூறினர்.

அத்தியாயம் : 90
6962. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ فَضْلُ الْكَلإِ "".
பாடம்: 5 வியாபாரங்களில் தந்திரம் செய்வது விரும்பத் தகாததாகும். மேலும் (தேவைக்கதிகமாக) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. அவ்வாறு தடுத்தால் (அதைச் சுற்றி முளைத்துள்ள) புற்பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளை)த் தடுத்ததாகிவிடும்.
6962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தேவைக்குமேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புற் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடை களை)த் தடுத்ததாகிவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

அத்தியாயம் : 90
6963. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ النَّجْشِ.
பாடம்: 6 (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்திவிடுவது அருவருக்கத் தக்கதாகும்.
6963. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின்போது) விலையை அதிகமாகக் கேட்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.16

அத்தியாயம் : 90
6964. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "".
பாடம்: 7 வியாபாரங்களில் மோசடி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள், மனிதனை ஏமாற்றுவதைப் போன்றே இறைவனையும் ஏமாற்ற விழைகின்றனர். அவர்கள் (ஒளிவு மறைவில்லாமல்) பகிரங்கமாக (உரிய விலையைவிட அதிகத் தொகை கேட்டு) விஷயத்திற்கு வருவார்களானால், அது எனக்கு எளிதானதாக அமையும். (அதை விடுத்து எதற்காக அவர்கள் மோசடி செய்ய வேண்டும்?)
6964. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரங்களில் ஏமாற்றப்படு வதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ வியாபாரத்தின்போது ‘ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவிடு” என்று சொன்னார்கள்.17

அத்தியாயம் : 90
6965. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ كَانَ عُرْوَةُ يُحَدِّثُ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ {وَإِنْ خِفْتُمْ أَنْ لاَ تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ}. قَالَتْ هِيَ الْيَتِيمَةُ فِي حَجْرِ وَلِيِّهَا، فَيَرْغَبُ فِي مَالِهَا وَجَمَالِهَا، فَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَهَا بِأَدْنَى مِنْ سُنَّةِ نِسَائِهَا، فَنُهُوا عَنْ نِكَاحِهِنَّ، إِلاَّ أَنْ يُقْسِطُوا لَهُنَّ فِي إِكْمَالِ الصَّدَاقِ، ثُمَّ اسْتَفْتَى النَّاسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ فَأَنْزَلَ اللَّهُ {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 8 தாம் (மணந்துகொள்ள) ஆசைப் பட்ட அநாதைப் பெண் விஷயத்தில் (அவளுடைய) காப்பாளர் தந்திரங்கள் மேற்கொள்வதும் அவளுக்குரிய மணக்கொடையை முழுமையாக வழங்காமல் இருப்பதும் தடை செய்யப்பட் டுள்ளது.
6965. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண் களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நீதியோடு நடந்துகொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான (வேறு) பெண்களை மணந்துகொள்ளுங்கள்” என்று தொடங்கும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அநாதைப் பெண் ஒருத்தி தன் காப்பாளரின் பாதுகாப்பில் இருந்துவருவாள். அவர் அப்பெண்ணின் செல்வத்தை யும் அழகையும் கண்டு ஆசைப்பட்டு அவளைப் போன்ற பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் மணக்கொடையை விட மிகக் குறைந்த அளவு மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புவார். அப்போதுதான், முழுமையான மணக் கொடை (மஹ்ர்) கொடுத்து அப்பெண் களுக்கு நீங்கள் நீதி செலுத்தாத வரை அவர்களை நீங்கள் மணமுடிக்கக் கூடாது என அவர்களுக்குத் தடை விதிக்கப் பட்டது. அதன் பின்னரும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தீர்ப்புக் கேட்டனர்.

அப்போதுதான் “(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி தீர்ப்பு வழங்கும்படி கேட்கிறார்கள்” என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

