5175. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَشْعَثِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ، قَالَ الْبَرَاءُ بْنُ عَازِبٍ ـ رضى الله عنهما ـ أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ، أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ، وَاتِّبَاعِ الْجِنَازَةِ، وَتَشْمِيتِ الْعَاطِسِ، وَإِبْرَارِ الْقَسَمِ، وَنَصْرِ الْمَظْلُومِ، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ، وَعَنْ آنِيَةِ الْفِضَّةِ، وَعَنِ الْمَيَاثِرِ، وَالْقَسِّيَّةِ، وَالإِسْتَبْرَقِ وَالدِّيبَاجِ. تَابَعَهُ أَبُو عَوَانَةَ وَالشَّيْبَانِيُّ عَنْ أَشْعَثَ فِي إِفْشَاءِ السَّلاَمِ.
பாடம்: 72 வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாட்கள் அல்லது அது போன்ற சில நாட்கள் வலீமா விருந்தளிப்பது; நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாட்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.
5175. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள்.

நோயாளியிடம் நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லுமாறும், தும்மியவ(ர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் விற்கே) என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக எனப்) பதில் சொல்லுமாறும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவு மாறும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்புமாறும், விருந்து அழைப்பை ஏற்குமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மேலும் (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்றும் ‘மீஸரா’ எனும் பட்டுமெத்தை, பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு, (கலப்படமில்லாத) சுத்தப்பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.112


அத்தியாயம் : 67
5176. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُرْسِهِ، وَكَانَتِ امْرَأَتُهُ يَوْمَئِذٍ خَادِمَهُمْ وَهْىَ الْعَرُوسُ، قَالَ سَهْلٌ تَدْرُونَ مَا سَقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ.
பாடம்: 72 வலீமா உள்ளிட்ட விருந்து அழைப்புகளை ஏற்பது கடமை; ஏழு நாட்கள் அல்லது அது போன்ற சில நாட்கள் வலீமா விருந்தளிப்பது; நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கென) ஒன்றிரண்டு நாட்கள் என்று காலம் குறிப்பிட்டதில்லை.
5176. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்டார்கள்.) மணப் பெண்ணா யிருந்த அபூஉசைதுடைய துணைவியார் (உம்மு உசைத் சலாமா பின்த் வஹ்ப்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மணப்பெண் (உம்மு உசைத்) பருகுவதற்கு என்ன தந்தார் தெரியுமா?

அவர் நபி (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைத் தண்ணீரில் ஊறப்போட்டு வைத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் (வலீமா-மணவிருந்தை) சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச் சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

அத்தியாயம் : 67
5177. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ، وَيُتْرَكُ الْفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم.
பாடம்: 73 விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவர் ஆவார்.
5177. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவர் ஆவார்.113

அத்தியாயம் : 67
5178. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ دُعِيتُ إِلَى كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ لَقَبِلْتُ "".
பாடம்: 74 ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதியை (மணவிருந்தாக வழங்கப்பட்டாலும் அதை) ஒருவர் (மனதார)ஏற்றுக் கொள்வது
5178. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதி(யை விருந்தாக்கி, அந்த விருந்து)க்கு நான் அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் (அந்த அழைப்பை) ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக் காலின் கீழ்ப் பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக்கொள்வேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114

அத்தியாயம் : 67
5179. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَجِيبُوا هَذِهِ الدَّعْوَةَ إِذَا دُعِيتُمْ لَهَا "". قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يَأْتِي الدَّعْوَةَ فِي الْعُرْسِ وَغَيْرِ الْعُرْسِ وَهْوَ صَائِمٌ.
பாடம்: 75 மணவிருந்து முதலியவற்றுக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்வது
5179. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த (மண)விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (‘நஃபில்’ எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்து உள்ளிட்ட அழைப்புகளை ஏற்றுச் சென்று வந்தார்கள்.

அத்தியாயம் : 67
5180. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبْصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءً وَصِبْيَانًا مُقْبِلِينَ مِنْ عُرْسٍ، فَقَامَ مُمْتَنًّا فَقَالَ "" اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ "".
பாடம்: 76 மணவிருந்திற்குப் பெண்களும் சிறுவர்களும் செல்வது
5180. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திருமண விருந்தொன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரி) பெண்களையும் சிறுவர்களையும் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே (அவர்களை நோக்கி) மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று, ‘‘இறைவா! (நீயே சாட்சி’ என்று கூறிவிட்டு, அவர்களைப் பார்த்து,) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள்.115

அத்தியாயம் : 67
5181. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا بَالُ هَذِهِ النِّمْرِقَةِ "". قَالَتْ فَقُلْتُ اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ "". وَقَالَ "" إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ "".
பாடம்: 77 விருந்து நடக்கும் இடத்தில் வெறுக்கத் தக்கச் செயல் ஏதேனும் நடைபெறக் கண்டால், திரும்பி வந்துவிட வேண்டுமா? (மணவிருந்து நடைபெற்ற) வீட்டில் உருவப்படமிருப்பதைக் கண்ட இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம்மு டைய புதல்வர் சாலிமின் மணவிருந்திற்கு) அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களை அழைத்திருந்தார்கள். (இப்னு உமர் (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களது இல்லத்திற்கு வந்த) அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அந்த இல்லத்தின் சுவரில் (ஆடம்பரமான) திரை (தொங்கவிடப்பட்டு) இருப்பதைக் கண்டார்கள். (அதைக் கண்ணுற்ற இல்லத்தின் உரிமையாளர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் உடனே, ‘‘(சுவரில் திரையைத் தொங்கவிடும்) இந்த விஷயத்தில் எங்களைப் பெண்கள் மிகைத்துவிட்டனர். (ஆதலால்தான் இந்தத் திரையை இங்கு காண்கிறீர்கள்)” என்று சொன்னார்கள். அதற்கு அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், (இது போன்ற வெறுக்கத் தக்கச் செயலைச் செய்துவிடுவார்களோ என) யார் விஷயத்தில் நான் அஞ்சினேனோ (இல்லையோ,) உங்கள் விஷயத்தில் எனக்கு அந்த அச்சம் ஏற்பட்டதில்லை. (ஆனால், நீங்களே இப்படிச் செய்துவிட்டீர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் உணவை உண்ணமாட்டேன்” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றுவிட்டார்கள்.116
5181. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களது முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறியி)னை நான் அறிந்துகொண்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ் விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது என்ன திண்டு?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘தாங்கள் இதில் அமர்ந்து கொள்வதற் காகவும், தலை சாய்த்துக்கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்” என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்’ என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்” என்று சொல்லிவிட்டு, ‘‘உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணை யைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை” என்று சொன்னார் கள்.117

அத்தியாயம் : 67
5182. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ.
பாடம்: 78 மணவிருந்தின்போது ஆண்களுக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பைப் பெண்கள் தாமே ஏற்பது
5182. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூஉசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந் தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்த வுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங் கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக பருகத் தந்தார்கள்.

அத்தியாயம் : 67
5183. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، أَنَّ أَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ، دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم لِعُرْسِهِ، فَكَانَتِ امْرَأَتُهُ خَادِمَهُمْ يَوْمَئِذٍ وَهْىَ الْعَرُوسُ، فَقَالَتْ أَوْ قَالَ أَتَدْرُونَ مَا أَنْقَعَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ.
பாடம்: 79 போதையளிக்காத பேரீச்சம் பழச்சாறு போன்ற பானங்களை மணவிருந்திற்காகத் தயாரித்தல்
5183. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். (அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்டார்கள்.) மணப்பெண்ணாயிருந்த அபூஉசைதுடைய துணைவியார் (உம்மு உசைத்) அவர்களே அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடை செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்(குப் பருகக் கொடுப்பதற்)காக மணப்பெண் (உம்மு உசைத்) என்ன ஊறவைத்தார் தெரியுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே (தண்ணீரில்) பேரீச்சம் பழங்களை (முந்தைய) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் ஊறப்போட்டு வைத்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மணவிருந்தைச் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச் சாற்றை அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்).118

அத்தியாயம் : 67
5184. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمَرْأَةُ كَالضِّلَعِ، إِنْ أَقَمْتَهَا كَسَرْتَهَا، وَإِنِ اسْتَمْتَعْتَ بِهَا اسْتَمْتَعْتَ بِهَا وَفِيهَا عِوَجٌ "".
பாடம் : 80 பெண்களுடன் நளினமாக நடந்துகொள்வது ‘பெண்கள் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் (உவமித்துக்) கூறினார்கள்.
5184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.119

அத்தியாயம் : 67
5185. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِي جَارَهُ "".
பாடம் : 81 பெண்களுக்கு நலம் நாடுதல்
5185. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 67
5186. وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا
பாடம் : 81 பெண்களுக்கு நலம் நாடுதல்
5186. பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும்.

ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.120


அத்தியாயம் : 67
5187. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا نَتَّقِي الْكَلاَمَ وَالاِنْبِسَاطَ إِلَى نِسَائِنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَيْبَةَ أَنْ يُنْزَلَ فِينَا شَىْءٌ فَلَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَكَلَّمْنَا وَانْبَسَطْنَا.
பாடம் : 81 பெண்களுக்கு நலம் நாடுதல்
5187. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்கள் பெண்களுடன் (அதிகமாகப்) பேசுவதையும் இயல்பாகப் பழகுவதையும் தவிர்த்துவந்தோம். (அவ்வாறு பழகி, தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால்) எங்கள் தொடர்பாக (குர்ஆன் வசனம்) ஏதேனும் இறங்கி (தடை விதிக்கப்பட்டு)விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம். நபி (ஸல்) அவர்கள் இறந்தபிறகு (பெண்களுடன் தாராளமாகப்) பேசினோம்; இயல்பாகப் பழகினோம்.