தொடர்ந்து அறிவிப்பாளர் இந்த ஹதீஸின் முழுத் தொடரையும் கூறினார்.18

அத்தியாயம் : 90
6966. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ "".
பாடம்: 9 (தந்திரம் செய்து) அடிமைப் பெண்ணை அபகரித்தல் ஒருவர் (அடுத்தவருக்குச் சொந்தமான) ஓர் அடிமைப் பெண்ணை அபகரித்துக்கொண்டார். பின்னர் அவள் இறந்துவிட்டதாக அவர் கருதியதால், இறந்துபோன அடிமைப் பெண்ணுக்கான விலையை (அடிமையின் உரிமையாளரிடம்) வழங்கிட வேண்டுமெனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவளை அவளுடைய உரிமையாளர் (உயிருடன்) கண்டார் எனில், அவள் உரிமையாளருக்கே உரியவள் ஆவாள். அவர் (தாம் பெற்ற) அந்த விலைத் தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுவார். அத்தொகை (அடிமைப் பெண்ணுக்குரிய) கிரயம் என்று (கருதி அவள் விற்கப்பட்டுவிட்டதாக) எடுத்துக்கொள்ளலாகாது. ஆனால், சிலர், “அந்த அடிமைப் பெண் அபகரித்தவருக்கே உரியவள்; ஏனெனில், உரிமையாளர் (அபகரித்த வரிடமிருந்து உரிய) தொகையைப் பெற்றுக்கொண்டுவிட்டார்” என்று கூறு கிறார்கள். ஆனால், இது ஒரு விதத் தந்திர மாகும். அடுத்தவருக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணை ஒருவர் விரும்பலாம்; உரிமையாளர் அவளை விற்பதற்கு முன்வராதபோது, அவளை அபகரித்துக்கொண்டுவிட்டு, அவள் இறந்துபோனாள் என்று காரணம் காட்டி, அவளுக்குரிய கிரயத்தை உரிமையாளர் ஏற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கலாம். இதன் மூலம் அபகரித்தவனுக்கே தாராளமாக அடுத்தவரின் அடிமைப் பெண் கிடைக்கும் நிலை உருவாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் உடைமைகள் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்.19 மோசடி செய்கின்ற ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும்.20
6966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

அத்தியாயம் : 90
6967. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّكُمْ تَخْتَصِمُونَ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، وَأَقْضِيَ لَهُ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلاَ يَأْخُذْ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ "".
பாடம்: 10
6967. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்குச் சாதுரியம்மிக்கவராக இருக்கக்கூடும். மேலும், நான் (அந்தச் சாதுரியமான வரிடமிருந்து) செவியுறுவதற்கேற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, (எவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் சிறிதளவை (அவருக்குரியது) என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்துவிடுகின்றேனோ அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் பெயர்த்துக் கொடுக்கிறேன்.

இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

அத்தியாயம் : 90
6968. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَلاَ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ "". فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ إِذْنُهَا قَالَ "" إِذَا سَكَتَتْ "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِنْ لَمْ تُسْتَأْذَنِ الْبِكْرُ وَلَمْ تَزَوَّجْ. فَاحْتَالَ رَجُلٌ فَأَقَامَ شَاهِدَىْ زُورٍ أَنَّهُ تَزَوَّجَهَا بِرِضَاهَا، فَأَثْبَتَ الْقَاضِي نِكَاحَهَا، وَالزَّوْجُ يَعْلَمُ أَنَّ الشَّهَادَةَ بَاطِلَةٌ، فَلاَ بَأْسَ أَنْ يَطَأَهَا، وَهْوَ تَزْوِيجٌ صَحِيحٌ.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6968. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவள் மௌனம் சாதிப்பதே (அவள் சம்மதிக்கிறாள் என்பதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள்.23

ஆனால், சிலர் கூறுகின்றனர்: ஒரு கன்னிப்பெண்ணிடம் அனுமதியும் கோராமல், (முறைப்படி) அவள் திருமணமும் செய்துகொள்ளப்படாமல் இருக்கும்போது, ஒருவர் தந்திரமாக இரண்டு பொய் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தி அவளை அவளது இசைவுடன் தாம் மணந்துகொண்டதாக வாதிட்டார். நீதிபதியும் (அதை உண்மை என்று நம்பி) அவளது திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சாட்சியம் பொய் என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இந்நிலையில் அவளுடன் அவன் தாம்பத்திய உறவு கொள்வதில் தவறில்லை. இது செல்லத் தகுந்த திருமணமே (என்று அந்தச் சிலர் கூறுகின்றனர்).


அத்தியாயம் : 90
6969. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ، أَنَّ امْرَأَةً، مِنْ وَلَدِ جَعْفَرٍ تَخَوَّفَتْ أَنْ يُزَوِّجَهَا وَلِيُّهَا وَهْىَ كَارِهَةٌ فَأَرْسَلَتْ إِلَى شَيْخَيْنِ مِنَ الأَنْصَارِ عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَىْ جَارِيَةَ قَالاَ فَلاَ تَخْشَيْنَ، فَإِنَّ خَنْسَاءَ بِنْتَ خِذَامٍ أَنْكَحَهَا أَبُوهَا وَهْىَ كَارِهَةٌ، فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَلِكَ. قَالَ سُفْيَانُ وَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ فَسَمِعْتُهُ يَقُولُ عَنْ أَبِيهِ إِنَّ خَنْسَاءَ.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6969. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜஅஃபர் அவர்களுடைய மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார். ஆகவே, அப்பெண்மணி ஜாரியா என்பவரின் (புதல்வர் யஸீதுடைய) புதல்வர்களான அப்துர் ரஹ்மான் (ரஹ்), முஜம்மிஉ (ரஹ்) ஆகிய இரு அன்சாரிப் பெரியவர்களிடம் ஆளனுப்பிவைத்தார்.