அத்தியாயம் : 67
5188. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ، فَالإِمَامُ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِهِ وَهْوَ مَسْئُولٌ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ زَوْجِهَا وَهْىَ مَسْئُولَةٌ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ "".
பாடம்: 82 உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். (66:6)
5188. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி, மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.

அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.121

அத்தியாயம் : 67
5189. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَلَسَ إِحْدَى عَشْرَةَ امْرَأَةً، فَتَعَاهَدْنَ وَتَعَاقَدْنَ أَنْ لاَ يَكْتُمْنَ مِنْ أَخْبَارِ أَزْوَاجِهِنَّ شَيْئًا. قَالَتِ الأُولَى زَوْجِي لَحْمُ جَمَلٍ، غَثٌّ عَلَى رَأْسِ جَبَلٍ، لاَ سَهْلٍ فَيُرْتَقَى، وَلاَ سَمِينٍ فَيُنْتَقَلُ. قَالَتِ الثَّانِيَةُ زَوْجِي لاَ أَبُثُّ خَبَرَهُ، إِنِّي أَخَافُ أَنْ لاَ أَذَرَهُ، إِنْ أَذْكُرْهُ أَذْكُرْ عُجَرَهُ وَبُجَرَهُ. قَالَتِ الثَّالِثَةُ زَوْجِي الْعَشَنَّقُ، إِنْ أَنْطِقْ أُطَلَّقْ وَإِنْ أَسْكُتْ أُعَلَّقْ. قَالَتِ الرَّابِعَةُ زَوْجِي كَلَيْلِ تِهَامَةَ، لاَ حَرٌّ، وَلاَ قُرٌّ، وَلاَ مَخَافَةَ، وَلاَ سَآمَةَ. قَالَتِ الْخَامِسَةُ زَوْجِي إِنْ دَخَلَ فَهِدَ، وَإِنْ خَرَجَ أَسِدَ، وَلاَ يَسْأَلُ عَمَّا عَهِدَ. قَالَتِ السَّادِسَةُ زَوْجِي إِنْ أَكَلَ لَفَّ، وَإِنْ شَرِبَ اشْتَفَّ، وَإِنِ اضْطَجَعَ الْتَفَّ، وَلاَ يُولِجُ الْكَفَّ لِيَعْلَمَ الْبَثَّ، قَالَتِ السَّابِعَةُ زَوْجِي غَيَايَاءُ أَوْ عَيَايَاءُ طَبَاقَاءُ، كُلُّ دَاءٍ لَهُ دَاءٌ، شَجَّكِ أَوْ فَلَّكِ أَوْ جَمَعَ كُلاًّ لَكِ. قَالَتِ الثَّامِنَةُ زَوْجِي الْمَسُّ مَسُّ أَرْنَبٍ، وَالرِّيحُ رِيحُ زَرْنَبٍ. قَالَتِ التَّاسِعَةُ زَوْجِي رَفِيعُ الْعِمَادِ، طَوِيلُ النِّجَادِ، عَظِيمُ الرَّمَادِ، قَرِيبُ الْبَيْتِ مِنَ النَّادِ. قَالَتِ الْعَاشِرَةُ زَوْجِي مَالِكٌ وَمَا مَالِكٌ، مَالِكٌ خَيْرٌ مِنْ ذَلِكِ، لَهُ إِبِلٌ كَثِيرَاتُ الْمَبَارِكِ قَلِيلاَتُ الْمَسَارِحِ، وَإِذَا سَمِعْنَ صَوْتَ الْمِزْهَرِ أَيْقَنَّ أَنَّهُنَّ هَوَالِكُ. قَالَتِ الْحَادِيَةَ عَشْرَةَ زَوْجِي أَبُو زَرْعٍ فَمَا أَبُو زَرْعٍ أَنَاسَ مِنْ حُلِيٍّ أُذُنَىَّ، وَمَلأَ مِنْ شَحْمٍ عَضُدَىَّ، وَبَجَّحَنِي فَبَجِحَتْ إِلَىَّ نَفْسِي، وَجَدَنِي فِي أَهْلِ غُنَيْمَةٍ بِشِقٍّ، فَجَعَلَنِي فِي أَهْلِ صَهِيلٍ وَأَطِيطٍ وَدَائِسٍ وَمُنَقٍّ، فَعِنْدَهُ أَقُولُ فَلاَ أُقَبَّحُ وَأَرْقُدُ فَأَتَصَبَّحُ، وَأَشْرَبُ فَأَتَقَنَّحُ، أُمُّ أَبِي زَرْعٍ فَمَا أُمُّ أَبِي زَرْعٍ عُكُومُهَا رَدَاحٌ، وَبَيْتُهَا فَسَاحٌ، ابْنُ أَبِي زَرْعٍ، فَمَا ابْنُ أَبِي زَرْعٍ مَضْجِعُهُ كَمَسَلِّ شَطْبَةٍ، وَيُشْبِعُهُ ذِرَاعُ الْجَفْرَةِ، بِنْتُ أَبِي زَرْعٍ فَمَا بِنْتُ أَبِي زَرْعٍ طَوْعُ أَبِيهَا، وَطَوْعُ أُمِّهَا، وَمِلْءُ كِسَائِهَا، وَغَيْظُ جَارَتِهَا، جَارِيَةُ أَبِي زَرْعٍ، فَمَا جَارِيَةُ أَبِي زَرْعٍ لاَ تَبُثُّ حَدِيثَنَا تَبْثِيثًا، وَلاَ تُنَقِّثُ مِيرَتَنَا تَنْقِيثًا، وَلاَ تَمْلأُ بَيْتَنَا تَعْشِيشًا، قَالَتْ خَرَجَ أَبُو زَرْعٍ وَالأَوْطَابُ تُمْخَضُ، فَلَقِيَ امْرَأَةً مَعَهَا وَلَدَانِ لَهَا كَالْفَهْدَيْنِ يَلْعَبَانِ مِنْ تَحْتِ خَصْرِهَا بِرُمَّانَتَيْنِ، فَطَلَّقَنِي وَنَكَحَهَا، فَنَكَحْتُ بَعْدَهُ رَجُلاً سَرِيًّا، رَكِبَ شَرِيًّا وَأَخَذَ خَطِّيًّا وَأَرَاحَ عَلَىَّ نَعَمًا ثَرِيًّا، وَأَعْطَانِي مِنْ كُلِّ رَائِحَةٍ زَوْجًا وَقَالَ كُلِي أُمَّ زَرْعٍ، وَمِيرِي أَهْلَكِ. قَالَتْ فَلَوْ جَمَعْتُ كُلَّ شَىْءٍ أَعْطَانِيهِ مَا بَلَغَ أَصْغَرَ آنِيَةِ أَبِي زَرْعٍ. قَالَتْ عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُنْتُ لَكِ كَأَبِي زَرْعٍ لأُمِّ زَرْعٍ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ سَعِيدُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامٍ وَلاَ تُعَشِّشُ بَيْتَنَا تَعْشِيشًا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ بَعْضُهُمْ فَأَتَقَمَّحُ. بِالْمِيمِ، وَهَذَا أَصَحُّ.
பாடம்: 83 மனைவியுடனான நல்லுறவு
5189. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.

முதலாவது பெண் கூறினார்:

என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அந்த மலைப் பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியு மில்லை.122

இரண்டாவது பெண் கூறினார்:

நான் என கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப்போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்றுகூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங்குறைகளைத்தான் கூறவேண்டியதிருக்கும்.

மூன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்துச் செய்யப்பட்டுவிடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.)

நான்காவது பெண் கூறினார்:

என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்:

என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தைபோல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார்.123

ஆறாவது பெண் கூறினார்:

என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டுவிடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.124

ஏழாவது பெண் கூறினார்:

என் கணவர் ‘விவரமில்லாதவர்’ அல்லது ‘ஆண்மையில்லாதவர்’; சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார்.

எட்டாவது பெண் கூறினார்:

என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்துபோல் மணக்கக்கூடியவர்.

ஒன்பதாவது பெண் கூறினார்:

என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப்போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைத்துவைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக்கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக்கொண்டவர்.

பத்தாவது பெண் கூறினார்:

என் கணவர் செல்வர். எத்துணை பெரும் செல்வர் தெரியுமா? எல்லா செல்வர்களையும்விட மேலான செல்வர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாட்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்துகொள்ளும்.

பதினொன்றாவது பெண் கூறினார்:

என் கணவர் (பெயர்) அபூஸர்உ. அபூஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது ‘ஷிக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்து கொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல்வரை தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெரு மிதப்படும் அளவுக்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.

(என் கணவரின் தாயார்) உம்மு அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுக் களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும்.

(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று சிறியதாக) இருக்கும். (அந்த அளவுக்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை (இறைச்சி) அவரது பசியைத் தணித்துவிடும். (அந்த அளவுக்குக் குறைவாக உண்ணுபவர்.)

(என் கணவரின் புதல்வி) பின்த் அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.