அவர்கள் இருவரும், “(பெண்களே!) அஞ்சாதீர்கள். ஏனெனில், கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்துவைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அத்திரு மணத்தை ரத்துச் செய்தார்கள்” என்று கூறியனுப்பினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர்-ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்ததை நான் செவியுற்றேன்.24


அத்தியாயம் : 90
6970. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ "". قَالُوا كَيْفَ إِذْنُهَا قَالَ "" أَنْ تَسْكُتَ "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِنِ احْتَالَ إِنْسَانٌ بِشَاهِدَىْ زُورٍ عَلَى تَزْوِيجِ امْرَأَةٍ ثَيِّبٍ بِأَمْرِهَا، فَأَثْبَتَ الْقَاضِي نِكَاحَهَا إِيَّاهُ، وَالزَّوْجُ يَعْلَمُ أَنَّهُ لَمْ يَتَزَوَّجْهَا قَطُّ، فَإِنَّهُ يَسَعُهُ هَذَا النِّكَاحُ، وَلاَ بَأْسَ بِالْمُقَامِ لَهُ مَعَهَا.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6970. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப்பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது” என்று கூறினார்கள்.

மக்கள், “எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனமாயிருப்பதே (அதற்கு அடையாளமாகும்)” என்று சொன்னார்கள்.

ஆனால், சிலர் கூறுகின்றனர்: இரு பொய் சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதர், கன்னிகழிந்த பெண்ணின் உத்தரவுப்படி அவளைத் தாம் மண முடித்துக்கொண்டதாகக் கூறி தந்திரம் செய்தார். (இவ்வழக்கை விசாரித்த நீதிபதியும்) அவளை அவர் மணமுடித்துக்கொண்டதாக உறுதி செய்தார். ஆனால், அவளைத் தாம் ஒருபோதும் மணமுடிக்கவில்லை என்பது அந்தக் கணவனுக்கு (நன்கு) தெரியும். இப்போது இத்திருமணம் அவனுக்குச் செல்லும். அவளுடன் அவன் தங்கியிருப்பதில் குற்றமில்லை.


அத்தியாயம் : 90
6971. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْبِكْرُ تُسْتَأْذَنُ "". قُلْتُ إِنَّ الْبِكْرَ تَسْتَحْيِي قَالَ "" إِذْنُهَا صُمَاتُهَا "". وَقَالَ بَعْضُ النَّاسِ إِنْ هَوِيَ رَجُلٌ جَارِيَةً يَتِيمَةً أَوْ بِكْرًا، فَأَبَتْ فَاحْتَالَ فَجَاءَ بِشَاهِدَىْ زُورٍ عَلَى أَنَّهُ تَزَوَّجَهَا، فَأَدْرَكَتْ فَرَضِيَتِ الْيَتِيمَةُ، فَقَبِلَ الْقَاضِي شَهَادَةَ الزُّورِ، وَالزَّوْجُ يَعْلَمُ بِبُطْلاَنِ ذَلِكَ، حَلَّ لَهُ الْوَطْءُ.
பாடம்: 11 திருமணத்தில் பொய் சாட்சியம் கூறுவது
6971. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோர வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், “கன்னிப்பெண் (வெளிப்படையாகத் தன் இசைவைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே அவளுடைய அனுமதி” என்று சொன்னார்கள்.25

சிலர் கூறுகின்றனர்: ஒருவர் ஓர் அநாதைச் சிறுமியை, அல்லது கன்னிப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். இந்நிலையில், அவர் தந்திரமாக இரு பொய் சாட்சிகளை அழைத்து வந்து, தாம் அவளை மணமுடித்துக் கொண்டதாகத் தெரிவித்தார். பின்னர் அந்த அநாதைச் சிறுமி பருவம் எய்தினாள்; (அந்தத் திருமணத்தை) ஏற்றும்கொண்டாள். நீதிபதியோ பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அது பொய் என்று அந்தக் கணவனுக்கு (நன்றாகவே) தெரியும். இந்நிலையில் (அவளுடன்) தாம்பத்திய உறவு கொள்ள அவனுக்கு அனுமதி உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர்.

அத்தியாயம் : 90