(என் கணவர்) அபூஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)

(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரு குழந்தைகள் இருந் தனர். அந்தக் குழந்தைகள் அவளது இடைக்குக் கீழே இரு மாதுளங் கனிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகவே, (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை மணவிலக்குக் செய்துவிட்டு, அவளை மணமுடித்துக் கொண்டார்.

அவருக்குப்பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்துக்கொண்டார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, ‘‘உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன் (தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார்.

(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக்கூட அவை நிரப்ப முடியாது (என்று கூறி முடித்தார்).

ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்:

(என்னருமைக் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்உவிற்கு அபூஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்” என்றார்கள்.125

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சிலவற்றில் (‘பெருமிதப்படுதல்’) என்பதைக் குறிக்க ‘அத்தகன்னஹு’ என்பதற்குப் பதிலாக ‘அத்தகம்மஹ” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதுவே சரியான தாகும்.


அத்தியாயம் : 67
5190. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ الْحَبَشُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ، فَسَتَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَنْظُرُ، فَمَا زِلْتُ أَنْظُرُ حَتَّى كُنْتُ أَنَا أَنْصَرِفُ فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ تَسْمَعُ اللَّهْوَ.
பாடம்: 83 மனைவியுடனான நல்லுறவு
5190. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபிசீனியர்கள் தம் ஈட்டிகளால் (வீர விளையாட்டு) விளையாடிக்கொண்டி ருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி (வீட்டு வாசலில் நின்றுகொண்டு) இருக்க, நான் (அவர்களின் விளையாட்டைப்) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக (ரசித்து முடித்து, சலிப்புற்று) திரும்பிச் செல்லும்வரை நான் (அதைப்) பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

வயது குறைந்த இளம் பெண் எவ்வளவு நேரம் கேளிக்கை (விளையாட்டு)களைக் கேட்டுக்கொண்டு(ம் பார்த்துக் கொண்டும்) இருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.126

அத்தியாயம் : 67
5191. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَزَلْ حَرِيصًا أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا} حَتَّى حَجَّ وَحَجَجْتُ مَعَهُ، وَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ بِإِدَاوَةٍ، فَتَبَرَّزَ، ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنْهَا فَتَوَضَّأَ فَقُلْتُ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَانِ قَالَ اللَّهُ تَعَالَى {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا} قَالَ وَاعَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ، هُمَا عَائِشَةُ وَحَفْصَةُ. ثُمَّ اسْتَقْبَلَ عُمَرُ الْحَدِيثَ يَسُوقُهُ قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهُمْ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِمَا حَدَثَ مِنْ خَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الْوَحْىِ أَوْ غَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى الأَنْصَارِ إِذَا قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَطَفِقَ نِسَاؤُنَا يَأْخُذْنَ مِنْ أَدَبِ نِسَاءِ الأَنْصَارِ، فَصَخِبْتُ عَلَى امْرَأَتِي فَرَاجَعَتْنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي قَالَتْ وَلِمَ تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ، وَإِنَّ إِحْدَاهُنَّ لَتَهْجُرُهُ الْيَوْمَ حَتَّى اللَّيْلِ. فَأَفْزَعَنِي ذَلِكَ وَقُلْتُ لَهَا وَقَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُنَّ. ثُمَّ جَمَعْتُ عَلَىَّ ثِيَابِي فَنَزَلْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لَهَا أَىْ حَفْصَةُ أَتُغَاضِبُ إِحْدَاكُنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم الْيَوْمَ حَتَّى اللَّيْلِ قَالَتْ نَعَمْ. فَقُلْتُ قَدْ خِبْتِ وَخَسِرْتِ، أَفَتَأْمَنِينَ أَنْ يَغْضَبَ اللَّهُ لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَتَهْلِكِي لاَ تَسْتَكْثِرِي النَّبِيَّ صلى الله عليه وسلم وَلاَ تُرَاجِعِيهِ فِي شَىْءٍ، وَلاَ تَهْجُرِيهِ، وَسَلِينِي مَا بَدَا لَكِ، وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ أَوْضَأَ مِنْكِ، وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يُرِيدُ عَائِشَةَ ـ قَالَ عُمَرُ وَكُنَّا قَدْ تَحَدَّثْنَا أَنَّ غَسَّانَ تُنْعِلُ الْخَيْلَ لِغَزْوِنَا، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَرَجَعَ إِلَيْنَا عِشَاءً فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا وَقَالَ أَثَمَّ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ، فَقَالَ قَدْ حَدَثَ الْيَوْمَ أَمْرٌ عَظِيمٌ. قُلْتُ مَا هُوَ، أَجَاءَ غَسَّانُ قَالَ لاَ بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَهْوَلُ، طَلَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ. فَقُلْتُ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ، قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا يُوشِكُ أَنْ يَكُونَ، فَجَمَعْتُ عَلَىَّ ثِيَابِي فَصَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَشْرُبَةً لَهُ، فَاعْتَزَلَ فِيهَا، وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكِ أَلَمْ أَكُنْ حَذَّرْتُكِ هَذَا أَطَلَّقَكُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَتْ لاَ أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي الْمَشْرُبَةِ. فَخَرَجْتُ فَجِئْتُ إِلَى الْمِنْبَرِ فَإِذَا حَوْلَهُ رَهْطٌ يَبْكِي بَعْضُهُمْ، فَجَلَسْتُ مَعَهُمْ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ الْمَشْرُبَةَ الَّتِي فِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ لِغُلاَمٍ لَهُ أَسْوَدَ اسْتَأْذِنْ لِعُمَرَ. فَدَخَلَ الْغُلاَمُ فَكَلَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ فَقَالَ كَلَّمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَكَرْتُكَ لَهُ، فَصَمَتَ. فَانْصَرَفْتُ حَتَّى جَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ فَقُلْتُ لِلْغُلاَمِ اسْتَأْذِنْ لِعُمَرَ. فَدَخَلَ ثُمَّ رَجَعَ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ. فَرَجَعْتُ فَجَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ الْغُلاَمَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ. فَدَخَلَ ثُمَّ رَجَعَ إِلَىَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ. فَلَمَّا وَلَّيْتُ مُنْصَرِفًا ـ قَالَ ـ إِذَا الْغُلاَمُ يَدْعُونِي فَقَالَ قَدْ أَذِنَ لَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ يَا رَسُولَ اللَّهِ أَطَلَّقْتَ نِسَاءَكَ. فَرَفَعَ إِلَىَّ بَصَرَهُ فَقَالَ "" لاَ "". فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ. ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَنِي، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ إِذَا قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَنِي وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لَهَا لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ أَوْضَأَ مِنْكِ وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُرِيدُ عَائِشَةَ فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَبَسُّمَةً أُخْرَى، فَجَلَسْتُ حِينَ رَأَيْتُهُ تَبَسَّمَ، فَرَفَعْتُ بَصَرِي فِي بَيْتِهِ، فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِي بَيْتِهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ غَيْرَ أَهَبَةٍ ثَلاَثَةٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ، فَإِنَّ فَارِسًا وَالرُّومَ قَدْ وُسِّعَ عَلَيْهِمْ، وَأُعْطُوا الدُّنْيَا وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ. فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَكَانَ مُتَّكِئًا. فَقَالَ "" أَوَفِي هَذَا أَنْتَ يَا ابْنَ الْخَطَّابِ، إِنَّ أُولَئِكَ قَوْمٌ عُجِّلُوا طَيِّبَاتِهِمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا "". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي. فَاعْتَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ مِنْ أَجْلِ ذَلِكَ الْحَدِيثِ حِينَ أَفْشَتْهُ حَفْصَةُ إِلَى عَائِشَةَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً وَكَانَ قَالَ "" مَا أَنَا بِدَاخِلٍ عَلَيْهِنَّ شَهْرًا "". مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ حِينَ عَاتَبَهُ اللَّهُ، فَلَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَى عَائِشَةَ فَبَدَأَ بِهَا فَقَالَتْ لَهُ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ كُنْتَ قَدْ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا، وَإِنَّمَا أَصْبَحْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ لَيْلَةً أَعُدُّهَا عَدًّا. فَقَالَ "" الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ "". فَكَانَ ذَلِكَ الشَّهْرُ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً. قَالَتْ عَائِشَةُ ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَعَالَى آيَةَ التَّخَيُّرِ فَبَدَأَ بِي أَوَّلَ امْرَأَةٍ مِنْ نِسَائِهِ فَاخْتَرْتُهُ، ثُمَّ خَيَّرَ نِسَاءَهُ كُلَّهُنَّ فَقُلْنَ مِثْلَ مَا قَالَتْ عَائِشَةُ.
பாடம்: 84 ஒருவர் தம் மகளுக்கு, அவளுடைய கணவரின் நிலை குறித்து புத்திமதி சொல்வது
5191. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), ‘‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப் புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” (66:4) என்று கூறியிருந்தான்.

(ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர்களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) அவர்கள் (தமது இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் தண்ணீர்க் குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக்கடனை முடித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் அங்கத்தூய்மை செய்தார்கள்.

அப்போது நான் அன்னாரிடம், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்). ஏனெனில், உங்கள் உள்ளங்கள் (நேரிய வழியிலிருந்து சற்றே) பிறழ்ந்துவிட்டிருக்கின்றன’ என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?” என்று கேட்டேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (உங்களுக்குமா இது தெரியாமற்போயிற்று!) ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும்தான் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:

நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாருடன் வசித்துவந்தேன். இவர்கள் மதீனாவின் மேடான பகுதிகளில் ஒன்றில் குடியிருப்பவர்களாவர்.

நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுடன் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒருநாள் நபியவர்களுடன் இருப்பேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை நான் அவரிடம் வந்து தெரிவிப்பேன். அவர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தால் இதைப் போன்றே அவரும் செய்வார்.

குறைஷி குலத்தாராகிய நாங்கள் (மக்காவிலிருந்தபோது) பெண்களை மிஞ்சிவிடுபவர்களாக இருந்துவந்தோம். (பெண்களை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக்கூடியவர்களாக இருந்தனர். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்து பவர்களாக, தம்முடைய மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக்கூடியவர்களாக இருந்தனர்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைக் கையாளத் தொடங்கினர்.

(ஒருநாள்) நான் என் மனைவி (ஸைனப் பின்த் மழ்ஊன்) இடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். உடனே என் மனைவியும் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அதற்கு அவர், ‘‘நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (அன்னாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினார்.

இது என்னை அதிர்ச்சி அடையச் செய்யவே, ‘‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகி விட்டார்” என்று என் மனைவியிடம் கூறினேன்.

பிறகு உடை அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி, (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவராயிருந்த என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘‘ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருக்கிறார்களா?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘‘ஆம்” என்று பதிலளித்தார்.

நான், ‘‘அப்படியானால், நீ நஷ்டப்பட்டு விட்டாய்; இழப்புக்குள்ளாகிவிட்டாய். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து நீ அழிந்துபோய்விடுவாய் எனும் அச்சம் உனக்கில்லையா? நபி (ஸல்) அவர்களிடம் அதிகமாக(த் தேவைகளை)க் கேட்காதே. எதற்காகவும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் -ஆயிஷா- உன்னைவிட அழகு மிக்கவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்துபோய் (அவரைப்போல் நடந்து கொண்டு)விடாதே” என்று நான் (என் மகளுக்குப் புத்திமதி) கூறினேன்.

அந்தக் காலகட்டத்தில், (ஷாம் நாட்டில் வாழும்) ‘ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள்மீது போர் தொடுப்பதற்காக, (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின்றனர் என்று நாங்கள் ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம்.

(இவ்வாறிருக்க ஒருநாள்) என் அன்சாரித் தோழர் தமது முறைக்குரிய நாளில் (எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை மிக பலமாகத் தட்டினார். (கதவைத் திறக்க நான் சற்று தாமதித்தபோது) ‘‘அவர் (உமர்) இங்கே இருக்கிறாரா(?அல்லது வெளியில் சென்றுவிட்டாரா)?” என்று கேட்டார். (வழக்கத்திற்கு மாறாக அவர் கதவைத் தட்டியதால்) நான் கலக்கமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன்.

அவர், ‘‘இன்று மிகப் பெரிய சம்பவ மொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘‘என்ன அது? ஃகஸ்ஸான் குலத்தார் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். ‘‘இல்லை. அதைவிடப் பெரிய, அதைவிட அதிர்ச்சியான சம்பவம் நடந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்து விட்டார்கள்!” என்று கூறினார்.

நான், ‘‘(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டார். நான் இப்படி (கூடிய விரைவில்) நடக்கத் தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்” எனக் கூறிவிட்டு, உடை அணிந்து கொண்டு புறப்பட்டேன். நபி (ஸல்) அவர் களுடன் ஃபஜ்ர் தொழுகை தொழுதேன். (தொழுகை முடிந்த) உடனே நபி (ஸல்) அவர்கள் தமக்குரிய மாடியறைக்குச் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார்.

நான், ‘‘ஏன் அழுகிறாய்? இது குறித்து உன்னை நான் எச்சரித்திருக்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘எனக்கு (ஒன்றும்) தெரியாது. அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

உடனே நான் (அங்கிருந்து) புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தார் இருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் துக்கம் தாளாமல் நபியவர்கள் இருந்த மாடி அறைக்கு அருகே வந்தேன். (அங்கிருந்த) நபி (ஸல்) அவர்களுடைய கறுப்பு அடிமை (ரபாஹ் அவர்கள்) இடம், ‘‘உமருக்காக (நபியவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன் னேன்.

அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி விட்டுப் பிறகு வெளியே வந்து, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் பேசினேன். உங்களைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். ஆகவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கு அருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மீண்டும்) அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, ‘‘உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று (முன் போலவே) சொன்னார்.

நான் (மறுபடியும்) திரும்பிவந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்துகொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் (மூன்றாம் முறையாக) அந்த அடிமையிடம் சென்று, ‘‘உமருக்காக அனுமதி கேள்!” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் திரும்பி வந்து, ‘‘நான் உங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (பதிலேதும் சொல்லாமல்) மௌனமாக இருந்துவிட்டார்கள்”என்று கூறினார்.

நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘‘உங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துவிட்டார்கள்” என்று கூறினார். உடனே நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. ஆகவே, அவர்களது விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது.

அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். பிறகு நான் நின்றுகொண்டே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைத் தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன்.

நபியவர்கள் தமது பார்வையை என்னை நோக்கி உயர்த்தி, ‘‘இல்லை (மணவிலக்குச் செய்யவில்லை)” என்று கூறினார்கள். உடனே நான் ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன். (அவர்களது கோபத்தைக் குறைத்து) அவர்களைச் சாந்தப்படுத்த விரும்பி, நின்றபடியே (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினேன்:

அல்லாஹ்வின் தூதரே! நான் சொல்வதைச் சற்று கேளுங்கள்! குறைஷி குலத்தாராகிய நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது பெண்கள் ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரைக் கண்டோம். (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டனர்)” என்று சொன்னேன். (அதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

பிறகு நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கூறுவதைச் சற்று கேளுங்கள்! நான் ஹஃப்ஸாவிடம் சென்று, ‘உன் அண்டை வீட்டுக்காரர் -ஆயிஷா- உன்னைவிட அழகானவராகவும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துபோய் (அவரைப்போல நடந்து கொண்டு)விடாதே’ என்று கூறியதைச் சொன்னேன்.

(இதை நான் சொல்லக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் (அங்கு) அமர்ந்துகொண்டேன்.

பிறகு, நான் எனது பார்வையை உயர்த்தி அவர்களின் அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற பொருள் எதையும் நான் அவர்களின் அறையில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், ‘‘தங்கள் சமுதாயத்தாருக்கு (உலகச் செல்வங்களை) தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் (கிழக்கு) ரோமர்களுக்கும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர் களாக இருந்தும்- உலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன்.

(தலையணையில்) சாய்ந்து அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டவுடன்) நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, ‘‘கத்தாபின் புதல்வரே! நீங்கள் இன்னும் இந்த எண்ணத்தில்தான் இருக்கிறீர்களா? அவர்களின் (நற்செயல்களுக்கான) பிரதிபலன்கள் அனைத்தும் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன” என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டு இப்படிக் கேட்ட) எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா, ஆயிஷா அவர்களிடம் கூறி வெளிப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகி, இருபத்தொன்பது நாட்கள் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (66:1ஆவது வசனத்தின் மூலம்) கண்டித்தபோது தம் துணைவியர்மீது ஏற்பட்ட கடும் வருத்தத்தின் காரணத்தால் ‘‘(என் துணைவியரான) அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்லமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்கள்.

இருபத்தொன்பது நாட்கள் கழிந்து விட்டபோது, நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அதற்குப்பின் மற்றத் துணைவியரிடம் சென்றார்கள்.) அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பது இரவுகளைத்தானே கழித்திருக்கின்றீர்கள்! (ஒருநாள் முன்னதாக வந்துவிட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகின்றேனே!” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மாதம் என்பது (குறைந்தபட்சம்) இருபத்தொன்பது நாட்களும்தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாட்களாகவே இருந்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பிறகு (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு, அவர்கள் விரும்பினால் நபியுடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடும் (33:28 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு) தம் துணைவியரில் முதலாவதாக என்னிடமே (கூறத்) தொடங்கினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களை(ச் சேர்ந்து வாழும் வாழ்க்கையை)யே தேர்ந்தெடுத் தேன். பிறகு தம் துணைவியர் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் இதே உரிமையை வழங்கினார்கள். துணைவியர் அனைவரும் நான் சொன்னதைப் போன்றே சொல்லிவிட்டார்கள்.127

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 67
5192. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لاَ تَصُومُ الْمَرْأَةُ وَبَعْلُهَا شَاهِدٌ إِلاَّ بِإِذْنِهِ "".
பாடம்: 85 ஒரு பெண் தன் கணவரின் அனுமதியுடன்தான் கூடுதலான (நஃபில்) நோன்பு நோற்கலாம்.
5192. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது.128

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 67
5193. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ أَنْ تَجِيءَ لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ "".
பாடம்: 86 கணவனுடன் படுக்கையை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து ஒரு பெண் (தனியாக) இரவைக் கழித்தால்...?
5193. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்துவிட்டால், அவளைப் பொழுது விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.129


அத்தியாயம் : 67
5194. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا بَاتَتِ الْمَرْأَةُ مُهَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تَرْجِعَ "".
பாடம்: 86 கணவனுடன் படுக்கையை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து ஒரு பெண் (தனியாக) இரவைக் கழித்தால்...?
5194. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவருடன் படுக்கை யை(ப் பகிர்ந்துகொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும்வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 67